வெள்ளி, 6 அக்டோபர், 2023

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு நிலைத்திருப்பார்.

பெருந்துயர் இரங்கல்.

தமிழர் வரலாற்று வரைவியலை, உலகலாவிய ஆய்வுத்தேடல்களாலும் புதிய தரவுகளாலும் வலுப்படுத்தி உருவாக்கியதில் அய்யா ஒரிசா பாலு அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தமது வாழ்நாள் முழுதும் தமிழர் அடையாள மேன்மைக்கு அரும்பாடுபட்டவர்.

தமிழர் வரலாற்றைத் தேடிய பயணத்தையும் பெருந்தாகத்தையும் இவரளவுக்குக் கொண்டவர்கள் தற்போது யாருமே இல்லை. 

என் மீதும் என் எழுத்துகளின் மீதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். அவ்வப்போது எம்மை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்.

அய்யாவின் ஆய்வுகள் அனைத்தும் நூல்களாக வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தேன். அதற்கான முயற்சிகளிலும் அய்யா ஈடுபட்டிருந்தார். அண்மைக் காலத்திய உடல்நலக் குறைவு காரணமாக அதை உடனடியாகச் செய்திட முடியாமல் போயிற்று.

அய்யாவின் மறைவு தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு. வருங்காலத்தில் அய்யாவின் ஆய்வுகளை நூல்வடிவில் நிலைத்திருக்கச் செய்வதுதான் அய்யாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

அய்யாவின் மறைவு பெருந்துயரைத் தந்திருக்கிறது.

அய்யாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.அய்யாவுக்குப் புகழ் வணக்கம்.

இனி,

தமிழர் வரலாற்றில் அய்யா ஒரிசா பாலு அவர்கள் நிலைத்திருப்பார்.

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

06.10.2023.




ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்றைய சமூக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான புத்தகம் : மு.மகேந்திரபாபு


முனைவர் மகாராசன் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்கிற நூல், இன்றைய கல்வி முறையையும், தற்போதைய பாடத்திட்டம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கல்விக்கூடத்தினின்று எவ்வாறு அப்புறப்படுத்துகிறது என்பதையும், அதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறது.

அளவில் சிறிய புத்தகம் என்றாலும் இன்றைய சமூக நிலையைச் சீர்செய்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதை நாம் இவரது எழுத்துகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடமும், அரசிடமும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் இது.

இப்புத்தகத்தில் இரண்டே கட்டுரைகள். முதலாவது கட்டுரை ' மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள் - புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல்'. 2022 - 23 ஆம் கல்வியாண்டு இறுதித் தேர்வினை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத வரவில்லை. அதற்கான சமூக & அகக் காரணிகள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

தற்போதைய நடைமுறையில் இருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது மீத்திறன் மாணவர்களையும், சாராசரி மாணவர்களையும், மெல்லக் கற்கும் மாணவர்களையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா ? எனக் கேள்வி எழுப்புகிறார் கட்டுரை ஆசிரியர். 

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கட்டுரையாசிரியர் கூறுவது முற்றிலும் உண்மையே. இதைக்களைவதற்கு ஆரோக்கியமான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்.

*மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்வி சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்தல்.

* பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்தல்.

* 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரத்து செய்தல்.

*வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறையை ( Blue Print ) நடைமுறையை மீண்டும் கொண்டுவருதல்.

* ஆசிரியர்களுக்கு முழுமையான பணிப்பாதுகாப்பு வழங்குதல்.

* ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல்.

இது போன்று பல ஆரோக்கியமான ஆலோசனைகள் நூல் முழுமையும் தந்துள்ளார் கட்டுரையாளர் மகாராசன். 

'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்ற இரண்டாவது கட்டுரை, மாணவர்களின் இன்றைய நிலையை விரிவாகப் பேசுகிறது. பிஞ்சு நெஞ்சிலே சாதிய நஞ்சுடன் இன்றைய மாணவர்கள் வலம் வருவதையும் , அவர்களால் பாதிக்கப்படும் சக மாணவர்களைப் பற்றியும் ஆய்வு நோக்கில் பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார் கட்டுரையாசிரியர். 

சாதி தெரியாமல், மதம் தெரியாமல் பாடித்திரிந்த பறவைகளாக இருந்தது ஒரு காலத்தில் பள்ளிப்பருவம். ஆனால் இன்று பள்ளிப் பருவம் சிலருக்கு எவ்வாறு உள்ளது என்பதை சமீபத்தில் நிகழ்ந்த நாங்குநேரி துயரச் சம்பவத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறார். சாதிய அடையாளக் கயிறுகளுடன் வலம் வரும் மாணவர்களின் மனநிலையும், ஆசிரியர்கள் சிலரும், பெற்றோரும் மற்றும் புறச்சூழல்களும் எவ்வாறு உள்ளன என்பதை மிக நேர்த்தியாக, பாரபட்சமற்ற முறையில் தெளிவான கண்ணோட்டத்துடன் உண்மையை எடுத்துரைக்கிறார். வெறும் கற்பனைக் கட்டுரையாக இல்லாது களப்பணி செய்தவர்களின் அனுபவத்தையும், உண்மையையும் பதிவு செய்திருக்கிறார். மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்குப் பெற்றோர்கள் எவ்வாறு காரணம் என்பதையும் விளக்குகிறது இக்கட்டுரை. 

பெற்றோர், ஆசிரியர், மாணவர் என அனைவருக்குள்ளும் உள்ள தற்சார்பு சாதியக் கண்ணோட்டம் எவ்வளவு தீமையைத் தருகிறது என்பதை நாம் உணர முடிகிறது. கல்வியின் சிறப்புகளையும், எழுத்தாளர்கள் பூமணி, சோ.தர்மன் அவர்களின் அனுபவப் பகிர்வுகளையும் ஆவணப் படுத்தியுள்ளார்.

மிகக்குறுகிய காலத்தில் எழுதி வெளிவந்த நூலாயினும், பல்லாண்டுகளாகச் இச்சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய விசம் எவ்வாறு களையப்பட வேண்டும் என்பதை நாம் தெரியவும் தெளியவுமான அற்புதமான பொக்கிசமாக இந்நூல் அமைந்துள்ளது. இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.

கட்டுரையாளர்:
மு.மகேந்திர பாபு,
ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்,
பைந்தமிழ் வலையொளி.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

சனி, 30 செப்டம்பர், 2023

கல்வி அகச்சூழலும் சமூகப் புறச்சூழலும் குறித்த உரையாடலை முன்னெடுத்திருக்கும் நூல் : பி.பாலசுப்பிரமணியன்


தமிழ்ச்சமூகம், கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் ஏர் மகாராசன். தற்போது, தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இவரது அண்மை நூல் தமிழகத்தில் பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. 

நூலின் அணிந்துரையில் ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன், “தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும் கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலகட்டத்தில் செய்திருக்கிறார்” என்று குறிப்பிடுவது பெரும் கவனத்திற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் கண்முன்னே சீரழிவதை நினைத்தால் மனம் பதறுகிறது. பழங்காலத்தில் கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரியதாக இருந்தது. அனைத்துத் தரப்பினரும் கல்வி கற்க வந்த வரலாறு அண்மையிலானது. 

மீண்டும் விளிம்புநிலை மக்களைக் கல்விக்கூடங்களிலிருந்து புறந்தள்ளுகிற நவீனத் தீண்டாமைச் சூழல் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது கல்வி கற்று முன்னுக்கு வந்து விட வேண்டும் என்ற வேட்கையில் எண்ணற்ற மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். அவர்களுக்கு அரசும் சமூகமும் திருப்பியளிப்பது என்ன? என்ற கேள்வி உள்ளூர எழுகிறது.

சாதிய மனோபாவத்துடன் கையில் அரிவாளுடனும் மதுப்புட்டி, கூலிப், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுடனும் வலம் வருகின்ற மாணவர்களைச் சாலைகளில் பார்க்கின்ற போது ஒரு நிமிடம் மனம் கனத்துப் போகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, பொதுமையில்லாத சுமையான பாடத்திட்டம், கல்வியிருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகுதல், பெற்றோர்களின் பொறுப்பின்மை, வாக்குவங்கி அரசியலுக்காக எதையும் கண்டும் காணாமல் இருக்கும் அரசு, அரசியந்திரத்திற்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புரிதலற்ற ஊடகங்கள், மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் காட்டாத வெற்றுக் கோசமிடும் சமூக இயக்கங்கள், இளைஞர் மனதில் மனித விரோதப் போக்குகள் சார்ந்த கருத்தியல்களை நஞ்சூட்டும் சாதிய, மத நிறுவனங்கள், இயக்கங்கள், சங்கங்களின் செயல்பாடுகள் என யாரைக் குற்றம் சொல்வது? என்ற நிலையில் தான் எழுத்தாளர் மகாராசனின் இந்நூல் வெளிவந்திருக்கிறது. 

மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள்: புதியபாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல், மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து : சமூகப் புறச்சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் என இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

2022 – 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 11, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை, தேர்வு எழுதவில்லை என்ற செய்தி தமிழகம் முழுக்கப் பேசு பொருளானது. இதற்கு யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பி முதற்கட்டுரையில் விவாதிக்கிறார் மகாராசன்.

மாணவர்களின் குடும்பச்சூழலும் பொருளாதார நிலையும் அவர்களின் தீய நடவடிக்கைகளும் காரணமாக இருந்தாலும் மாணவர்களைக் கல்வியிலிருந்து அந்நியப்படுத்தும் புதியபாடத்திட்டம் முதன்மைக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

மீத்திறன் மாணவர்கள் (High ability learning Students), சராசரி மாணவர்கள் (Average level learning Students), மெல்லக் கற்கும் மாணவர்கள் (Slow learning Students) என்று கல்வி கற்கும் மாணவர்களைக் கல்வியாளர்கள் மூன்று வகைகளாகப் பிரித்துக் கூறுவர். இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ளப் பாடத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதல்ல. இது மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. பாடம் முழுமைக்கும் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையில் அவர்களால் பாடத்தை எளிதில் உள்வாங்க முடியவில்லை. ஆசிரியர்கள் மெனக்கெட்டும் முடியவில்லை. இதனால்தான் மெல்லக்கற்கும் மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை நிகழ்கிறது. 

இதன்காரணமாக அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சமூக உதிரிகளாக மாறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இதைப்பற்றி அரசும் சமூகமும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகக் கல்வித்துறை கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் உடனடியாகச் செய்திடல் வேண்டும். சீரமைப்பில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்தரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும். வினாத்தாள் மதிப்பெண் பகுப்புமுறை (Blueprint) புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். ஆசிரியர்களின் உள்ளக்குரலை மனம் திறந்து கேட்கவும் நியாயங்களை உணர்ந்து கொள்ளவும் கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இன்றைய கல்விச்சூழல் பற்றியும் கல்விசார் பிரச்சினைகள் குறித்தும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை முதற்கட்டுரையில் காத்திரமாக விவாதிக்கிறார்.

நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அவரது தங்கை சந்திரா செல்வி மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், நாங்குநேரி ஊரின் கள நிலவரம், தென்மாவட்டப் பள்ளிகளில் நிலவும் சாதியம், கிராமத்தில் உள்ள மூத்த இளைஞர்கள் மாணவர்களிடையே சாதிய நஞ்சை விதைத்தல், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் அரசியல் கட்சிகள், சாதிக்கட்சிகள், சமூக இயக்கங்கள், அரசு அதிகாரிகளின் அபத்த மனநிலை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

கொலைவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரிப் படிப்பிற்கான முழுச்செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கல்வி அமைச்சர் கூறுவது இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வாகும்? என்ற கேள்வியை எழுப்புகிறார். பாதிக்கப்பட்டவருக்கு அரசு இழப்பீடு கொடுப்பது மட்டும் சமூகத் தீர்வாகாது. 

பாதிக்கப்பட்டவர்கள் விளிம்புநிலையினர். அவர்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் சகமனிதர்களைப்போல நிம்மதியாக வாழ வழியமைத்துக் கொடுப்பது அரசின் கடமை என்று குறிப்பிடுகிறார்.  

ரோஹித்வெமுலா, சங்கர், இளவரசன், கோகுல்ராஜ், சின்னதுரை என்ற வரிசை நீள்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதலால் பல மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிகிறது.

திருவிழாக்கள், குருபூஜைகள், திருமணச் சுவரொட்டிகள், பதாகைகளில் சாதியமனோபாவம் தலைவிரித்தாடுகிறது. இதில் பெரும்பான்மை பங்கு கொள்பவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருப்பது பெரும் வருத்தத்திற்குரியதாகும். கயிறு, அரிவாள், டீசர்ட் என சாதிய அடையாளம் மாறிக்கொண்டேயிருக்கிறது. 

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றாலும் சாதிய மனோநிலை இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது. 

சாதிக்கட்சிகளும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இளைஞர்களிடையே சமத்துவத்தைப் போதிப்பதில்லை. மாறாக, தேசியத்தலைவர்களைச் சாதித்தலைவர்களாக அடையாளப்படுத்தல், இடஒதுக்கீடு பற்றித் தவறான புரிதலை ஏற்படுத்துதல், மாமேதை அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவர் என அடையாளப்படுத்தாமை, போதைப்பொருள் பயன்படுத்துதலைக் கண்டிக்காமை போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கிமானதல்ல. காவல்துறை, வழக்கறிஞர், நீதித்துறையினர் இணைந்து சமூக உதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பெரும் அவலத்திற்குரியதாகும்.

தாழ்ந்த சாதி, உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்கசாதி, இடைநிலைச்சாதி ஆகிய சொல்லாடல்கள் பிழையானவை, செயற்கையானவை. மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படுத்தப்பட்ட என்ற சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. சமகாலத்தில் இந்தச் சொற்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல என்ற கருத்தும் கற்றவர்கள் மத்தியில் நிலவுகிறது. 

அட்டவணைச் சாதியினர், பட்டியலினச் சாதியினர் என்ற சொற்களைப் பயன்படுத்துவதுதான் சாியானது எனக்கருதுபவரகள் உண்டு என்கிறார் மகாராசன்.  

பெற்றோர்களின் பொறுப்பின்மையும் மாணவர்கள் சீரழிவதற்குக் காரணமாக அமைகிறது. இன்னும் சிலர் மாணவர்கள் கெட்டுப் போவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்ற பொதுப்புத்தியுடன் வலம் வருகின்றனர். இது தவறான பார்வை என்கிறார் மகாராசன். 

இன்று ஆசிரியர்களுக்குரிய ஆகப்பெரிய அதிகாரம் என்பது தவறிழைக்கும் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் அதிகாரிகளிடமும் மன்னிப்புக் கேட்பது மட்டுமே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தமிழகப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை உணரமுடிகிறது.

சமகாலச் சூழலில் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். பெற்றோர் கும்பலாகப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களைத் தாக்கும் வன்ம நிகழ்வுகளை அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் காணப்படும் சாதிய மனோபாவம் மாணவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. இது போன்ற ஆசிரியர்களைக் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டும். குறிப்பாக, மாநில, தேசிய அளவிலான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட வேண்டும்.

அறம்சார்ந்த சமூகக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் தேவையானதாக இருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு அறுபடாமல் இருக்க இத்தகைய கல்வி அவசியமானதாகும்.

இறுதியாக, “எல்லாரும் சமம்தானே டீச்சர்” எனச் சாதியத்தை அடித்து நொறுக்கி ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பித்த முனீஸ்வரனை நூலில் பாராட்டியது மட்டுமல்லாமல் இந்த நூலை அவருக்கே தளுகையாக்கியிருக்கிறார் நூலாசிரியர். ஆக, மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறும் பேராபத்தைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்தாக வேண்டும். இது ஒவ்வொரு சமூக மனிதரின் உடனடிக் கடமையாகும் என்ற சிந்தனையை நூலில் விதைக்கிறார். 

மாணவர், பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசியலாளர்கள், சிந்தனையாளர்கள் இணைந்து கைகோர்த்து மாணவர்களின் வாழ்வை உயர்த்திட வேண்டும் என்பதை மையநோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது எனலாம். இந்நூலை அனைத்துத் தரப்பினரும் வாங்கிப் படித்து ஒரு பெரும் உரையாடலை, விவாதத்தை எழுப்பினால் சமூகம் ஆரோக்கியம் பெறும் என நம்புகிறேன். 

கட்டுரையாளர்: 
பி.பாலசுப்பிரமணியன்,
பேராசிரியர் மற்றும் ஊடகவியலாளர்.
தொடர்புக்கு: uyirneyan@gmail.com

நன்றி:
தி இந்து தமிழ் திசை நாளிதழ்,
30.09.2023.

*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


புதன், 27 செப்டம்பர், 2023

சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கிச் சிந்திக்க வைக்கும் நூல்: தேனி சுந்தர்


ஏர் மகாராசன் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூல் குறித்து..

நாங்குநேரி சம்பவம் தமிழ்ச் சமூகத்தை மிகவும் உலுக்கிய ஒன்று. காரணம், பாதிக்கப் பட்டவர்கள் குழந்தைகள். பாதிப்பை ஏற்படுத்தியவர்களும் குழந்தைகள் தான்..! ஆக, பாதிக்கப் பட்டவர்கள் இரு தரப்பினரும் தான். 


சின்னத் துரையும் சந்திரா செல்வியும் சக மாணவர்களால் பாதிக்கப் பட்டார்கள். எனில் சக நண்பனையே கொல்லத் துணிகிற அந்த சாதிய மனோவியாதிக்கு உள்ளான அவர்கள் யாரால் பாதிக்கப் பட்டவர்கள் என்பதையே இந்நூல் மிக விரிவாக பேசுகிறது.


ஒடுக்கப் பட்ட மக்கள் தங்கள் துயர வாழ்வில் இருந்து மீள்வதற்கு, உயர்வதற்கு ஒரே துடுப்பாக, துருப்பாக இருக்கும் கல்வி இன்று என்னவாக மாறி இருக்கிறது. அரசின் திட்டங்கள் யாவும் அனைவருக்கும் என்றில்லாமல், எவ்வாறு இலக்கு சார் திட்டங்களாக மாறி வருகின்றனவோ அதுபோல கல்வியும் இலக்கு சார் ஒன்றாக மாறி இருக்கிறது. அதன் இலக்கு "எலைட்" மட்டுமாக இருக்கிறது. சாமானிய வீடுகளில் இருந்து, பள்ளிக்குள் முதல் முறையாக நுழைந்து, கல்வியில் மெல்ல மலரும் குழந்தைகளாக இருப்போரை அது கவனத்தில் கொள்ள மறுக்கிறது. அவர்கள் அவர்களாகவே கல்வியில் இருந்து வெளியேற ஏதுவான சூழலை திட்டமிட்டு உருவாக்கும் ஒன்றாக செயல்படுத்தப் படுகிறது.


யாரும் விரும்பித் தங்களைத் தாங்களே தாழ்த்தி கொள்ளவில்லை. எனவே தாழ்ந்த சாதியினர் அல்ல, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதி. உலகம் உருவான போதே, ஆதி காலத்தில் இருந்து பிறக்கும் போதே உயர்ந்த சாதி அல்ல. பல்வேறு சமூகச் சூழல்களை பயன்படுத்தி தங்களைத் தாங்களே "உயர்த்திக் கொண்ட" சாதியினர் தான். எனில் உயர்சாதி, மேல்சாதி, ஆதிக்க சாதி என்றும் கீழ்சாதி, இழிசாதி, தாழ்ந்த சாதி என்றும் பயன்படுத்தப் படும் சொற்பிரயோகம் சரியா? அந்தந்த சாதியினர் சொல்லிக் கொள்வது தாண்டி, பொது சமூகமும் ஊடகமும் அப்படியே குறிப்பிடுவது நியாயமா? என்கிறார்.


200 ஏக்கர் நிலத்தை நீர் இருந்தும் பாசானம் இல்லாமல் தரிசாக போட்டு வைக்கும் சாதியை என்ன சொல்வது??


ஊரில், தெருவில், குடும்பத்தில், ஊர்த் திருவிழாக்களில், அரசியலில், பள்ளியில், கல்லூரியில் சாதி எங்கு இல்லாமல் இருக்கிறது?


பெற்றோர், ஆசிரியர், பேராசிரியர், அரசியல் அமைப்புக்கள், தலைவர்கள் என எல்லா மட்டத்திலும் ஊடுருவி இருக்கும் சாதியை, சாதிய உணர்வை எவ்வாறு களைவது??


கயிறு, பாசி, பொட்டு என சுயசாதி அடையாளங்கள், சுயசாதி பெருமிதங்கள் தான் சுயசாதி அணிதிரட்டலுக்கான அச்சாணி, இந்த அணி திரட்டல்கள் தான் பிற சாதியினர் மீதான அத்துமீறல்கள், சீண்டல்கள், பாலியல் துன்புறுத்தல், வன்முறை, கொலைவெறி தாக்குதல் என அவர்களை வழிநடத்துகிறது என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்??


சாதிய அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் செல்வாக்கு செலுத்தும் சூழலில் கொடூரமான சாதிய தாக்குதல்களை கூட உறுதியாக, தைரியமாக கண்டிக்க மறுக்கும் அரசியல் கட்சிகளை நாம் நிராகரிக்க வேண்டாமா??


வன்முறையில் ஈடுபட்டவர்கள் குழந்தைகள் என்றாலும் எது அவர்களுக்கு சரியான தண்டனையாக இருக்கும்..? எது மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும்??


பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டுமா? அது போதுமா? நீதி வேண்டுமா? எனில் எது அவர்களுக்கான நீதி??


பள்ளியில் என்ன செய்ய வேண்டும்? பாடத்திட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? பாடத் திட்டக் குழுவில் என்ன செய்ய வேண்டும்? இதுவரை யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாரெல்லாம் இருக்க வேண்டும்??


இவை அத்தனைக்கும் பிறப்பிடமாக இருக்கின்ற சமூகத்தில் என்ன செய்ய வேண்டும்??


இந்தப் பிரச்சினையின் ஊடாக, பல்வேறு கேள்விகளை எழுப்பி, எண்ணங்களைத்  தூண்டி, நம்மை ஒரு சமத்துவ சமூகத்திற்கான பாதை நோக்கி சிந்திக்க வைக்கிறது இந்நூல்..


அரசு நாங்குநேரி சம்பவம் தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது. அது போல எங்கள் ஊர் ஏர் மகாராசன் தனக்குத் தானே ஒரு நபர் குழுவை அமைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கோணங்களிலும் ஆராய்ந்து சமூகத்தின் முன் வைத்துள்ள "ஏர் மகாராசன் குழு அறிக்கை" தான் இது..!


எழுத்தாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..


கட்டுரையாளர்:

தேனி சுந்தர்,

எழுத்தாளர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்.

டுஜக் டுஜக் ஒரு அப்பாவின் டைரி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

திலீபன்: விடுதலைப்பசி உணர்த்திய பேரறம் - மகாராசன்


தமிழ் இனத்தின் 
விடுதலைப் பசிக்குத்
தன்னுயிரை
மெல்ல மெல்லத் 
தின்னக்கொடுத்தவன்.

ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்தவன்.

அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
திலீபன்.

தமிழர் தாயகத்தின் 
விடுதலைப் பசி உணர்த்திய பேரறம் திலீபம்.

திலீபனின்
தாயகப் பசிதான்
இன்னும் அடங்கவில்லை.

ஏர் மகாராசன்


சனி, 23 செப்டம்பர், 2023

இந்தியக் கல்வியகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிற சாதிய மதவாதப் பிற்போக்குத்தனங்களின் நிலைகளைச் சுட்டும் நூல்: கு.தமிழ்வேந்தன்


கல்வியாளர் முனைவர் மகாராசன் அவர்கள் எழுதிய "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்ற புத்தகம், கல்வி நிலையங்களில் நடந்துகொண்டிருக்கிற அவலங்களையும், வகுப்பறைக்குள் மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் போராசிரியர்களும் இறுகப் பற்றியுள்ள சாதிய அபிமானங்களையும், இன்றைய நவீன சமூக அகப் புறச் சூழலிருந்து அவற்றை எப்படி மழுங்கடிக்க வேண்டும் என்ற கருத்தாங்களையும் நிகழ்கால இரத்தக்கறை படிந்த சம்பவங்களோடு எடுத்துரைக்கிறார். 


லும்பர் கல்ச்சர் என்கிற உதிரியான மாணவர் கலாச்சார நிகழ்வுகள் தற்கால மாணவர்களிடையே அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் எனப்படும் பள்ளி மாணவ மாணவிகள் கூலிப்(புகையிலை), கஞ்சா, மது என எல்லா தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி இருக்கின்றனர். நவீனத் தொழில் நுட்பங்களான முகநூல், சுட்டுரை, படவரி (Instagram) என ஏராளமான மின்னணுச் சாதனங்களில் வருங்கால இளைய தலைமுறை அதிலே மூழ்கிக் கிடப்பதற்கான பங்களிப்பை அதிகமாக வழங்கி வருகிறது.   

ஏற்கனவே உயர்கல்வி படித்து முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்று கிடைத்த வேலைகளுக்குச் செல்லும் சூழலுக்குப் பலர் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அதனோடு அதிக பாடச்சுமையால் மாணவர்கள் பள்ளியை விட்டு இடைநிற்றலுக்குப் பலர் ஆளாகின்றனர். மாறிக்கொண்டிருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்விகளும் மாற்றமாக வேண்டும் என்பது உண்மை. ஆனால், சமூகக் கட்டமைப்பில் நிலவக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டும், பொருளாதார விளிம்புநிலைக் குடும்பங்களையும் முதல் தலைமுறை மாணவர்களையும் கணக்கில் எடுத்தும் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய நிலைப்பாட்டைப் புரியாமல் அதிக பாடப்பொருண்மைகளைக் கல்வி வல்லுநர்கள் திணிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், படிக்கும் மாணவர்களோடு ஒப்பிட்டுப் பல மொழிகள், நடனம், பாட்டு, தற்காப்புக்கலைகள் என காலை, மாலை, இரவெனத் தொடர்ச்சியாக இயங்கும் இயந்திரம் போன்று இன்றைய மாணவர்களை இருக்க வைக்கப் பல பெற்றோர்களும் விரும்புகின்றனர்.

மாணவர்களின் வாசிப்புத் திறனும் கூர்த்த கவனிப்பும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடுகள் நிறைய இருக்கும். அத்தகைய வேறுபாடுகள் நிறைந்த மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும், அனைத்துச் சமூகப் பிரதிநிதிகளும் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் இடம் பெற வேண்டும் எனவும் வற்புறுத்துகிறார் நூலாசிரியர்.

சக மாணவனோடு நெருக்கமாகப் பழகிய ஒருவனை, சாதியக் கண்ணோட்டத்தோடு வீடு புகுந்து வெட்டும் கொடூர மனநிலைக்கு மடைமாற்றிய பொறுப்பும் தங்களை உயர்த்திக்கொண்ட சாதி மனக்கும்பலுக்கு உள்ளது எனவும் சுட்டிக் காட்டுகிறார். 

நாங்குநேரியில் நடந்தது சாதிவெறி மட்டுமில்லை. சமூக அடாவடித்தனமும் கட்டபஞ்சாயத்துகளும் அதிகமாக அங்கு கோலோச்சுகிறது. அதனால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பலர் தங்கள் குடியிருப்பை விட்டு வேறொரு ஊருக்கு இடம் பெயர்ந்தும் இருக்கின்றனர். 

மாணவர்கள் சாதிக் குழுக்களாக ஒன்று சேர்ந்து பிறர் சமூக மாணவனை சாதி சொல்லிச் திட்டுவது,தாக்குவது, பள்ளிச் சுவற்றில் பிற சமூகங்ளை இழிவாக எழுதி வைப்பது, கூடவே ஆசிரியர்களும் தன்சாதி ஆசிரியர்களோடு சேர்ந்து கொண்டு பிறரை ஒதுக்கி வைக்கும் சாதிய வன்மம் ஆசிரியர்களிடமும் இருக்கிறது என்கிறார்.

அம்பேத்கர் அவர்கள் படிக்கவே கூடாது என்கிற கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் சிலரின் உதவிகளால் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தார். அவரே கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தியோடு அதனைச் சட்டமாக்கிக் கிடைக்க வழிவகையும் செய்தவர். ஆனால் இன்று அவரின் சிலைகள் உடைக்கப்படுவதும் சிலையின் வர்ணத்தை மாற்றுவதுமாக நடைபெறும் ஆபத்துப் போக்கு நிகழ்கிறது. அவரை குறுகிய சாதி வட்டத்துக்குள் அடைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கும் குறுக்குப் புத்தியும் நடைபெற்று வருகிறது. 

வடமாவட்டங்களில் அம்பேத்கர் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டிருக்கும். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அவரின் சிலை அரிதான ஒன்றாக இருக்கிறது. எந்த இயக்கங்களால் அவரின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ அவர்களே முற்றிலும் புறந்தள்ளும் சூழல் நிகழ்ந்தேறி வருகிறது. இதனையெல்லாம் அழகாகச் சுட்டிக்காட்டி உள்ளார். 

இணையத்தில் உலவும் காணொலி ஒன்றில் அம்பேத்கர் அவர்களை "டாக்டர் அம்பேத்கர்" என்று சொல்கிறீர்களே அவருக்கு ஊசி போடர் தெரியுமா? மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியுமா என்று கல்வியின் புரிதல் இல்லாமல் பேசும் சூழல் அரசியல் அதிகாரத்தினால் நஞ்சை விதைக்கும் போக்கு நன்றாக அரங்கேறி இருக்கிறது.

கடந்த காலங்களில் ஐஐடி (IIT) நிறுவனங்களில் நிலவிய சாதி வெறியாட்டம் தற்கொலைக்குத் தூண்டி மாணவர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு.

கயிறு அரசியல், கேளிக்கை சினிமா, இணையதள சாதிச் சண்டை, திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் தென்படும் பிளக்ஸ், இரு சக்கர வாகனம், ஆட்டோக்களில் எழுதப்படும் ஆண்டசாதி உரையாடல் இவையெல்லாம் மூர்க்கத்தனமான நஞ்சை விதைத்து, பிறரிடம் சராசரியாகப் பேசக்கூட முடியாமல் செய்ய வைக்கிறது. அரசியல் அதிகாரத் துணையால் நடைபெறும் இத்தகைய அடாவடித்தனங்களை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் வேலையைச் செய்வது அனைவரின் கடமையாகும்.

மிக மிகக் குறுகிய காலத்தில் எதிர்வினையாற்றி இந்நூலைக் கொண்டு வந்தற்கு வாழ்த்துகளும் பேரன்பும் தோழர்.


கட்டுரையாளர்:
கு.தமிழ்வேந்தன்
கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர் : மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள் : 72
விலை : உரூ 90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம்,    
தொடர்புக்கு : 99948 80005.


மாணவர்கள் பிம்பச் சிறையிலிருந்து விடுபட உதவும் திறவுகோல் நூல்: அறிவழகன்


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைவிட அதிவேகமாகவே தொற்றிப் பரவிவருகிறது சாதியம். குறியீடுகளின் ஊடே, வன்மத்தில் ஊடாடி வரும் வன்முறையின் கோரமுகங்கள் எங்கிருந்து ஊற்றுக்கண்ணாகச் சுரக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கள ஆய்வு செய்தும், தமது ஆசிரியர் பணியில் கிடைத்த மாணவர்களின் உளவியல் சிக்கல்களையும் ஆய்வு செய்தும், சமூகத்தில் மாணவர்களின் விட்டேத்தி நிலைகளையும் பல விடயங்களையும் நம்மிடம் தந்து விசனப்படுத்தி விடுகிறது மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல்.

தக்க நேரத்தில் தக்க ஆதாரங்களையும், பள்ளிகளின் வகுப்பறைகளில் படிந்தபடி கிடக்கும் சாதியவெறியில், அறமற்றவர்களால் விரையம் செய்யபட்ட அப்பாவி மாணவர்களின் ரத்தம் படிந்த புத்தகங்களையும் நம்மிடம் நிழலாடச் செய்கிறார் ஆசிரியர்.

நாங்குநேரியில் வாழ்ந்த தலித் மக்களின் விவசாய நிலங்கள் தரிசாக்கப்பட்டு இதர சமூகத்திடம் கைமாற்றப்பட்ட தாட்டிய அரசியலைத் துல்லியமாகவும் ஆதாரத்துடனும் காட்டிச் செல்கிறார்.

சாலைகள் தோறும் சாதியக் குறியீடுகள், திரைபடங்களின் பஞ்ச் டயலாக் பேனர்கள், மாணவர்கள் கையில் கயிறு அரசியல் என்று பல நோக்கில் மாணவர்களைக் களிமண் பொம்மைகளாக வனையப்படும் ஒவ்வொன்றையும் எவ்விதமான சமரசமும் அற்று இந்நூல் பேசுகிறது. சமூக அக்கறையோடு, அதைகாட்டிலும் காலத்தையறிந்து வெளிவந்தது என்பதற்காகவும் கூடுதல் பாராட்டுகள்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்தை முன்கூட்டியே சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பள்ளிகள் தோறும் மாணவர்கள் வாசித்தால் பிம்பச் சிறையில் இருந்து விடுபடவும் இது திறவுகோலாகும் என்பது உண்மை.

வாழ்க ஆசிரியர் ஏர் மகாராசன்.

நன்றியும் பேரன்பும்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அறிவழகன்,
கவிஞர் மற்றும் சிறுகதை ஆசிரியர்.

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


ஆசிரியச் சமூகம் வாசிக்க வேண்டிய நூல்: திலகர்


நீண்ட நெடிய நாள்களுக்குப் பின் ஒரே அமர்வில் உட்கார்ந்து வாசித்தது, அண்ணன் ஏர் மகாராசன் படைத்த "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" நூலாகும்.

சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும், குறிப்பாகச் சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியர் சமூகம் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதப் படைப்பு. 

எங்கே தவறுகிறோம்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ் மண்ணில் சாதீயப் படிநிலை ஏன்? 

கல்வியை எப்படி எல்லாம் வணிகமயமாக்கியுள்ளோம்? அரசுகள் வீதி வீதிக்கு மதுக் கடைகளைத் திறந்து வைத்து விற்றுக் கொண்டு, யாரை ஏமாற்ற போதைப் பொருளை ஒழிக்கிறோம் என வெற்று விளம்பரம் செய்கிறது? 

மாணவர் - ஆசிரியர்கள் என்ற மரியாதையை, பயத்தைப் போக்கியது யார்? 

தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்பதன் மூலம் அறம் சார்ந்த வாழ்வு கற்றுக் கொள்வர் என அதனை நீக்கியது யார்? 

மாணவர்கள் கல்வி கற்று முடித்த உடன், கண்டிப்பாகப் பணம் சம்பாத்தித்துக் கொடுக்கும் ஏடிஎம் ஆக வேண்டும் என வாஞ்சிக்கும் பெற்றோர், அறம் சார்ந்த கல்வி முறை இல்லாமல் எப்படிச் சாதியை, தான்தோன்றித் தனமான வாழ்வை (சுயநலமான) வாழ இயலும்? 

அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் அதிகரிக்க யாரைக் குற்றம் சொல்லுவீர்கள்? 

மாணவர்களை நல் வழிப்படுத்துவதில் பொது சமூகத்தின் பங்கு என்ன? 

அனைவருக்குமான தலைவர் அம்பேத்கரை ஒரு சாரார்க்கு என ஒதுக்கியது ஏன்? அது யார்?

ஆசிரியர் மாணவர்களிடம் கெஞ்சும் நிலையை ஏற்படுத்தியது யார்? என எண்ணற்ற கேள்விகளையும் நம்முள்ளே கடத்தி, இவற்றிற்கான விடையை எப்படி? எப்போது பேசு பொருளாக மாற்றி விடை காண இருக்கிறோம்? 

நாங்குநேரி சம்பவத்தைக் கடந்து செல்லாமல், எதிர் வரும் - கல்வி கற்க வரும் சமூகத்தை எப்படிப் பாதுகாக்க இருக்கிறோம்? என்ற கேள்வியோடு, இறுதியாக, சாதீயக் கண்ணோட்டத்தை ஒழிக்க சமூகம் முன் வராமல், வெறும் சட்டங்களை இயற்றுவதோ - ஏழை / ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனிக் கல்வி நிலையங்கள் என்பதோ மட்டும் தீர்வு ஆகாது. மக்களின் பொது நிலையை மாற்ற, மதுக் கடைகளை மூடுவோம். புதிய சமூகம் படைப்போம்.

கட்டுரையாளர்:
முனைவர் செ.இரா.திலகர்,
இணைப் பேராசிரியர்,
கற்பகம் பொறியல் கல்லூரி,
சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்: எழுத்தாளர் சோ.தர்மன்


சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திருமிகு சோ.தர்மன் அவர்கள், அண்மையில் நான் எழுதிய மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலைக் குறித்துத் தமது முகநூலில் எழுதிய அறிமுகக் குறிப்பு. அய்யா அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்.

"தம்பி ஏர் மகாராசன் எழுதியுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" என்கிற சிறு புத்தகம் நேற்று ஆதி பதிப்பகத்தால் பதிவுத் தபாலில் வந்து சேர்ந்தது.

இன்றைய மாணவர்கள், குறிப்பாகப் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இன்றைய நிலையை ஆழமாகவும் விரிவாகவும் போலித்தனம் இல்லாமலும் ஆராய்கிறது.

நாங்குனேரி மாணவர்கள் வெட்டப்பட்டதின் பின்னணியை வெகு நுட்பமாக நம் முன் பேசுகிறது. முற்போக்காளர்களின் சப்பைக் கட்டுக் காரணங்களை நிராகரித்து உண்மையைப் பேசுகிறது.

ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். அரசின் கவனம் பெற வேண்டிய புத்தகம். எழுபது பக்கங்கள் மட்டுமே உள்ள மிகச் சிறிய புத்தகம்."

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க.
ஆதி பதிப்பகம்
திருவண்ணாமலை
விலை:90 ரூபாய்.
தொலை பேசி:9159933990.


சமூக வெளிச்சத்திற்கான திறப்பு நூல்: யாழ் தண்விகா


எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்?

இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்று கூறிவிடலாம் இரு கட்டுரைகளை. கல்வித்துறை, மாணவர்கள், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே மலிந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும், அச்சீர்கேடுகளைக் களைவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளையும் கூறும் கட்டுரைகள் இவை. இரண்டும் கல்வித்துறையோடு நேரடித் தொடர்பு உடையவை என்ற வகையில் கல்வி கற்ற அனைவரும் அல்லது சமூகம் உருப்பட நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் புத்தகம். 

முதல் கட்டுரை 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அது எதனால் என்பது குறித்துப் பேசுகிறது. முதல் பத்தியிலேயே இத்தகவல் சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாக இருந்தது என்றிருக்கிறது. ஆம். இருந்தது. கடந்தகாலத்தில் நடந்த ஒன்று, அதிலிருந்து பாடம் கற்று அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க என்னென்ன திட்டங்கள் கல்வித்துறையில் உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்து அலசுகிறது. 

மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், மீத்திறன் வாய்ந்த கற்போர் இவர்கள் அனைவருக்குமான பாடத்திட்டமாக இருக்கவேண்டிய கல்வி, மீத்திறன் பெற்றவர்களுக்கான பாடத்திட்டமாகவே இருக்கிறது. அதையும் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை. மீத்திறன் பெற்றவர்களே பாடத்திட்டத்தைப் பார்த்து மலைக்குமாறு இருக்கிறது. அப்படியானால் சராசரியாகக் கற்போர் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டாம். தொடர்ந்து மூன்று வருட பொதுத் தேர்வு முறை. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் உள்ள பொதுத் தேர்வு முறையால் என்ன சிக்கல் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. 

மாணவர்களை அடிமாட்டுத்தனமாக, பாடம் தவிர்த்த செயல்பாடுகள் எதுவுமற்ற இயந்திரத் தன்மையுடன் வார்த்து இக்கல்விமுறை எதைச் சாதிக்கப் போகிறது என்று பார்த்தால் மெல்லக் கற்கும் மாணவர்கள் இத்துயரிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்கள். அதுதான் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றனவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இதனைக் களைய மேற்கண்ட மூன்று பிரிவினருக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், ஆசிரியர்களிடம் கல்வித்துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்துப் பேசி தீர்வுகாண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் பேசுகிறது முதல் கட்டுரை. 

இரண்டாம் கட்டுரை, சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பற்றியும், பகுத்தறிவு வாய்ந்த மனித சமூகம் செல்லும் இழிபாதை எப்படி படிப்படியாக பரிமாணம் பெற்று இன்று வன்முறையின் உச்சத்தில் நிற்கிறது என்பதையும், அதற்குக் காரணமாகத் திகழும் கூறுகள் எவையெவை என்பது பற்றியும், அதனை மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் முன்வைக்கிறது. மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவிக்கும் களங்களாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாறி வருகின்றன என்பது கண்கூடான உண்மை. 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வந்திருந்தாலும் அவை பல்வேறு சமூகக் காரணிகளால் திசை திருப்பப்பட்டுவிட்டன என்கிறார் கட்டுரையாளர். அதே சமயம் நாங்குநேரியில் நடந்த கொலைவெறிச் சம்பவம் சமூகத்தால் பேசப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னரே, நாங்குநேரி சம்பவத்தின் இரத்தம் காயும் முன்னரே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் சமூகத்தின் முன்னால் தான் என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே பார்க்க நேரிடுகிறது. 

சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி இருவரும் பள்ளி மாணவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்களும் மாணவர்கள். அவர்கள் உயர்த்தப்பட்ட சாதியினர். தாக்கியவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தத்து. இது வெறுமனே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த ஒன்றல்ல. 

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல காலங்களாக ஊறிக் கிடந்த சாதியானது, சமூகங்களால் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்கள் மூலமாக வெளிப்படையாகவே இன்று தனது முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், பெரியவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதைவிட சாதிச் சங்கங்களில்தான் திரண்டிருக்கிறார்களோ என்கிற அளவுக்கு சாதியக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. இவற்றிற்கு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அனைவரும் பங்கேற்கிறார்கள். இதனை அவ்வவரின் குடும்பத்தினரே சாதிப் பெருமிதமாக நினைக்கிறார்கள். 

இதனை பல்வேறு தரவுகளின்மூலமாக கட்டுரையாளர் கூறும்பொழுது சாதியானது சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம், இனி உண்டாக்கப்போகும் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்குகிறது. சாதி மற்றும் மதத்தால் உண்டாகும் வன்முறைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட சாதிகள் என இருபுறம் வாயிலாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடம் இன்று பரவலாகி வரும் அடாவடித் தாட்டியங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைச் சீண்டல்கள் என நீளும் பட்டியலை கட்டுரையாளர் கூறுகிறார். 

இவை ஆங்காங்கே நாம் கண்ட, கேட்ட பட்டியலின் தொகுப்புதானே ஒழிய மிகையல்ல. இவற்றை மாற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம். கல்வித்துறை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம் சார் வகுப்புகளை நடத்தவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். இட ஒதுக்கீட்டைக் கூட தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்களால் அம்பேத்கரைப் பற்றி எப்படி உயர்வாகப் பேசிவிடமுடியும் என தனது ஆதங்கங்களையும் கட்டுரையாளர் கூறியுள்ளார். 

இன்னும் பல தகவல்கள். வெறும் தரவாக மட்டுமல்லாமல் தவறான பாதையில் செல்லும் இந்தச் சமூகத்தின், மாணவர்களின், ஆசிரியர்களின், கல்வித்துறையின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூக உதிரிகளாக மாணவர்கள் மாறுவதற்கு முன்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவற்றை அறிந்து களைய சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதரும், கல்வித்துறை தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. வாசியுங்கள். சமூகத்தின் மீது விழும் நல்ல வெளிச்சத்திற்கு திறப்பாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றமில்லை.

வாழ்த்துகள் தோழர் ஏர் மகாராசன்.

கட்டுரையாளர்:
யாழ் தண்விகா,
கவிஞர் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
பெரியகுளம்.

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


சனி, 16 செப்டம்பர், 2023

கல்விக் களத்தில் நிகழும் நுண் அரசியல் பின்புலத்தை விவரிக்கும் நூல்: தமிழ் நேயன் செ.



மாணவர் சமூகம் குறித்துப் பேசப்படாத பகுதியை மிகவும் எளிமையாகவும், சமூக அக்கறையோடும் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

மாறிவரும் உலகில் கல்விச்சூழல் எதை நோக்கிச் செல்கிறது? கல்வி, சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும், அதற்கான செயல்பாட்டுத் திட்டம் குறித்தும் அலசுகிறார். கல்விக் களத்தில் நிகழும் அரசியல் குறித்தும், பாடத்திட்டங்கள் வரையறைப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விரிவாக விவரிக்கின்றது 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல்.

மாணவர்களின் கற்கைத் திறன் பின்னடைவு குறித்தும், மெல்லக் கற்கும் நிலையில் உள்ள மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறுவதற்கான காரணிகளையும் பட்டியல் செய்வதோடு, அவற்றை நேர் செய்ய வேண்டிய தேவை பற்றியும் பேசுகிறார். கூடவே, கல்வித்துறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நுண்அரசியல் பின்புலத்தையும் விவரிக்கிறார். 

மாணவர்கள், சமூக உதிரிகளாக மாறுவது பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் என்ற கசப்பான உண்மையைப் பதிவு செய்கிறார்.

மது, போதைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பண்பாடுகள் போன்றவை மாணவர் சமூகத்தைச் சீர்கெடுத்து உதிரிகளாக மாற்றுவதற்குத் துணை நிற்கின்றன. மது அருந்தி வரும் மாணவர்களைக் கண்டிக்க வழியில்லாமல் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், கண்காணிப்புப் துறை அலுவலர்கள் அறிவுரை வழங்குவதோடு கடமை முடிந்ததெனக் கடந்து செல்லும் போக்குதான் இன்றுவரை தொடர்கின்றது என்பதையும் காட்டுகிறது இந்நூல்.

மாணவர் ஆசிரியர் இடையே உள்ள உறவு, முன்பு போல் இல்லாமல் செயற்கைத் தன்மையோடு இறுக்கத்தை தரும் வகையில் உள்ளது. ஆசிரியராகப் பணிக்கு வருபவர்கள் பாடத்திட்டங்களை மட்டுமே கற்பித்தல் பணியெனக் கருதி ஒதுங்கிக் கொள்ளும் போக்கும் உள்ளது. மாணவர் சமூகத்தில் பதின்பருவத் தடுமாற்றம் சமூகத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

தடம்மாறும் மாணவர்களைக் குறிவைத்தே சாதிய அமைப்புகள் செயல்படுகின்றன என்ற பார்வையும் எழுகிறது. சாதி என்ற சொல் வெற்றுச் சொல். ஒன்றுக்கும் உதவாது என்பதே உண்மை. சாதி பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது என்ற ஒவ்வாமைக் கருத்தியல் சமூகத்தில் நிலவுகிறது. பழக்க வழக்கங்கள், சடங்குகள், முறைப்பாடுகள் சாதி இறுக்கத்தைக் காக்கின்றன. 

ஒரே வகையான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், உளவியல் அடிப்படையிலான வேறுபாடுகள், எண்ணங்கள் சாதி இருப்பை வலுப்படுத்துகின்றன. குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்குச் சாதி அடையாளம் துணை நிற்கின்றன. சாதி அடிப்படையில் வழங்கப்படும் பங்கீடும் நிறைவான தீர்வாகாது.

மாறாக, சாதி இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. சாதியின் பெயரில் வழங்கப்படும் உதவிகளுக்கு மாற்றுச் சொல் காலத்தின் தேவை. சாதியற்ற சமூகத்தை உருவாக்க அரசு முயற்சி செய்யவில்லை. மாறாக, சாதியப் பதற்றத்தைக் கேடயமாகக் கொண்டு ஆட்சி நடைபெறுகின்றன என்பதைக் கழக ஆட்சி நிகழ்வுகள் நிறுவுகின்றன.

உதிரிகளாகும் மாணவர் சமூகத்தைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு ஆசிரியர், பெற்றோர், அரசு, பொதுசமூகம் என அனைவருக்குமானது.

சாதியற்ற சமநிலைச் சமூகத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

வியாழன், 14 செப்டம்பர், 2023

பெருத்த வலி தந்திருக்கும் நூல் - எழுத்தாளர் அய்யனார் ஈடாடி



முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் தற்போது எழுதி வெளிவந்த நூலான 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூல் கிடைத்தது.

மாணவர்கள் நலனில் அக்கறையும் பெரும் பண்பும் பேரன்பும் கொண்ட இவரது மனம் நொறுங்கியிருக்கிறது; பெருத்த  வலி கொடுத்திருக்கிறது;

உலுக்கியிருக்கிறது; உறக்கமில்லாத இரவுகளின் மடியிலே வெடித்திருக்கிறது. இதன் வெளிப்பாடே இந்நூல்.


புதிய பாடத்திட்டத்தால் மாணவர்கள் உள்ளாகும் சிக்கலையும் தடுமாற்றத்தையும் உளவியலையும் அடர்த்தியாக உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழக அரசும் கல்வித்துறையும் ஆட்சியாளர்களும் மாணவர்கள் நலனில் தடுமாறுகிறது என்பதை ஆங்காங்கே காண்பித்திருக்கிறார்.


வாக்கு வங்கி அரசியலுக்காக ஆதிக்கவாதிகளின்/ஆதிக்க சாதிகளின் அநீதிக்குத் துணைபோகாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி, உடைமை, உரிமை பாதுகாப்பதில் அரசு துணை நிற்க வேண்டும் என்கிறார்.


நாங்குநேரியில் நடந்த சாதி ஆணவத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமானது. சாதிய அடாவடி அட்டூழியத்தை ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் துணிச்சலாகக் கண்டிக்கவில்லை. 

சாதியப் பேராபத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் அரசும் பொதுச்சமூகம் கடந்து போகிறது என்கிறார்.


கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருளை ஒழிப்பதாக அரசு நாடகமாடுவதையும், அதற்குப் பின்னால் மதுவை மிகப்பெரிய வணிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


ஆதிக்கவாதிகள் எப்போதுமே அட்டவணைப் பிரிவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையே காலங்காலமாகக் கொடுமைப்படுத்தியும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியும் வருவது வேங்கைவயல், நாங்குநேரி போன்ற சம்பவங்களே உதாரணம் என்கிறார்.


சாதியக் கண்ணோட்டம், சாதிய ஏற்றத் தாழ்வு மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினரிடையே பரவலாகப் புரையோடியும் அழுக்குகளாகவும் படிந்து கிடப்பதை உள்ளம் நொந்தும் வெந்தும் எழுதியிருக்கிறார்.


அறம் சார்ந்த மொழிவாரிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


ஒரு சமூகத்தை மாற்றுவதில் பெரும்பங்காற்றுவது கல்வி ஒன்றே.

கல்வி நிலையங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பொதுச்சமூகத்திற்கும் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடமையுண்டு என்பதனை அன்பு வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக உருவாவதற்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித்துறையும்தான் காரணம் என்பதனைத தாண்டி, பெற்றோர்களும் முக்கியக் காரணம் என்கிறார்.


வாய்ப்புள்ளோர் வாங்கி வாசியுங்கள்.


கட்டுரையாளர்:

அய்யனார் ஈடாடி,

எழுத்தாளர் மற்றும் பொறியாளர்,

எனதூர் சரித்திரம், ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி ஆகிய நூல்களின் ஆசிரியர்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,

ஆசிரியர்: மகாராசன்,

முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,

பக்கங்கள்: 72

விலை: உரூ 90/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 

ஆதி பதிப்பகம்

99948 80005.


அஞ்சலில் நூலைப் பெற:

செந்தில் வரதவேல்

90805 14506

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

அசத்தும் ஓர் அரசுப் பள்ளி - மகாராசன்



தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில், தொடக்கக் கல்வி நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணும் எழுத்தும் எனும் கற்பித்தல் திட்டம் குறித்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது. பல தொடக்கப் பள்ளிகளுக்கும் சென்று, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நாள் முழுக்கப் மேற்பார்வையிடும் பணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன். இதுவரை பல தொடக்கப் பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறேன். பல பள்ளிகள் தொடக்கநிலைக் கல்வியை மிக நன்றாகவே அளித்துக் கொண்டிருக்கின்றன. 


தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி இருந்தனர். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கின்றனர். பலரும் சொற்களை வாசிக்கத் தெரிந்துள்ளனர். எண்கள் அனைத்தும் தெரிந்திருப்பதோடு கூட்டல், கழித்தல் கணக்குகளையும் போடுவதற்குத் தெரிந்திருக்கின்றனர். 

தொடக்கக் கல்வியின் அடித்தளம் சரியாக அமைந்து விட்டால், மாணவர்களின் உயர்நிலைக் கல்விப் பயணம் சிறப்பாக அமைந்துவிடும். அதற்கான நம்பிக்கை வெளிச்சம் தொடக்கக் கல்வி நிலையில் தெரிகின்றது. இது பரவலாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இன்றைய நாளில், ஓர் அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தோம். அரசுப் பள்ளிக்கான எந்தச் சாயலும் தென்படவில்லை. மிகக் குறுகிய இடத்தில் பள்ளி இருந்தது. ஆனாலும் மரங்களும் செடிகளும் பசுமை நிழலைத் தந்தபடி இருந்தன. பள்ளிச் சுவர்கள், வகுப்பறைச் சுவர்கள் அனைத்திலும் பல வண்ணங்களில் ஓவியங்களும் படங்களும் மிளிர்ந்தன. அரசுப் பள்ளிக்குள்தான் இருக்கிறோமா என வியக்கும் உணர்வு அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது.  

பள்ளிக்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையும் ஆசிரியர்களைப் பார்த்தவுடன் இரு கைகளையும் கூப்பி காலை வணக்கம் சொல்லிக்கொள்கிறார்கள். வகுப்பறை வாசலில் நின்று உள்ளே வருவதற்கு கைநீட்டி அனுமதி கேட்கிறார்கள். ஆசிரியர்கள் வரச்சொன்ன பிறகே உள்ளே நுழைகிறார்கள். மிக அழகாக அவரவர் இடத்தில் அமர்கிறார்கள். எங்களில் யாரேனும் எந்த வகுப்பிற்குள் நுழைந்தாலும் எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். 

வளாகத்தின் ஓர் ஓரத்தில் நின்றிருந்தால்கூட சிறுநீர் கழிக்கவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ வெளியில் வரும் எந்தக் குழந்தையாக இருந்தாலும், கிட்டே வந்து கை கூப்பி வணக்கம் சார் என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். மிக வாஞ்சையோடும் வெள்ளந்தியோடும் பேசுகிறார்கள். 

சீருடை மிக நேர்த்தியாக அணிந்திருக்கிறார்கள். அவர்களும் பள்ளிப் பெயர் பொறித்த கழுத்துப் பட்டை, இடைவார் அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்த சீருடையின் நிறத்தை வைத்துத்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் எனக் கணிக்க முடியும். அந்தளவுக்கு மிக நேர்த்தியான ஒழுங்குடனும் அழகுடனும் வரிசையாகப் போவதும் வருவதுமாய் இருந்தார்கள். 

எல்லாக் குழந்தைகளுக்கும் மிக நன்றாகவே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கிறது. பலரது குறிப்பேடுகளையும் வாங்கிப் பார்த்தபோது அழகு அழகுக் கையெழுத்துகள். எந்தக் குழந்தையின் முகத்திலும் சோர்வோ பயமோ கூச்சமோ எதுவுமில்லை. மிகப் புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பள்ளி வளாகத்திலும் வகுப்பறையிலும் இருந்தார்கள். ஆசிரியர்கள் அனைவருமே குழந்தைகளோடு மிக நெருக்கமாய் அன்பாய் இருப்பதை உணர முடிந்தது. 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திருமதி தமயந்தி அவர்களும், மற்ற ஆசிரியர்களும் இந்தப் பள்ளியை மிக அருமையாக வைத்திருக்கின்றனர். 

பல ஆண்டுகள் கழித்து எனக்கு மிகப் பிடித்தமான, மனதுக்கு மிக நெருக்கமான, முழு மன நிறைவைத் தந்திருக்கும் ஒரு பள்ளிச் சூழலை இன்றுதான் அனுபவித்திருக்கிறேன். குழந்தைகளின் ஒழுக்கம், படிப்பு, கற்றல் நடத்தை, பள்ளிச் சூழல், ஆசிரியர்கள் கற்பித்தல், தலைமை ஆசிரியர் நிர்வாகத் திறன் என அனைத்துமே சீர்மிகு பள்ளிக்கான முழுத்தகுதியோடுதான் இருந்தன. 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதுதான், தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளி என்பதற்கான விருது பெற்றிருப்பதையும், மிகச் சிறந்த ஆசிரியருக்கான விருதைத் தலைமை ஆசிரியர் அவர்கள் பெற்றிருப்பதையும் சொன்னார்கள். இன்னும் பல விருதுகளை அந்தப் பள்ளியும் மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பெறுவார்கள். அந்தளவுக்கு அசத்தல் மிகுந்த பள்ளியாக மிளிர்கிறது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்குச் செல்லும் வழியில், ஆரோக்கியமாதா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிதான் அது. 

ஒன்று முதல் அய்ந்து வகுப்புகள் முடிய உள்ள பள்ளிதான் அது. 2007இல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். 6 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆயினும், நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாமல், மரத்தடியிலும் வளாக நடைபாதையிலும்தான் வகுப்பு நடத்த வேண்டி இருக்கிறது. கூடுதலாக ஒரு வகுப்பறைக் கட்டடம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. 

இதுபோக, எல்லா வகுப்பறையிலும் மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் இருந்தால் மாணவர்களின் கற்றல் திறனுக்குப் பேருதவியாக இருக்கும். கல்வித் துறையும் தன்னார்வலர்களும் இந்தப் பள்ளிக்கு வேண்டியதைச் செய்தால் தகைசால் தொடக்கப் பள்ளியாக மாறுவதற்கு வாய்ப்புண்டாகும். இந்தப் பள்ளிக்குச் சென்று வந்த பிறகு ஓர் ஆசிரியராய் மிக மன நிறைவோடும் மிகுந்த நம்பிக்கையோடும் இருப்பதாய் உணர்கிறேன். மிக்க நன்றியும் வாழ்த்தும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

வாய்ப்புள்ளோர் சென்று வாருங்கள். இயன்றதையும் இன்மொழிச் சொற்களையும் பகிர்ந்திடுங்கள். 

வாழ்த்தையும் பாராட்டையும் தலைமை ஆசிரியர் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவோர், தலைமை ஆசிரியர் திருமதி தமயந்தி அவர்களது எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பேச : 9944787891

முனைவர் ஏர் மகாராசன்

12.09.2023

வியாழன், 7 செப்டம்பர், 2023

தமிழ் அடையாள அரசியல்: இனவாதம் வேறு; இனவெறிவாதம் வேறு - மகாராசன்


தமிழ்ச் சமூக அரசியல் சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் எழுச்சியும், தமிழ்த் தேசியக் கருத்தாடல்களும் மேல் எழும்பும்போதெல்லாம், தமிழ் இனத்தின் அரசியல் வாதங்களைக் குறுக்கியும் சுருக்கியும் பொருள் கொள்ளும் அல்லது பொருளுரைக்கும் போக்கு, மற்ற அரசியல் முகாம்களைச் சார்ந்த அரசியல் சக்திகளால் முன்வைக்கப்படுகின்றன. 

ஒரு தேசிய இனத்தின் அல்லது ஓர் இனத்தின் உரிமைக்கான - விடுதலைக்கான கருத்தியல் வாதங்கள், அந்தத் தேசிய இனத்தின் - ஓர் இனத்தின் அடையாளங்களையும் பண்பாட்டு மரபின் வேர்களையும் உள்ளீடாகக் கொண்டிருப்பவை. அந்தவகையில், ஒரு தேசிய இனத்தின் வாதங்கள் 'தேசிய இன வாதம்' எனவும் - ஓர் இனத்தின் வாதங்கள் 'இனவாதம்' எனவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், 'இனவாதம்' என்பதைப் பிற்போக்கானதாகவும், அபாயகரமானதாகவும், பாசிசத் தன்மை கொண்டதாகவும், அணுகுவதும், பேசுவதும், ஒதுக்குவதும், பொருள் கொள்வதும் அரசியல் பேசுபொருள் களத்தில் நிகழ்ந்து வருகிறது.

இங்கே, பெரும்பாலும் 'இனவெறிவாதம்' என்பதற்கு என்ன பொருண்மை இருக்கிறதோ, அதே பொருண்மையைத்தான் 'இனவாதம்' என்பதற்கும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். 'இனவாதம்' வேறு; 'இனவெறிவாதம்' வேறு என்பதறியாமல், இனவெறி வாதத்திற்கான பொருள்கோடலையே 'இனவாதம்' என்பதற்கும் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

'இனவாதம்' என்பது வேறு; 'இனவெறி வாதம்' என்பது வேறு எனும் நிலையில், 'இனவெறி' என்பதற்குப் புரிந்து வைத்திருக்கும் கருத்தாக்கத்தையே 'இனவாதம்' என்பதற்குப் பொருத்திக் காட்டுவது பெரும்பான்மை வழக்காக இருக்கிறது. 'இனவாதம்', 'இனவெறி வாதம்' இரண்டும் வேறு வேறான சொற்பதங்கள் மட்டுமல்ல; வேறு வேறான பொருளும் கூட. 

'தமிழ் இனவாதம்' என்பதை, 'தமிழ் இனவெறி வாதம்' என்னும் பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய அரசியல் புரிதல் ஏற்கத்தக்கதும் சரியானதும் நேர்மையானதும் அல்ல.

'வாதம்' எனில், வாதிடும் கருத்து என்பது பொருள். அதாவது, வாதமாக முன்வைக்கும் கருத்தாடல்கள் / விவாதங்கள் / எடுத்துரைப்புகள் என்பது பொருள். கருத்தை முதலாக வைத்திருப்பது தொடர்பான வாதங்கள் 'கருத்துமுதல் வாதம்' எனப்படுகிறது. அதேபோல, பொருளை முதலாகக் கொண்ட வாதங்கள் 'பொருள்முதல் வாதம்' எனப்படுகிறது. 

மார்க்சியத்தின் அடிப்படையில் விவாதிப்பதும் வாதிடுவதும் 'மார்க்சியவாதம்' எனப்படுகிறது. இதைப்போலத்தான், இனத்தின் அடிப்படையில் தார்மீக - சனநாயக வாதங்களை முன்வைப்பது 'இனவாதம்' ஆகும்.

ஓர் இனத்தின் பார்வையிலிருந்து அதன் நியாயமான கோரிக்கைகள் / விடுதலை வேட்கை / பண்பாட்டு அடையாளங்கள் / அடிப்படை உரிமைகள் போன்ற இன்னபிறவற்றையும் வாதங்களாக முன்வைப்பது 'இனவாதம்' ஆகும். 

அதாவது, ஓர் இனத்தினது வாதம் 'இனவாதம்'. 'வர்க்க வாதம்' என்பதில், 'வாதம்' என்பதற்கு என்ன பொருளோ அதே பொருண்மைதான், 'இனவாதம்' என்பதில் உள்ள 'வாதம்' என்பதும் பொருள் தருகிறது. 'இனவாதம்' என்னும் சொல்லுக்குள் ஆதிக்கமோ, சுரண்டலோ, ஒடுக்குமுறை எனும் பொருண்மைக் கூறுகளோ உள்ளடங்கி இருக்கவில்லை. 

'இனவெறிவாதம்' என்னும் சொல்லுக்குள்தான் ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை, பிற இனத்தின் மீதான வெறி போன்ற பொருண்மைத் தொனிகள் வெளிப்படையாகவே தென்படுகின்றன. 

'இனவெறி வாதம்'தான் ஆபத்தானது; ஆதிக்கம் கொண்டது. அதனால், எதிர்க்கப்பட வேண்டியது 'இனவெறிவாதம்' தானே ஒழிய, இனவாதத்தை அல்ல. ஆகவே, 'இனவாதம்' வேறு; 'இனவெறிவாதம்' வேறு எனப் பிரித்துப் பொருளறியவும் அவற்றைக் கையாளவும் வேண்டும். 

கருப்பர்கள் மீதான வெள்ளையர்களின் ஒடுக்குமுறையும் சுரண்டலும் 'வெள்ளை நிறவெறிவாதம்' எனும் சொல்லால்தான் குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில், 'இனவெறிவாதம்' என்பது பிற இனத்தை அல்லது பிற இனங்களை ஒடுக்குவதிலும் சுரண்டுவதிலும்தான் குறி கொண்டிருக்கிறது.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இனவெறி வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சான்றாகக் கொள்ளலாம்.

இனவெறிவாதத்திற்கான பொருளாக்கத்தை 'இனவாதம்' என்பதற்குக் கையாள்வது, மொழியின் பொருள் நுட்பங்கள் அறியாத பிழையால் நேர்ந்திருப்பதாக மட்டும் கொள்ள முடியாது. ஓர் இனத்தின் அடிப்படையான உரிமைகளும், விடுதலை வேட்கையும், பண்பாட்டு அடையாளங்களும் வாதங்களாக எழும்புவதை மழுங்கடிக்கவும் கொச்சைப்படுத்தவுமான நுண் அரசியல் உள்ளீடும் அதற்குள் உள்ளடங்கி இருக்கிறது.

'இனவாத வெறி' என்பதற்கான விளக்கத்தையே 'இனவாதம்' என்னும் சொல்லுக்குப் பொருளாக்குவது பிழையானது மட்டுமல்ல; உள்நோக்கமும் கொண்டது. 

ஓர் இனத்தின் உரிமையைப் பற்றிப் பேசும் இனவாதத்தையே இனவெறிவாதமாகப் பார்க்க வைத்திருப்பதே ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிதான். 

ஓர் இனத்தின் உரிமைகளை உள்ளீடாகக் கொண்டிருக்கும் இனவாதம் தவறல்ல. பிற இனத்தை அல்லது இனங்களை ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கும் இனவெறி வாதமே தவறானது. இனவெறியில் பிற இனத்தை ஒடுக்குவதே பாசிசத் தன்மை கொண்டது.

ஓர் இனத்தின் நியாயவாதமும் இனவாதம் தான். இனத்தினது வாதம் 'இனவாதம்'. ஆனால், 'இன வெறி வாதம்' என்பது 'இனவாதம்' என்பதிலிருந்து வேறுபட்டது. இனவெறி வாதத்திற்குள்தான் ஆதிக்க வெறி புதைந்திருக்கிறது. முதலில் இனவாதம் என்பதையும் இனவெறி வாதம் என்பதையும் வேறுபடுத்திப் பொருண்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஓர் இனத்தின் உரிமைகளுக்கான, வரலாற்றுக்கான, அரசியலுக்கான மீட்புக்கான, போராட்டத்திற்கான வாதங்களை இனவாதம் என்கிற சொல் குறிக்கிறது. இனத்தினது வாதங்கள் சனநாயகத்தன்மை கொண்டது. ஆனால், இன வெறி வாதம் என்பது ஆதிக்கக் கருத்தியலைக் கொண்டிருப்பது. அதாவது, பாசிசத்தன்மை கொண்டது இனவெறி வாதம் தானே ஒழிய, இனவாதம் அல்ல.

ஓர் இனத்தினது உரிமைக்கான வாதம் இனவாதம். இனவாதம் ஓர் இனத்தினது சனநாயக வாதம். இனத்தினது ஆதிக்க வெறி வாதமே இனவெறி வாதம். இனவெறி வாதமே பாசிசவாதம். அவ்வகையில், இனவாதம் வேறு; இனவெறி வாதம் வேறு என்பதைத் தெளிதல் வேண்டும்.

அதாவது, சனநாயகப்பூர்வமான இனத்தின் வாதம்தான் இனவாதம். அதுவே இனத்தின் அறவாதம். அது பிற்போக்கானது கிடையாது. நாம் இப்போது கோருவது எல்லாம் இனத்தின் வாதமே அன்றி; இனவெறி வாதத்தை அல்ல. 

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

07.09.2023

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எழுத்துச் செயல்பாட்டுக்கான ஆற்றல் ஆசிரியர் விருதும் ஏற்புரையும் - மகாராசன்



கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என, கல்விப் புலம் சார்ந்த ஆசிரியப் பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செய்துகொண்டிருக்கும் எண்ணற்ற ஆசிரியர்கள் நம் சமூகத்தில் நிரம்ப இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவர் அவ்வளவுதான்.

எமது ஆசிரியப் பணிக்கு மாணவர்களின் பேரன்புதான் மிகப்பெரும் பரிசு. அவர்கள் கண்களில் வழியும் ஒளியும் உள்ளத்தில் வைத்திருக்கும் பெருமதிப்பும்தான் உயரிய விருதுகள். 

ஓர் ஆசிரியராய் கல்லூரிச் சூழலிலும், பல்கலைக் கழகச் சூழலிலும், பள்ளிச் சூழலிலும் எமது கற்பித்தல் செயல்பாட்டை மன நிறைவோடுதான் செய்துகொண்டிருக்கிறேன். கற்பித்தல் செயல்பாட்டோடு, சமூகம், பண்பாடு, மொழி, படைப்பு சார்ந்த எழுத்துச் செயல்பாடுகளையும் மேற்கொண்டுதான் வருகிறேன். 

எனக்குச் சரியென்றும் அறமென்றும் பட்டிருப்பதைத்தான் என் போக்கில் எனது பாணியில் செய்துகொண்டிருக்கிறேன். இவற்றில் எந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் எமக்கு இதுவரை இருந்ததில்லை; இனிமேலும் வரப்போவதில்லை. 

எமது செயல்பாடுகளுக்காக எந்த விருதுகளையும் விளம்பரங்களையும் விரும்புவதோ, ஆட்படுவதோ, விண்ணப்பம் செய்வதோ கிடையாது. ஏனெனில், நான் எனது சமூகக் கடமையை மட்டுமே செய்வதாக உணர்கிறேன். 

ஆயினும், எனது கல்விச் செயல்பாடுகளையும் எழுத்துச் செயல்பாடுகளையும் எங்கோ ஒரு மூலையிலிருந்தும் கவனித்துக்கொண்டிருக்கும் நண்பர்களும் அமைப்புகளும் அவர்களாக முன்வந்தும் முன்மொழிந்தும், எம்மை ஊக்குவித்துப் பாராட்டும் நிகழ்வு அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம், இன்னும் கூடுதலான பொறுப்பும் கடமையும் வந்து சேர்வதாகவே உணர்ந்து கொள்வேன். எம்மிடமிருந்து இன்னும் கூடுதலாக இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதாகவே அறிந்து கொள்வேன். 

அந்தவகையில், பைந்தமிழ் வலையொளி அமைப்பும், சென்னை கூத்துப் பட்டறை அமைப்பும் எமது கல்வி மற்றும் எழுத்துச் செயல்பாடுகளைப் பாராட்டி, ஆற்றல் ஆசிரியர் விருதளித்துப் பெருமைப்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் முன்பாகப் பெறப்பட்ட இவ்விருது எம்மை மகிழ்வித்திருக்கிறது; நெகிழ்வித்திருக்கிறது.

பேரன்பும் பெருமதிப்பும் நிறைந்த ஆசிரியப் பெருமக்களான திரு மகேந்திர பாபு, திரு முனியாண்டி, திரு புலவர் சன்னாசி அய்யா, திரு கவிஞர் மூரா, காரை கிருஷ்ணா, திரு மீனாட்சி சுந்தரம், திரு நாகேந்திரன், திரு முத்துராஜா உள்ளிட்ட பல ஆசிரியப் பெருமக்களும், மதுரை ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் நிகழ்வை உயிர்ப்புடையதாக ஆக்கியிருந்தனர்.

ஆற்றல் ஆசிரியர் விருதளித்து மகிழ்ந்த பைந்தமிழ் வலையொளி மற்றும் சென்னை கூத்துப் பட்டறை அமைப்புகளுக்கும், எமக்கு மட்டுமல்லாது இன்னும் பல ஆசிரியப் பெருமக்களும் விருதளித்துச் சிறப்பித்த நிகழ்வை ஒருங்கிணைத்த மதுரை மாவட்டம், இளமனூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு மகேந்திர பாபு அவர்களுக்கும், மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு முனியாண்டி அவர்களுக்கும் பேரன்பும் நன்றியும்.

எமது கல்விப் பணியும், எமது எழுத்துகளும் சமூகப் பொறுப்புடையதாகவே இன்னும் இருக்கும். 

சமூகப் பொறுப்பு மிக்கவர்களோடு பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். இன்று நடைபெற்ற ஆசிரியர் நாள் விழாவிலும் அதை நிரம்பப் பெற்றிருக்கிறேன். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

ஏர் மகாராசன் 

01.09.2023