க.அன்பரசு
ஆய்வு மாணவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
ஏறுதழுவுதல் எனும் தமிழ்த் தேசிய பண்பாட்டு உரிமைக்கான வேர் தமிழ்மரபின் வேளாண் உற்பத்தியின் அடித்தளத்தில் பதிந்துள்ளது என்பதையும் திணைமரபின் நீட்சியில் நிலைத்த வேளாண் உற்பத்திமுறையில் மாடு எனும் உற்பத்தி கருவி உற்பத்தி உறவின் அங்கமாய் தமிழ்சமூகத்தில் நிலை பெற்றதன் வரலாற்று பின்னணியையும் சங்க இலக்கியம் தொடங்கி பள்ளு இலக்கியங்கள் வரையிலான இலக்கிய வரலாற்று ஆவணங்களின் உதவியுடன் நிறுவ முயன்றிருக்கிறார் தோழர் மகாராசன்
உழைப்பவன் நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் வரலாற்று சூழல்களில் அவனது பண்பாடு அந்நியப்படுவதும் அல்லது தனது உடமை நலனின் பொருட்டு உழைப்பவனின் பண்பாட்டை திருடி அதனூடாகவே கருத்தியல் ஏற்பை ஆளும் வகுப்பு திணிப்பதையும் விளக்கும் தோழர் மகாராசனது மேற்கட்டுமானம் சார்ந்த விவரிப்புகள் பண்பாட்டு அம்சங்களிலிருந்து அதன் மீது விழும் ஒடுக்குமுறை தளைகளிருந்து அவற்றை விடுவிக்கும் போராட்டங்களின் மூலம் பொருளியல் அடித்தளம் நோக்கிய மாற்றத்திற்கான போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்நூல் குறித்த விவாதங்கள் தமிழ் சமூகத்தை புரிந்துக் கொள்வதற்கான உதவியைத் தரும் தோழருக்கு வாழ்த்துகள்
கிருசு ராமதாசு
ஆசிரியர், சிற்றிதழ்கள் உலகம், துபாய்.
ஏர் மகாராசன் அவர்கள் சிற்றிதழாளர் என்ற முறையில்தான் எனக்கு அறிமுகமானார். என் சிற்றிதழ்கள் உலகம் வலைப் பூவில் டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் பகுதியில் “ஏர்” சிற்றிதழ் குறித்துப் பதிவு செய்வதற்காகத் தொடர்பு கொண்டேன். மறுப்பு எதுவும் சொல்லாமல், ஏர் உடனான தன் பயண அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். இதழ் இடையிலேயே நின்று போன மன வலியையும் அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.
அந்த நிகழ்வின்போது அவர் மனக் கிடைக்கையில் இருக்கும் தமிழார்வத்தையும், இலக்கியத் தாகத்தையும், பாராம்பரிய மீட்டெடுப்பின் உத்வேகத்தையும், வேளாண் சார்ந்த கருத்துருவாக்கத்தையும் நான் அறிந்து கொள்ள முடிந்தது. நிலம் சார்ந்த அவரின் தீரா மோகத்தின் வெளிப்பாடுதான் தன் சிற்றிதழுக்கு ஏர் என்று பெயரிட்டிருப்பதின் நோக்கத்தை என்னால் உணர முடிந்தது. திரு.மகாராசன் அவர்கள் பன்முகத் திறமையாளர், பேராசிரியர், நாடக ஆர்வலர், வேளான் குடியின் பெருமகன், தமிழ்ப் பற்றாளர் எனக் கூறிக் கொண்டே போகலாம்.
ஏறு தழுவுதல்:
மெரினாவில் இளைஞர்களும், மாணவர்களும், பொது மக்களும் ஏற்படுத்திய புரட்சி இன்று தமிழ்ச் சமூகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் சுய பரிசோதனையிலும், தன் சுயத்தைத் தேடும் முயற்சியிலும், அதை மீட்டெடுக்கும் முயற்சியிலும் முன்னோக்கிச் செல்கின்றனர் என்றால் மிகையாகாது.
அதே போன்று, திரு.மகாராசன் அவர்கள் தன் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த வேளாண் தொழிலின் பாராம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாகவும், அதில் உள்ள நுட்பங்களை இன்றைய தமிழ்ச் சமுதாயம் அறிய வேண்டும் என்ற வேட்கையில் “ ஏறு தழுவுதல்”” என்ற இந்தப் புத்தகத்தில் ஆழ உழுது அற்புதமான, வரலாற்று ரீதியிலான பல தகவல்களை இலக்கிய ஆதாரங்களுடன் நம்முன் வைத்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுப் புத்தகத்தையும் நான் படிக்க வேண்டியதை, அவரின் எழுத்துக்கள் எனக்கு ஏற்படுத்தியது. ஆம். படிக்கப் படிக்க நிறுத்த முடியாத நிலை. ஒரு தலைப்பு முடியும் முன்பே அடுத்த தலைப்புக்கான சங்கிலித் தொடர் துவங்கி விடுகிறது. உடனே தொடர்ந்து படிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நான் உள்ளானேன். அந்த அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக அமைந்த ஏறு தழுவல் நூலை நான் தழுவிக் கொண்டேன்.
1.
உணவுத் தேடலின் காரணமாக மந்தை நிலையிலிருந்து மனிதன் குழுக்களாக மாறும் நிலை.
2.
குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என நிலம் சார்ந்த வாழ்க்கை முறை.
3.
காடுகள் சார்ந்த வாழ்க்கை முறை, மலை சார் வேளாண்மை, நாடோடி வாழ்க்கை முறை என நில அடிப்படையில் மாறுபட்டிருந்தன. கால்நடை வளர்க்கும் குழுக்கள் உருவாகி அவை பண்டமாற்று பரிவர்த்தனைக்கு வழி வகுக்கிறது. அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை அடிப்படையாக கொண்டு ஆயர்கள், கோனார்கள் எனக் குழுக்கள் உருவாக்கம் ஏற்படுகிறது.
4.
ஐவகை நிலங்களில் முல்லை, மருதம், குறிஞ்சியில் உழவு புன்செய், நன்செய், புனம் என அமைப்பு முறையால் இனக் குழு வாழ்க்கை முறை உருவாகி அது இனமாக மாறும் நிலை..
5.
தொழில் சார்ந்த மக்கள் திரள் கூட்டங்கள் சாதியாக மாறும் நிலை.
6.
மொழிக் கூறுகள் கட்டமைக்கப்படுவதின் மூலம் மொழி சார்ந்த தமிழ்த் தேசிய இன உருவாக்கம் ஏற்படுகிறது.
இந்த இடத்தில் ஆசிரியர், பாவாணரின் கருத்துக்களைத் துணைக்கு அழைத்திருப்பது அருமை.
உழவர்கள் வேளாண் குடிகளாகி, உழைப்புக் கருவியாக மாடுகள் மாறுகின்றன. இங்கே தான் தமிழ்ச் சமூகம், அடிக் கட்டுமானம், மேல் கட்டுமானம் வகை பிரிக்கப்பட்டு, வேளாண் குடிகளின் சடங்குகள் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டைப் பறை சாற்றும் விழாக்களாக உருமாறுகின்றன. வேளாண் உற்பத்தியின் அறுவடைத் திருவிழாவாகவும், அதைச் சார்ந்த விலங்குகளின் பெருமையைப் பறை சாற்றும் விழாவாகப் பொங்கல் மாறுகிறது. தமிழர் பண்பாட்டின் முக்கிய அடையாளமாகப் பொங்கல் திகழ்கிறது என்று ஆசிரியர் கட்டமைக்கும் விதம் மிக அற்புதம்.
தமிழ்த் தேசிய இனத்திற்கும், பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கும் உள்ள முரன்பாடுகளை மிகத் தெளிவாக முன் வைத்துள்ளார்.
காளைகளின் தினவு + துள்ளல்தான் மாடு தழுவுதல். இது ஒரு பண்பாட்டுத் திரு விழா.
ஏறு தழுவுதல் என்பது ஒரு பாவனை விளையாட்டு என்றும், அது மாடும் மனிதனும் இணக்கத்தோடும், பரிவோடும் புரிந்து செய்யப்படும் ஒரு பாவனை விளையாட்டுதான் ஏறு தழுவுதல் என அவர் இலக்கிய ஆதாரங்களுடன் நிறுவி இருப்பது இந்தப் புத்தகத்தின் முத்தாய்ப்பாகும்.
நண்பர்களே, இந்த புத்தகம் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும் கட்டமைப்பை நம் கண் முன்னே நிறுத்துகிறது. அதில் உள்ள உள் முரண்களை வெளிப்படுத்தவும் ஆசிரியர் தயங்கவில்லை என்பதை நாம் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒவ்வொரு தமிழனும் தன் சுயத்தை அறிய, தன் இனத்தின் கட்டுமானம் எந்த அடிப்படைகளைக் கொண்டது என்பதை அறிந்து கொள்ள, அந்தப் பண்பாட்டுத் திருவிழாவைத் தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கைக் கொள்ள இந்தப் புத்தகத்தை ஒரு முறை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
புத்தகத்தின் ஆசிரியர் திரு.மகாராசன் அவர்களுக்கு என் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள். இத்தகைய புத்தகத்தின் பிடிஎப் பிரதியை அனுப்பி, நான் படிக்கும் வாய்ப்பை அளித்த உங்களுக்கு என் நன்றியையும், வாழ்த்துதலையும் உரித்தாக்குகின்றேன் நண்பர். இந்த அருமையான புத்தகத்தைச் சிறப்பாக வடிவமைத்துப் பதிப்பித்துள்ள அடவி பதிப்பகத்திற்கும் என் வாழ்த்துதலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுந்தர பாண்டியன்
பொறியாளர், மதுரை.
புலி தன் வரலாற்றை தானே எழுதாதவரை, வேட்டையாடுபவன் சொல்வததுதான் வரலாறாக இருக்கும் என்பதை போல; சரியான புரிதல் இல்லாமல் ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை ஜாதியாக்க பண்பாடு மற்றும் காட்டுமிராண்டிகளின் பண்பாடு என்று பரப்புரை செய்தவர்களுக்கும் , இந்த விளையாட்டை வீடியோ கேமில் விளையாடுங்கள் என்று கூறிய தொழில்நுட்ப ஆக்கிரமிப்புக்கு அடிமையாகிப்போனவர்களுக்கு இந்த நூல் மூலம் சரியான தருணத்தில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்...
மாடு தழுவுதல் என்னும் ஏறு தழுவுதல் ஏன் செய்யப்படுகிறது? எதற்காக செய்யப்படுகிறது ? இதற்கும் வேளாண் தொழிலுக்கும் உள்ள தொன்மையான தொடர்பு பற்றி பல வரலாற்று மற்றும் இலக்கிய ஆதாரங்களோடு விரிவாக அலசுகிறது இந்த நூல்....
தமிழர்களின் பண்பாடு உழவர்களின் பண்பாடாகவே காணப்பட்டது மற்றும் தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை வரலாற்று நெடுகிலும் மாடுகளே மறந்து கிடக்கின்றன என்பது போன்ற போன்ற வரிகள் இந்த புத்தகத்தின் மையம்...
"நிலத்தின் மண்வாசம் மட்டுமல்ல, மாடுகளின் கவுச்சி வாசமும்" என்பன போன்ற எழுத்துக்கள் தனக்கும் மாடுகளுக்கும் உள்ள உறவு மற்றும் பெரும்பாலான தமிழர்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு செல்கிறாரர் இந்நூலின் ஆசிரியர்...
பார்ப்பனர்கள் இந்த நிகழ்வை எதிப்புக்கு என்ன காரணம் என்பதை "ஏர் பூட்டி உழுவதே பாவம் என கருதுகிற சமஸ்கிரத மரபில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பது" போன்ற சான்றுகள் அருமையானவை....
மாடு தழுவல் எனும் ஏறு தழுவல் சடங்கும் விழாவும் தமிழ்த் தேசியத்தின் பண்பாட்டு அடையாளம். இது குறிப்பிட்ட சாதியினருக்கானது மட்டுமல்ல. உயர்த்திக்கொண்ட சாதியினருக்கானது மட்டுமல்ல. பகட்டுக்கும் ஆணவத்திற்கு மட்டுமல்ல. என்பது சாதியத்திற்கு ஒரு சவுக்கடி ..
மேலும் , மாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல் அனைத்துத் தமிழர்களின் பண்பாட்டு உரிமை. இது நிலம் சார்ந்தது. நில உரிமை சார்ந்தது. தமிழர் சார்ந்தது. தமிழர் பண்பாடு சார்ந்தது. தமிழர் உரிமை சார்ந்தது. இதற்குத் தடை விதிப்பதும் – தடையை ஆதரிப்பதும் – கொச்சைப்படுத்துவதும் ஆதிக்கத்தின் வடிவமன்றி வேறில்லை....
ஆக இந்த புத்தகம் ஒரு மாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல் தமிழக மக்களின் வாழ்வியலோடு குறிப்பாக வேளாண் மக்களோடு எவ்வாறு பிண்ணி பிணைந்து என்றும் பின்னர் எவ்வாறு மற்றம் அடைந்தது என்றும் விரிவாக விளக்குகிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் நண்பர் திரு மகாராசன் . இது போன்ற நிறைய நூல்கள் மேலும் மேலும் அவர்கள் எழுதுவதற்கு வாழ்த்துக்கள்...
மொ.சங்கர்குரு
பொறியாளர், கோவை.
ஏறு தழுவுதல் என்கிற நூல் அண்ணன் திரு ஏர் மகாராசன் அவர்களிடம் யதார்த்தமாக ஓர் வயலில் நின்று உரையாடியதைப் போன்ற உணர்வினை
உள்புகுத்தி அமைந்திருக்கிறது. ஏறு தழுவுதலை ஓர் நிகழ்த்துப் பண்பாடாக கையாண்டுள்ள விதத்தினையும் உழவுகுடியோடு மாடுகளின் உறவினைப் பிணைத்து எழுதியுள்ள எழுத்துக்களை வெறுமனே எழுத்துக்களாகக் கடந்து விட முடியவில்லை.
கடந்த காலங்களில் மாடுகளோடு எமக்கு இருந்த ஓர் ஆழ்மனது உணர்வு உறவினை புத்துயிர் செய்துள்ளார். பொங்கல் எனும் உழவர் திருநாளின் வருகையை உழவுகுடி மாக்கள் மழையோடும் மண்ணோடும் மாடுகளுக்குமே பெரிதும் அர்ப்பணம் செய்வர். திணையோடு தமிழர்களின் வாழ்வியல் மெருகூட்டலையும் இணைத்தே சீர்தூக்கி உள்ளார். மனிதத்தின் நாகரிகக் கடப்புகளையும் ஒரு கண்ணாக கிடத்தியுள்ளது சிறப்பு.
தமது எழுத்து ஆளுமையை பல நூற்றாண்டுகள் முன் சென்று சமகாலத்தில் துவங்கி நிகழ்காலத்தில் நிறைவுற்றியிருக்கிறார். காலத்தின் அவசியம் உணர்ந்து அனைவருக்கும் ஏற்கும்படியான நடையில் வரலாறுகளை விதைத்து உள்ளார். அவர் மேற்கோள் காட்டியுள்ள அத்துனைக்கும் ஆவணமாக 'பா'க்களையும், சான்றுகளையும் சுட்டியுள்ளது நேர்மை. மாடுகளின் உழைப்பும் சந்தைப் பொருளாதாரமும்என்கிறபார்வையில் தமிழர்களின் மேல் நோக்குகளை செவ்வனே செதுக்கியுள்ளார்.
வரலாற்றின் காலூன்றல்கள் சமகாலத்தில் சில
காழ்ப்புணர்ச்சிஏற்படுத்தலாம் என்கிறஎழுத்தாளர்களின் யதார்த்தத்தைக்கூட எளிமையாகவும்நுட்பமாகவும் கையாண்டுள்ளது அருமை.பொதுமை அரசியலோடு கூட இவ் வீர பண்பாடுகளின் தொடர்பு உள்ளது என்பதை ஆணித்தனமாக சுட்டியுள்ளது நறுக். தமிழர்பண்பாடுகள் உழவர் பண்பாடுகளின் மெருகூட்டலே அன்றி பெரும்பாலும் வேறில்லை என்கிற தொனி போற்றுதலுக்குறியது.
உழவு முதல் களவு வரை நிலங்களின் கூறுகளை எளிமையாக விளக்கியுள்ளார் .ஏறுதழுதல்உழவுகுடியின் நிகழ்த்து ப்பண்பாடாக இவரது பார்வை மேன்மையிலும்மேன்மை.எதிர்காலத்தின் அவசிய ஆவணம் இந்த ஏறுதழுவுதல் என்கிற நூல். இறையோடு மறையும் போற்றுதல் நலத்திலும் நலம்.அவ்வாறாக
இப் பெரும் வாழ்வியல்சமகாலத்தில் நம் முன்னோர்களால் கல்வெட்டுக்களாகவும் ,சுவடிகளாகவும் ,நூல்களாகவும் ஆவணம் செய்தே வந்துள்ளது.
அவ்வரிசையில் இந்த ஏறுதழுதலை ஆவணம் செய்ய எடுத்துள்ள முயற்சி
வெற்றி.
இந்த வெற்றியினை, இவ் பண்பாட்டை அழிவிலிருந்து மீட்ட மாணவர்களுக்கும் இளையோர்களுக்கும் சக தமிழர்களுக்கும் படைப்பாளியின் அனுமதியின்றி உரிமையுடன் சமர்ப்பிக்கிறேன். உலகப் பொருளியல் எனும் ஒற்றைக் கோட்பாடு தமிழர் தம் பண்பாடு ,பாரம்பரியத்தை க்கூட அழிக்க த்துடிப்பதை திராணியோடு எதிர் கொண்டுள்ளார்.சக தமிழனாக எனது சிறப்புப் பாராட்டுக்கள் அண்ணன் அவர்களுக்கு. இவ் நூலை நிச்சயமாக தமிழர்கள் செருக்குடன் ஏற்கவேண்டும்.
மொத்தத்தில் ஏறுதழுதலை வெறும் விளையாட்டுதானே என்போருக்கும்,
இது முக்கியமா? என்கிற ஏளனக்காரர்களுக்கும், பெருமையை மட்டுமே தேடித் திருடுகிற கீழ்நிலைச் சிந்தனையாளர்களுக்கும், மாட்டினை வெறும் மாடாகக் கடந்து போகும் யதார்த்தவாதிகளுக்கும் ஓர் படிப்பினை இந்த ஏறுதழுவுதல் வேளாண் உற்பத்தியின் நிகழ்த்து ப்பண்பாடும் வரலாறும் வாழ்த்துக்களுடன் நன்றிகள்.
இரபீக் ராசா
சூல் வாசிப்புத் தளம், மதுரை.
ஏர்மகராசனின் ஏறு தழுவுதல் வேளாண் உற்பத்தியின்
நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் - வேளாண் பொருளீய அடித்தளத்தை ஏறுதழுவுதல் வழி உரக்கப் பேசும் நூல். அருமையான நூல்.
குமரன்
களச் செயல்பாட்டாளர், மதுரை.
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்து விவாதங்கள் நடந்து வந்தன. குறிப்பாக தலித் செயல்பாட்டாளர்கள் முன்வைத்த விமர்சனங்கள் புறக்கணிக்க முடியாதவனவாக இருந்தாலும் அதில் ஏதோ குறைபாடு இருப்பது போல தோன்றியது. அருமைத் தோழர் ஏர் மகராசனுடைய ஏறு தழுவுதல் நூல் படிக்க நேர்ந்தது.
குறிப்பாக வகுப்பு குமுகம் தோற்றம் பெற்றதில் மாடு எப்படி ஒரு செல்வமாக மாற்றப்பட்டது. பின்னர் உழவோடு தொடர்புடய பண்பாடுகளும் உழவுக்குடிகளும் பல்வேறு ஆட்சியாளர்கள் காலத்தில் எவ்வாறு சுரண்டப்பட்டனர். அதுவும் பார்ப்பனிய நிலவுடமை காலத்திய கருத்துகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட மனு உள்ளிட்ட சட்ட நூல்கள்உழவுப்பண்பாட்டை இழிவுப்படுத்தி ஒடுக்கியதும் பின்னர் உருவான நவீன காலனிய அதிகாரம் இன்று வரை உழவர்களை யும் உழவுப் பண்பாட்டை ஒடுக்கி வரும் அரசியலை விளங்கிக் கொண்டால் தான் புரியும். மகராசனுடைய நூல் அதற்கு உதவும்.
அதுமட்டுமல்ல தனிப்பட்ட முறையில் பள்ளு இலக்கியம் பற்றி தோழர் கோ. கேசவனுடைய கருத்துக்களை உயர்த்திப்பிடித்தவன் நான் ஆனால் நா. வானமாமலை யினுடைய கருத்துக்களை அவர் தான் அடையாளம் காட்டினார் . மேலும் பள்ளு இலக்கியத்தில் ஏறுதழுதல் பற்றிய செய்தியை குறிப்பிட்டிருப்பது தலித் செயல்பாட்டாளர்களின் கண்களை திறக்க வேண்டும் அந்தக் கடமையை மகராசனுடைய நூல் நிறைவு செய்யும்.
இராசேந்திரன்
ஆசிரியர், மன்னார்குடி.
ஏறு தழுவுதல் நூல், சிறு பொறியும் காட்டுத் தீயை உருவாக்கும் என்பதை நிரூபனம் செய்கிறது. வேளாண் குடும்பத்தில் பிறந்த உங்கள் பட்டறிவும் படிப்பறிவும் இந்த நூல் சாத்தியம். நானும் அந்த குடும்பம் சார்ந்தவன்.
இந்த நூல் தை எழுச்சிக்குத் தத்துவ பலம் சேர்த்துள்ளது. இன்குலாப்பின் மரபுவழி பாட்டாளிகளின் கருத்தை முன்மொழிகிறது. ஆய்வு உலகில் தனித்த இடம் உங்களுக்கு உண்டு . அறிவியல் பூர்வமான வரலாற்றுப் பண்பாட்டு நூல்
மாரி
செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ், மதுரை.
ஏறுதழுவல்: தமிழ் சமூகத்தில் இனி ஏர்.மகராசனை மீறி யாரும் ஜல்லிக்கட்டு குறித்த மிகச்சிறந்த நூலை எழுதிட முடியாது
இளஞ்சென்னியன்
களச்செயல்பாட்டாளர், சிவகங்கை.
திணைகளின்எழுச்சி தமிழ் தேசிய புரட்சியாய் ஒழுங்கமையும் என நம்புகிறேன். தமிழோடு ஒன்றித்து போகும் எல்லாம் சமத்துவ விழுமியங்களாலே மட்டுமே நீட்சி கொள்ள முடியும். இந்த புரிதலில் தோழர் மகராசனின் இப்புதிய ஏறுதழுவல் குறித்தான நூல் வாசித்து உரையாட வேண்டிய நூலே.
அரும் பெரும் தமிழறிஞர் பாவாணர் தம் நூல் மேற்கோளினை இந்நூலெங்கும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தோழரின் இந்நூலை தமிழின உணர்வாளர்கள் படிக்கவும் பரப்பவுமுமாய் கேட்டு கொள்கிறேன்.
இ.பேச்சிமுத்து
பேராசிரியர் – தலைவர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை.
அருமைத் தம்பி, கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். காலத்தின் தேவைக்குக் கனிந்திருக்கிறது இந்நூல். வாழ்த்துக்கள்.
கி.வெ. பொன்னையன்
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், சென்னிமலை.
அன்புத் தோழர் மகாராசன், ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்ற காலப் பொருத்தமிக்க நூலைதூதஞ்சலில் அனுப்பி வாசித்து கருத்துச் சொல்லுங்கள் என்றார்.
வேளாண் உற்பத்தியின் தொடக்க காலத்தோடு மாடு பிடித்தல் நடந்ததும் பின் அதுவே ஏறு தழுவல் எனும் பண்பாடாக மாறிய பொருள் முதல்வாத விளக்கத்தை
பேச வேண்டும் என நான் பேசி வந்தேன். அந்த நோக்கு நிலையில் இந்நூல் இருப்பதாக ஆசிரியர் மகாராசன் தெரிவித்துள்ளார்.
வயலான், நக்கீரன் இதழ்
மார்ச் 15-17, 2017, சென்னை.
கேடு இல்லாத விழுமிய செல்வம் கல்வி மட்டுமே என்று அய்யன் வள்ளுவன் சொன்ன குறளில் மாடு என்ற சொல் ஒரு மிருகம் என்ற பொருளில் வந்திருப்பதாகவும், கல்வியும் மாடும் இணையான செல்வங்கள் என்றே அய்யன் சொல்வதாகவும் ஏறு தழுவுதல் எனும் இக்கட்டுரை நூலைத் தொடங்குகிறார் மகாராசன்.
மாடு தழுவல் பண்பாட்டில் உள்ள தமிழின அடையாளமும், நாட்டு மாடுகளின் மீதான அக்கறையும், வணிகச் சுரண்டல் எதிர்ப்பும் மாடு தழுவல் பண்பாட்டை ஆதரிப்போரிடமிருந்து வெளிப்பட்டன. அதேவேளையில், மாடு தழுவல் பண்பாட்டில் விலங்கு வதை இருக்கிறது என்று சொல்லி வந்தன பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள். இப்பண்பாட்டில் சாதியாதிக்கப் பண்பாடு இருக்கிறது; என்றனர் சில தலித்தியவாதிகள். இது காட்டுமிராண்டிகளின் பண்பாடு எனப் பரப்புரை செய்து வந்தனர் பெரியாரியவாதிகள்.. இப்படி மாடு தழுவல் பண்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் வெளிவந்த உரையாடல்கள் அனைத்தும், மாடு தழுவல் பண்பாட்டைப் புரிந்து கொண்டதில் போதாமைகள் இருந்ததையே காட்டின என்று இந்நூலுக்கான அவசியத்தைக் காட்டி, விடையளித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மகாராசன்.
இது வேளாண் உற்பத்தியோடு தொடர்புடைய ஒரு நிகழ்த்துச் சடங்குப் பண்பாடு. ஆகவே, மாடு தழுவுதல் எனும் ஏறு தழுவுதலை முன்னெடுக்க வேண்டும். அதுவே நிலவுரிமைப் போராட்டத்தின் அடையாளமும் கூட என நிறைவு செய்கிறார் நூலாசிரியர். சிறிய நூல், ஆயினும் மாட்டின் திமிலைத் துளைத்து வேளாண்மையை அதற்குள் புகுத்துகிறார் ஆசிரியர். நல்ல முயற்சி.
கருணா மள்ளர்.
களச் செயல்பாட்டாளர், மாடக்கோட்டை, தேவகோட்டை.
சில எழுத்தாளர்கள் வாசகர்களைக் கட்டிப்போடுவதில் வல்லவர்கள். அத்தகைய வரிசையில், திரு ஏர் மகாராசன் அவர்களும் இடம் பெறுகிறார்.
ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு இன்றைய தலைமுறைக்கு ஒரு விளையாட்டாகத் தெரியும் பட்சத்தில், அது வெறும் விளையாட்டு அல்ல; மனிதரோடு கலந்த மாட்டிற்குமான உறவு என்பதை உணர்வுப்பூர்வமாக அனுபவத்தின் அடிப்படையில் வாழ்வியலையும் இலக்கியத்தையும், எஞ்சிய தரவுகளையும் ஒருங்கிணைத்து இளைய தலைமுறைக்குத் தொகுத்து வழங்கி இருப்பதோடு, தனது கருத்தையும் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.