புதன், 29 மார்ச், 2017

ஊரார் வரைந்த ஓவியம்.


ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்குமான எதிர்வினைகளை எழுத்துகளில் புலப்படுத்தும் படைப்பாளிகள் அச்சத்தோடும் பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டிய சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.
சாதியம் புரையோடிப் போயிருக்கும் தமிழ்ச் சூழலில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் வாழ்வியலையும், ஒடுக்குமுறைக்கு எதிரான குரலையும், விடுதலை வேட்கையையும் எழுத்துகளில் வெளிப்படுத்துகிறபோது, அது சாதியக் கட்டுமானத்தை அசைத்துப் பார்ப்பதாகவே உயர்த்திக் கொண்ட சாதியவாதிகள் புரிந்து கொள்கின்றனர். சாதியப் பெருமிதங்கள் பேசிக் கொள்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் தமதாக்கிக் கொண்டிருக்கும் சாதிய நிறுவனங்கள், அதே சாதியத்தைக் குறித்துக் கேள்விகள் கேட்கிற போது பதறிப் போகிறது. சாதியத்தை அம்பலப்படுத்துகிற முயற்சிகளின் குரல்வளையை நெறிக்கவே முற்படுகிறது. அதன் ஒரு முயற்சி தான் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், துரை குணா ஆகியோர் மீதான தாக்குதல்கள். இவ்வகைப்பட்ட ஒடுக்குதல்களைக் கண்டு துவண்டு விடாமல், எழுத்துப் புலப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதற்கான சூழல்களை உருவாக்கித் தருவது சமூக சனநாயக சக்திகளின் கடமை.
இந்தக் கடமையைத் தம்மளவில் செயலாற்ற முனைந்திருக்கிறது தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை.
ஊரார் வரைந்த ஓவியம் எனும் ஒரு பெருங்கதையை எழுத்தில் வரைந்த ஒரு காரணத்திற்காகவே பொய் வழக்கு, வன்முறைத் தாக்குதல், கொலை மிரட்டல், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் எனப் பல வகைப்பட்ட ஒடுக்குமுறைகளையும் இன்றளவிலும் எதிர்கொண்டு வந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் படைப்பின் வழி் குரல் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளாத களப் படைப்பாளியாகத் திகழ்பவர் துரை குணா அவர்கள்.
துரை குணா அவர்களின் படைப்பின் ஊடான வாழ்க்கையைக் காட்சி மொழி வாயிலாகப் புலப்படுத்தி இருக்கிறது ஊரார் வரைந்த ஓவியம்.
எத்தனை ஒடுக்குமுறை வந்தாலும் படைப்பின் குரலை ஓங்கி ஒலிப்பதில் உறுதியாய் இருக்கும் துரை குணாவைப் பற்றிய இந்தப் படம், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் படைப்பின் வழி குரல் கொடுக்கும் அனைத்துப் படைப்பாளிகளின் குரலாயும் வெளிப்பட்டிருக்கிறது.
தோழர் விசாகன் நெறியாளுகையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் உயிர்மொழியை இராம்போ குமார் மிக நேர்த்தியாகப் புலப்படுத்தி இருக்கிறார். தோழர்கள் திருமலைக்குமார், இலட்சுமி, நறுமுகைதேவி தங்களின் பங்கேற்பைப் படத்தில் காட்டியுள்ளனர். சமூக மாற்றத்திற்கானப் பன்முகக் குரல்களை உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் தேவையை உணர்த்துவதோடு படம் முடிகிறது.
ஊரார் வரைந்த ஓவியம் கதை நிகழ்வைப் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். எனினும், வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய ஓர் படைப்பு தான். படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக