திங்கள், 29 ஏப்ரல், 2024

பாரதிதாசனின் திராவிட நிலைப்பாடும் தமிழ்த் தேசிய நிலைப்பாடும் : அறிஞர் குணா


திராவிடக் கருத்தியலும் அடையாள இழப்பும்.

திராவிட இனவழி மரபினில் ஊன்றி நில்!", "வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!" என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி, இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க முயல்வாருமுண்டு.

தொடக்கத்தில் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று எழுதியவர்தாம் அப் பாவேந்தர். சங்கதமொழி இலக்கியங்களைத் தழுவிக் கதைப்பாட்டுகளைப் புனைந்தவர்தாம் அவர். பின்னர் பெரியாரோடு இணைந்து அவர்தம் 'திராவிடக்' கொள்கைக்காக நின்றவரும், "திராவிடத் தமிழன்" போன்ற பொருந்தாக் கலப்புருவைக் கருவாக வைத்தும் அவர் பாடினார்.

ஆனால், தேவநேயப் பாவாணரோடும், அவருடைய தனித் தமிழ் இயக்கத்தோடும் தொடர்பேற்பட்ட பின்னர், அவர் அத் திராவிடத்தை மெல்ல விட்டுத்தொலைத்தார். தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகளேயெனச் சொன்ன பெரியாரின் தமிழெதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு நேரெதிராக,

'நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப் படி! - முறைப்படி
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி!
காலையில் படி, கடும்பகலில் படி, 
மாலை இரவு, பொருள்படும்படி'

என்று சொல்லி, பெரியாரின் திராவிட மெய்யினக் கொள்கைக்கு நேரெதிரான மொழிவழித் தமிழ்த் தேசிய இனக் கொள்கைக்காக அவர் பாடலானார். 

தமிழுணர்வை மிகவும் பழித்து வந்த கன்னடராம் பெரியாருக்கு மாறாக,

"பிள்ளை பிறந்தேன், யாருக்காக?
பெற்ற தமிழ்மொழிப் போருக்காக.
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக''

என்று பாடினார். 

தாம் பிறந்த புதுவை மண்ணில், மிகச் சிறுபான்மையராம் தெலுங்கர்கள் போடும் கொற்றங்களை எல்லாம் கண்டு வெம்பியவராயிற்றே. அதனால்தான் பாவேந்தர்,

தமிழ்நாட்டில் அயலார்க்கினி என்ன வேலை? 
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?”
என்றும்,
"அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க; மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் 
அடியோடு வீழ்க"
என்றும்,
"பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே
பச்சைத் தமிழர்கள் நமதிந்த நாடு! - நல்
உழுந்தன வேனும் நமைப் பிறர் ஆள 
உரிமையே இல்லை என்றுநீ பாடு"

என்றும் தமிழ்த் தேசியப் போர்ப்பரணி பாடினார்.

"எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! 
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்! 
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்"

என்று பாடிய பாட்டில், "திராவிடத் தமிழன்" என்னும் மாயை செத்துவிட்டது. 

தமிழைத் தாழ்த்தித் "தாய்ப்பால் பைத்தியம்" என்றெழுதிய பெரியாருக்கு நேர்மாறாக,

"தாய்மடியில் குந்தித் தமிழ்முலைப்பால் உண்ணுகின்ற 

சேய்தனக்கும் தாய்பேர் தெரிகிலையோ என்தாயே" 

என்று பாடினார். 

திராவிட மெய்யினக் கொள்கையை அப்பால் எறிந்துவிட்டு.

"தூங்கும் புலியைப் பறைகொண்டெழுப்பினோம்; 
தூய தமிழரைத் தமிழ்கொண்டெழுப்பினோம்’’

என்று பாடியவரும் பாவேந்தரே. 

"தமிழனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது” என்று எழுதிய பெரியாருக்கு மாறாக,

தமிழ்மொழி யெல்லாம் வடமொழி என்று 
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று; 
தமிழ்மொழி யெல்லாம் தமிழ்மொழி என்று 
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று"

என்று பாடி, பாவாணர் மொழிந்த முதன்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர். பாவேந்தரின் இறுதிநிலை தமிழ்த் தேசியத்தோடு ஒன்றி, தமிழ்த் தேசியப் பாவலராக முதிர்ந்துவிட்ட செம்மையான கோலம்.

தமிழரின் இன்றைய இழிகேடுகளுக்கு, 'திராவிடம்' என்னும் நச்சுப்பூண்டு தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததும் ஒரு பெரிய காரணம். திராவிடக் கருத்தியலால் தமிழன் தன் அடையாளத்தை இழந்தான்; இன ஓர்மையை இழந்தான்.

கன்னடனுக்கு ஒரு கன்னடநாடும், தெலுங்கனுக்கு ஒரு தெலுங்குநாடும், மலையாளிக்கு ஒரு மலையாளநாடும் இருக்கையில், தமிழகம் மட்டும் தமிழ்நாடாக இல்லை. அது திராவிட நாடாகக் கெட்டு, தெலுங்கரும் கன்னடரும் மலையாளிகளும் அடுத்தடுத்து வந்து ஆளவும் சுரண்டவும் வழிவகுத்துள்ளது.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

கண்ணகித் தவிப்பு - மகாராசன்


காலத் தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர்முட்டக் கசிந்த
காத்திருந்த வாழ்வின் தனிப் பொழுதுகள்
மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலும்
நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.

கண்களில் வழிந்த சுடு நீரும் 
அவள் ஆழ்மனத் தீயைக்
அணைத்திருக்கவில்லை.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தேர்தல் பணி அனுபவங்கள்: மகாராசன்


இந்திய ஒன்றியத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் பணியில், வாக்குச் சாவடித் தலைமை தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்று, மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் பணி செய்து முடித்திருக்கிறேன். கடந்த காலத் தேர்தல் ஏற்பாடுகளைப்போல, தேர்தலுக்குரிய பொருட்களையும் படிவங்களையும் சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்து குப்பைகளைப் போலக் கொட்டிவிட்டுப் போகாமல், தேர்தல் பொருட்களை அதற்கென்ற பெட்டிகளிலும், படிவங்களைக் கற்றைகளாகவும் (Booklets), தனித்தனியாக அச்சிட்ட உறைகளாகவும் ஒப்படைத்திருந்தமை புதுமையான நல்ல வழிமுறை. இந்தமுறை பாதியளவு பணிப் பளுவையும் பரபரப்பையும் குறைத்திருந்தது.

பெரும்பாலான அரசுப் பணியாளர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி என்றாலே மிகுந்த மன நெருக்கடியோடுதான் ஏற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் முறை குறித்து எமக்கு மாற்றுக் கருத்துகள் நிறைய இருப்பினும், மக்களின் மனநிலை, தேர்தல் கள நிலவரம், தேர்தல் நடக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டுமென, அரசுப் பணிக்கென்று வந்த காலத்திலிருந்து பல தேர்தல் பணிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்திருக்கிறேன். இந்தத் தேர்தல் களமும் பணியும் பல்வேறு படிப்பினைகளைத் தந்திருக்கின்றன.
இளைய தலைமுறையினர் உட்பட பல தரப்பினரும் மாற்றத்தை உள்ளூர விரும்புவது தெரிந்தது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி இயக்கப்படுகின்றன? வாக்குப் பதிவுச் சின்னங்களின் எல்லாப் பொத்தான்களும் சரியாக வேலை செய்கின்றனவா? வாக்களித்த சின்னங்கள் ஒளிர்திரையில் அச்சாகி விழுகின்றனவா? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும் என்பதற்கான மாதிரி வாக்குப் பதிவு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு நடத்திக் காட்டுவது? வாக்குச் சாவடித் தேர்தல் நடைமுறைகள் என்னென்ன? வாக்குச் சாவடித் தேர்தல் அதிகாரிகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன? வாக்களிக்கும் வாக்காளர்களின் உரிமைகளும் நடைமுறைகளும் என்ன? இப்படிப் பலவகையான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிதலும் புரிதலும் இளைய தலைமுறையும், தேர்தல் அரசியல் களத்தில் பணியாற்றும் புதியவர்களும் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவோருக்கு வழிகாட்டவும் விளக்கப்படுத்தவும் தயாராகவே இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் தென்படுகிற அரசியல் விழிப்புணர்வு, ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையிலும் வந்து சேர வேண்டும். குறிப்பாக, வாக்குச் சாவடி முகவர்களை ஒவ்வொரு கட்சியும் நியமித்து, அதற்கான களப்பணிகளை முன்கூட்டியே பல கட்சிகளும் செய்து முடித்து விடுகின்றன. அதன் அறுவடையை வாக்குச் சாவடிக்குள் நியமிக்கப்படும் முகவர்கள் மூலமாகவே செய்து கொள்கின்றன.

புதியதாகக் களம் காணும் கட்சிகள் பலவற்றுக்கும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் முகவர்களே நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்டிருக்கும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள்கூட ஏதாவது ஒரு பெரிய கட்சிக்கான வேலைகளைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஓர் அரசியல் கட்சி வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் அரசியலைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல; அந்தந்த வாக்குச் சாவடி அளவில் தேர்தல் பணியாற்றும் முகவர்களை நியமிக்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தியாக வேண்டும். இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே தேர்தல் முறையில் நடைபெறும் வெற்றியை எதிர்கொள்ள முடியும்.

வாக்குச் சாவடி அளவில் நடைபெறும் தேர்தல் குறித்து இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. வாய்ப்புகள் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

தேர்தல் பணிச் சான்று மூலமாக, தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்கும் முறை இருந்தமையால், அஞ்சல் வாக்கு செலுத்த வேண்டியதில்லை. பெரும்பாலும் நான் வாக்களிப்பதில்லை. இந்தமுறைதான் வாக்களித்திட வேண்டுமென முன்வந்தேன். ஆகையால், தமிழர் நிலத்துக்கும் இனத்துக்குமான குரலை ஓங்கி ஒலித்தவர்களுக்கு எமது வாக்கைப் பதிவு செய்தாயிற்று. எம் குடும்பத்தார்கள் அனைவரது வாக்கும் அவர்களுக்கே இந்தமுறை விழுந்திருக்கிறது. முதல்முறையாக வாக்களித்த எம் மகளின் வாக்கும், அவரது தோழிகள் பலரது வாக்கும் அவர்களுக்கே கிடைத்திருக்கின்றன.

காலம் களத்தைத் தீர்மானிக்கட்டும்.

ஏர் மகாராசன்
21.04.2024.

புதன், 17 ஏப்ரல், 2024

நானும் என் எழுத்துலகமும்: அங்கவை யாழிசை


புத்தகங்கள், புத்தக வாசிப்பு போன்றவை எனக்கு என்றும் புதிதல்ல. அவையெல்லாம் நான் பிறந்ததில் இருந்தே பார்த்தவைதான். இன்னும் சொல்லப்போனால் என் அப்பா அம்மாவுடன் சேர்ந்து என்னை இன்னும் வளர்ப்பவைதான்.

என் அப்பா பேசுவைதையும், எழுதுவதையும் எப்பொழுதுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அதையெல்லாம் உள்வாங்கி என்னுடைய நடையில் பிரதிபலிப்பது வழக்கம். என் அப்பா மகாராசன் அவர்களைப் போலவே நான் இருப்பதாகப் பலர் கூறக்கேட்கும்போது மிகப் பெருமிதமாக இருக்கும். உருவத்தோற்றத்தில் மட்டும் அல்லாமல், அவரைப் போன்று எழுத்தாளுமையும் பேச்சாற்றலும் எனக்கும் உண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

என் சிறுவயது முதலே எனது அப்பாவைப் பார்த்தே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி, எதுவொன்றைக் குறித்தும் என்னால் பேசவோ எழுதவோ முடியும் எனும் நிலைக்கு எனது அம்மாவும் அப்பாவும்தான் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். எனது குடும்பச் சூழலும், வீட்டில் இருக்கும் செம்பச்சை நூலகமும் எனது எழுத்துலகப் பயணத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பலவற்றைப் பரிசாகக் கொடுத்து அறிமுகப்படுத்துவார் என் அப்பா.

எழுத்துலகுக்கான கதவு எனக்குப் புதிதல்ல என்றாலும், அதனூடான பயணம் புதிதானது. வாசிப்புலகு எனக்கு மிக வசீகரமானது. சிறு சிறு புத்தகங்களையும் படைப்புகளையும் சிறு வயது முதலே நான் படித்ததுண்டு. ஆனால், வாசிப்பின் மீதான ஓர் நாட்டத்தை எனக்களித்த புத்தகம், நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வாசித்த 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' என்ற புத்தகம்தான். அந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் வந்தது. அந்த வயதில் நான் படித்த புத்தகங்கள் மற்றும் படைப்புகள் அனைத்தும் சிறு படைப்புகளே என்றாலும் பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவையாகும்.

எந்தச் சூழலாக இருந்தாலும் தன் சுயத்தையும், தன்னுள் இருக்கும் குழந்தையையும் இழக்கக் கூடாது. தன் வீட்டின் மீது குண்டுமழை பொழிந்தபோது நாட்குறிப்பு எழுதுவாள் ஸ்லெட்டா. வாழ்வைப் பதிவு செய்வதில் அவளுக்கு இருந்த திடம், என்னையும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள் என்றது ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு.

யார் நம்மைத் தூற்றினாலும் ஏசினாலும் அவர்களுக்கான சிறந்த பதிலடியாக அமைவது, நாம் படித்து நம் தரத்தை உயர்த்திக் கொள்வதே; நம் படிப்பும் பட்டறிவும்தான் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்திய மற்றொரு புத்தகம் 'உனக்குப் படிக்கத் தெரியாது' எனும் உன்னதமான புத்தகம் ஆகும்.

வாழ்வில் நீ எதை இழந்தாலும் பெறுவதற்கு உலகம் உண்டு என்பதை உணர்த்திய இன்னொரு புத்தகம் 'ஹெலன் கெல்லர்' புத்தகமாகும்.

பின்நாட்களில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் படிப்பின் மீதான - வாசிப்பின் மீதான ஓர் மோகத்தை எனக்களித்தது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆகும். அதன் மூலம் வரலாற்றுப் புனைவுகளின் மீது மிகுந்த வாசிப்பு ஈடுபாடு உண்டானது. அதைத் தொடர்ந்து 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு', 'வேள்பாரி' என்று விரிவடைந்தது. 

எந்தப் புத்தகமானாலும், எப்படிப்பட்ட புத்தகமானாலும், புத்தக வாசிப்பின் முதன்மை நோக்கமாக நான் கருதுவது, அந்த வாசிப்பின் மூலமாக நாம் என்ன பெறுகிறோம் என்பதுதான். 

வரலாற்றுப் புனைவுகளில் இருந்து நம்மால் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மட்டுமே பெற முடியும் என்று புரிந்து கொண்டேன். பிறகு என் வாசிப்பின் பயணத்தில் ஓர் மாற்றம் அடைந்தது. வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வெளிவந்து மற்ற புத்தகங்களையும் வாசிக்கச் சொன்னார் அப்பா. வாசித்த புத்தகங்களைக் குறித்துக் கட்டுரையாக எழுதித் தரவும் சொல்வார். அப்பா கூறிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவை எனக்கு ஒரு புதிய அனுபவத்தோடு அறிவையும் புகட்டுவதாகத் தோன்றியது. வாசிப்பானது பொழுது போக்கு என்பதையும் தாண்டி, தேடல் என்று ஆனது. அந்தத் தேடலின் வாயிலாக நான் அறிந்து தெரிந்து புரிந்தவையே இந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகும்.

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதற்கெல்லாம் எனக்கு வயது கிடையாது. அதற்கான அறிவையும் நான் இன்னும் பெறவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், இன்று எழுத்துலகில் உயரப் பறக்கும் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் தத்தித் தத்தி தவழ்ந்தவர்கள்தான்; நான் உட்பட அப்படித் தவழ்ந்து வந்தவன்தான் என்பார் என் அப்பா. நான் எழுதுவதற்கு என் அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

இந்த நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. உன் எழுத்துப் பயணத்திற்கு இது ஒரு முதற்படியாக அமையட்டும் என்று சொல்லித்தான், நான் எழுதிய ஆறு கட்டுரைகளையும் புத்தகமாக உருவாக்கத் தொடங்கினார் அப்பா.

தமிழோடு வளர்ந்ததாலோ, தமிழ் என்னை வளர்த்ததாலோ என்னவோ, என்னைச் சித்த மருத்துவத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம். தமிழ் என்னை வளர்த்ததுபோல் சித்த மருத்துவமும் என்னை வளர்த்தெடுக்கும் இந்தக் கல்விச் சூழலும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், சித்த மருத்துவமும் தமிழும் இரண்டரக் கலந்தவை. இரண்டும் எழுத்துலகத்தோடு தொடர்பு உடையவை. ஆகையால், எனது வாசிப்புலகம் இன்னும் பலவாறாக விரிவடைந்திருக்கிறது. 

முதன் முதலில் நான் எழுதத் தொடங்கியபோது, என் எழுத்துகளைச் சமூக ஊடகங்களில் அப்பா பகிரும்போதெல்லாம் அப்பா அம்மாவின் நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் பலரும் எம்மை ஊக்கப்படுத்தி வாழ்த்துவதைக் காண்பிப்பார் அப்பா. அந்தப் பாராட்டும் வாழ்த்தும் நான் அடுத்தடுத்து எழுதுவதற்கு உருதுணையாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் தாய்வீடு, புக்டே, அறம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, குறுநூலாக வெளிவருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்நூலை யாப்பு வெளியீடு மூலமாகப் பதிப்பித்து வெளிக்கொண்டுவரும் திரு செந்தில் வரதவேல் மாமா அவர்களுக்கும், என்னை எல்லா வகையிலும் வழிநடத்தி வளர்த்தெடுக்கும் அம்மா அம்சம், அப்பா மகாராசன், தம்பி அகரன் தமிழீழன் ஆகியோருக்கும் எம் நன்றியும் அன்பும்.

மருத்துவக் கல்விப் புலத்தில் வழிநடத்தும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மீனாகுமாரி அவர்களுக்கும், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன். 

வாழ்த்திலும் அன்பிலும் நெகிழச் செய்யும் குடும்ப மற்றும் நட்பு உறவுகள் அனைவருக்கும் என் நன்றி.

இது, எனது முதல்நூல். தங்கள் அனைவரின் வாழ்த்திலும் வழிகாட்டலிலும் நான் இன்னும் வளர்வேன். வளப்படுத்துவீர்கள் எனும் பெருநம்பிக்கை எமக்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

மிக்க அன்புடன்
அ.ம.அங்கவை யாழிசை.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


வெள்ளி, 29 மார்ச், 2024

எழுத்தில் நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம் - கவிஞர் யாழ் தண்விகா


ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 

6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 

தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.

தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.

ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...

சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.

 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.

கட்டுரையாளர்:
கவிஞர் யாழ் தண்விகா,
கல்வி மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம்.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,

முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


பகையும் துரோகமும் - மகாராசன்


பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் 
கூட்டுச் சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
மடிப்பிச்சை கேட்டு 
கையேந்தி அலைகின்றன.

கத்திய கதறலும் 
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் 
வீண் போவதில்லை.

தாயகக் கனவு சுமந்த இனத்தை 
கொத்துக் கொத்தாய்ப் பறிகொடுத்த
நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை. 

ஏர் மகாராசன்

வெள்ளி, 22 மார்ச், 2024

நீர்ப்பால் தாய்ச்சிகள் - மகாராசன்



மேகங்கள் முட்டிக்கொண்டு
சோவெனப் பெய்த
பெருமழையின் ஈரப்புள்ளிகள்
சிற்றோடை நீர்க்கோடுகளால்
ஆறுகளை வரைந்துகொண்டிருந்தன.

கார்காலத்தின் பசுங்கனவு
ஆறுகளில் மிதந்து வழிந்தோடின.

நுரைகள் மிதக்க 
நாணலைக் கோதி
கரைகளை இறுகத் தழுவி
கழனிகளில் பாய்ந்து
பயிர்த் தாலாட்டை இசைத்த
ஆறுகளின் நாவுகள்
ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன.

நீர் முகந்த ஊருணிகள்
பள்ளமடை பாய்ந்த கண்மாய்கள்
வெக்கை குளிர்வித்த குளங்கள்
காடுகளில் கசிந்த 
ஓடைகள் யாவும்
நீர் அத்துக் கிடக்கின்றன.

நிலத்தின் சாவையும்
நீர்த்தடக் கொலைகளையும்
ஒப்பாரியாய்ச் சொல்லி அழ
கரைகளும் இல்லை; 
ஆறுகளும் இல்லை.

நீர்ப்பால் தாய்ச்சிகள்
சீரழிந்த வதைகளை
ஆறுகள் யாரிடம் சொல்லி அழும்?
கரைகளிடம்தான் சொல்லி அழும்.

கரைகள் காணாத ஆறுகள்
ஊர்களை மூழ்கடிக்கும் கனவுகள்
வந்து வந்து போகின்றன.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 22 - உலகத் தண்ணீர் நாள்.

பூங்குருவி வாழ்க்கை - மகாராசன்


பூஞ்செடிகளின் 
இலைகளைத் தைத்து 
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் 
பெருமரத்து வேர்களின் 
நுனி முடிச்சுகளோடு 
கிளையில் துளிர்க்கும் இலைகளின் 
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும் 
அரும்பிடும் வாழ்க்கை 
இனிதுதான்.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 20 - உலகச் சிட்டுக் குருவிகள் நாள்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்: மகாராசன் - அம்சம்


பெருங்கனவோடும் பேரன்போடும் செந்தமிழ் உணர்வோடும் வளர்ந்துவரும் அன்பு மகள் அங்கவை யாழிசை அவர்கள், சிறு வயதிலிருந்தே எழுத்து, பேச்சு, கலை எனப் பன்முகத் திறன்களோடு உறவாடி வருபவர். எமது கல்வி, சமூகம் மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் மகளாகவும் தோழியாகவும் இருந்து அருந்துணை புரிந்துகொண்டிருப்பவர். 

குழந்தையாக இருக்கும்போதுகூட புத்தகங்கள்தான் அவரின் விளையாட்டுப் பொருட்களாக இருந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் செம்பச்சை நூலகப் புத்தகங்கள் யாவற்றிலும் அவரின் கண்களும் கைகளும் பட்டிருக்கும் என்றே கருதுகிறோம். பள்ளிக்கூடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தாண்டி வேறுவேறு புத்தகங்களைப் படிப்பதில் எப்போதுமே நாட்டம் கொண்டிருந்தார். அவர் வாசித்த புத்தகங்கள் குறித்து எம்மிடம் மிக விரிவாகவே பேசிடுவார். 

தொடர்ச்சியான புத்தக வாசிப்புதான் அவரது பன்முகத்திறனுக்கும் பெருந்துணை புரிந்திருக்கிறது. பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டியம், கைவினை எனப் பலவகைப்பட்ட திறன்வெளிப்பாட்டிற்காகப் பரிசுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார். 

புத்தக வாசிப்பில் பெருவிருப்பத்தோடும் உள்ளார்ந்தும் அவர் பயணப்படுவதை அருகிலிருந்து பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஒரு புத்தகத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும்கூட ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவார்.

இப்படியே மற்ற மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால், அவரது பள்ளிப் படிப்பில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்றுகூட நாங்கள் நினைத்தது உண்டு. இதைக் குறித்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தியபோது, இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது பள்ளிப் புத்தகங்கள் எல்லாம் மிக எளிது என்றே கூறினார். அவர் சொன்னவாறே பள்ளிப் படிப்புகளிலும் தேர்வுகளிலும் உயர்மதிப்பெண்களைத்தான் பெற்று வந்தார்.

தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் தமது ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததோடு, வாசிப்புச் செயல்பாட்டையும் தீவிரப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், கல்லூரியில் நான் தமிழ்ப் பாடம் எடுத்துப் படிக்கட்டுமா என்றார். ஏன் இந்த முடிவு? எனக் கேட்டபோது, தமிழ் மீது அவ்வளவு பற்றும் உணர்வும் இருப்பதாகவும், தமிழுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் எனவும் கூறினார். அம்மாவும் அப்பாவும் தமிழ் படித்திருக்கிறோம். தமிழ் ஆசிரியராய் இருக்கிறோம். நாங்கள் தமிழ் குறித்துப் பேசுவதைக் காட்டிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் பயணிப்பவர்கள் தமிழ் குறித்துப் பேசினால் அதற்குச் சமூக முக்கியத்துவம் இருக்கும். தமிழுக்கு ஏதாவது செய்திட வேண்டுமானால், பிற துறைகளில் பயணித்துத் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கிருப்பதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழை நவீன உலகுக்குக் கடத்த முடியும் என்றோம். 

அப்படியானால், நான் என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று எம்மிடமே கேட்டார். குடும்ப உறவுகள் பலரும் மருத்துவர்கள் என்பதால், மருத்துவம் படிக்கலாம் என்றபோது, அலோபதி மருத்துவமெல்லாம் படிக்க விருப்பமில்லை. சித்த மருத்துவம் படிக்கவே விரும்புகிறேன் என்றார். மருத்துவப் படிப்புகூட தமிழோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றே கருதினார். அந்தளவுக்கு அவரது தமிழ் ஈடுபாடு தீவிரப்பட்டிருந்தது.

புத்தகங்கள் அவரது அறிவுலகத்தை மேலும் மேலும் வளப்படுத்தின. புத்தகங்களை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தைக் குறித்தும் பேசுவதோடு மட்டும் நிறைவடைந்துவிடாமல், வாசிக்கிற புத்தகங்களைக் குறித்து எழுதவும் முயற்சிக்க வேண்டும் என அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தோம். அவ்வப்போது அவர் வாசித்த புத்தகம் குறித்து அவரது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிக் காண்பிப்பார். அவர் எழுதிய கட்டுரைகளில், எழுத்துலகம் குறித்த அகத்தையும் புறத்தையும் மட்டுமல்ல, எழுத்துலகம் குறித்த அவரது அகத்தையும் புறத்தையும் காண முடிந்தது. 

பல்வேறு புத்தகங்களை அவர் வாசித்திருந்தாலும், கையறு நதி, சூல், படைவீடு, நடுகல், புறப்பாடு, சுளுந்தீ ஆகிய பெருங்கதை நூல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு இணைய இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன. 

தமிழ்கூறும் நல்உலகம், எம் மகள் அங்கவை யாழிசை அவர்களின் எழுத்துகளை வரவேற்றும் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ந்தன. அக்கட்டுரைகள் யாவும் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. அங்கவை யாழிசை அவர்களின் முதல் நூல் இது. 

தமிழ் சார்ந்தும், சித்த மருத்துவம் சார்ந்தும் இன்னும் நிறைய எழுதுவார் எனும் நம்பிக்கை எமக்கிருக்கிறது. தமிழ் உம்மை வாழ வைக்கும்; மிளிரச் செய்யும். 

தமிழ் உறவுகள் வாழ்த்தி வரவேற்பதோடு வழிகாட்டுங்கள்; வழி நடத்துங்கள். இன்னும் வளம் பெறுவார்.

எழுத்துலகில் பயணப்படும் அன்பு மகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
அப்பாவும் அம்மாவுமான
மகாராசன் - அம்சம்.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


புதன், 13 மார்ச், 2024

அங்கவை யாழிசையின் வாசிப்பு உணர்வு - விஜயபானு


அன்பிற்கினிய அங்கவை யாழிசை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தங்கள் முதல் படைப்புக்குக் கூறுகிறேன். இவ்வாறு சிறுவயதில் தங்களின் பரந்த வாசிப்பு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது.

தாங்கள் நூல்களை உள்வாங்கிய விதமும் அதை கட்டுரைகளாக எழுதிய விதமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தாங்கள் எழுதிய ஆறு கட்டுரைகளும் ஆறு விதமான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இதிலிருந்து தங்களின் பரந்த வாசிப்பு உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தங்கள் வீட்டில் உள்ள செம்பச்சை நூலகம் போல் அனைவர் வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைத்தால் இன்னும் பல யாழிசைகளைக் கேட்க முடியும் என்று தோன்றுகிறது. 

தாங்கள் எழுதிய கட்டுரையைப் போல் தங்கள் நூலுக்கும் வேறொருவர் கட்டுரை எழுதும் அளவிற்குத் தாங்கள் எழுத்து உலகில் பயணிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். 

எழுத்து உலகில் மட்டுமல்லாது, சித்த மருத்துவத் துறையிலும் சாதனை படைக்க என்னுடைய வாழ்த்துகள். தங்களை இவ்வாறு உருவாக்கிய தங்கள் பெற்றோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

அன்புடன்
திருமதி விஜயபானு,
ஆசிரியர்,
ஈரோடு.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

ஞாயிறு, 10 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனைப் பெயர் :பாவலரேறு பெருஞ்சித்திரனார்.


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. 

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் (தமிழ்மொழி) அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது. 

பின்னர் அது, தமிழ் தவிர்த்த - தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும் புலவர்களும், திராவிட மொழிகளுக்கும் மூலமொழியாக இருந்த ஒரு பழம்பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக்கொண்டனர். 

ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று. தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று. எனவே, தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட வேண்டியவராகவும் ஆயினர்…

தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும் கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூலமொழி என்று ஏற்றுக்கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

*

மகாராசன் தொகுத்த திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து..

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

ஞாயிறு, 3 மார்ச், 2024

அங்கவை யாழிசை: நம்பிக்கை ஒளிக்கீற்று - லட்சுமி.ஆர்.எஸ்


தோழர்கள் அம்சம் - ஏர் மகாராசன் தம்பதிகளின் புதல்விதான் அங்கவை யாழிசை. சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். (19 வயதிருக்கலாம்). முதலில் அந்தச் சின்னஞ்சிறு குருத்திற்கு அன்பும் வாழ்த்தும் பாராட்டும்..

சிறு பிள்ளைகள் இலக்கிய உலகிலே சிறகடித்துப் பறப்பது எத்தனை ஆனந்தத்தையும் நெகிழ்வையும் தருகிறது தெரியுமா...? மகிழ்வோடு கண்ணில் நீர் பெருகுகிறது மகளே அங்கவை… தமிழ்த்தாயும் இந்நூலைக் கரங்களில் ஏந்தி மகள் அங்கவையை வாரியணைத்து ஆசிர்வதிப்பாள்.

அலைபேசியில் முடங்கி இருக்கும் இளைய தலைமுறையினரை, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையினரை, அழகு நிலையங்களில் திரண்டு நிற்கும் இளையதலைமுறையினரை, திரையரங்குகளில் முதற்காட்சியில் கதாநாயகனுக்கு பல அடி கட்அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் தலைமுறையினரைப் பார்த்த கண்களுக்கு… அங்கவை போன்ற தங்கங்கள் தென்படுகையில், நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது, எம் தமிழ் இனி மெல்லச்சாகாது, தழைத்தோங்கி வளருமென…

கண்மணி அங்கவை, உன் வாசிப்பு உன் பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் என்ற மாயவலையில் உன்னைச் சிக்கவைத்துப் பணம் குவிக்கும் இயந்திரமாக உன்னை மாற்றாது போனதற்காக என் பேரன்பு அவர்களுக்கு…

நீ தேர்ந்தெடுத்த 6 நூல்களுமே உன் ரசிப்புத் தன்மையை, உன் இலக்கியத் தேடலை, உன் மனது நகரும் திசையை, உன் அறிவு நீட்சியை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது…

வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் “கையறு நதி “ பற்றி எழுதுகையில் நீ இப்படி எழுதுகிறாய் …

//வாழ்க்கை எனும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன்மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்ல வேண்டியதுதான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது//

எவ்வளவு கனமான வார்த்தைப் பிரயோகங்கள்! உளவியற் சிந்தனை நிறைந்த ஓர் ஞானியின் அடியொற்றிய காலடித் தடங்களின் அச்சுப் பிரதிகள்!

பிராய்டு கூறிய "முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும், உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் மகன் அவர்களின் படைவீடு நூல் உன்னை ஈர்த்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.. நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக் காதல் கொண்ட உன்னால் இந்த நூலை நேசிக்க இயலவில்லை என்றால் அதுதான் வியக்க வைக்கும். 

இந்தப் பற்றை நான் எப்படி அறிந்து கொண்டேன் தெரியுமா? இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயம் படிக்கின்றபோது நீ இப்படி எழுதுகிறாய், 

//இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அந்தளவிற்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்//

உலக சரித்திரத்தில் துரோகம் என்பது புதிதில்லையே கண்மணி?? இப்போதுதானே எழுத வந்திருக்கிறாய். இன்னும் நிறைய வாசிக்கையில், இன்னும் நிறைய எழுதுகையில் அதிகமாக அறிவாய், துரோகங்கள் குறித்து..

தென் அமெரிக்காவின் செவ்விந்திய “இன்கா“ பெரும் பழங்குடியினர் எப்படி ஸ்பானிஷ்காரர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கையில் படித்துப் பார்… 

யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் பற்றிய புத்தகங்கள் படித்துப் பார்….

இயேசுகள் இல்லாவிட்டாலும், அற்ப காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் யூதாசுகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் புத்தகங்களிலிருந்து உணர்வாய்..

இறுதியாக, 

சித்த மருத்துவத்தை ஆராயும் உனக்கு முத்து நாகு அண்ணனின் சுளுந்தீ நாவல் பிடித்துப் போகத்தான் போகும். பெரிய புதினத்தை உன்னளவிற்குச் சுருக்கி அதன் தன்மை மாறாமல், கதாப்பாத்திரங்களை விளக்கியது மிக அழகு..

ஒரு பத்தி எழுதுவதற்கு நான்கு ஐந்து மாதங்கள் யோசித்தேன் என அண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. அத்தனை பென்னம் பெரிய உழைப்பே சுளுந்தீ. சித்த மருத்துவராக இந்த நூல் உன் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தையும் இடத்தையும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..

மருத்துவனின் குணத்தை மட்டுமல்ல, மருந்து அரைப்பவனின் குணத்தைக்கூட பேசியது திருக்குறள். 

தமிழர்களின் மரபுச்செல்வங்கள் மறைக்கப்படும்போது அல்லது அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் போது எழுந்த வரலாற்று வேதனையே சுளுந்தீ..

உலகெலாம் வெடி மருந்தை மூங்கிலிலும் காகிதத்திலும் சேர்த்து வான வேடிக்கைக்கோ போருக்கோ பயன்படுத்தும்போது அதை உலோகக் குப்பியில் அடைத்து, வெள்ளையருக்கு எதிரான போரில் உலகின் முதல் ஏவுகணையாய்ப் பயன்படுத்தியவன் திப்பு சுல்தான். அந்தப் போரின் ஓவியத்தை வைத்து அழகு பார்க்கிறது நாசா. அதை வெளிக் கொணர்ந்தவர் அப்துல் கலாம். அந்த வெடி மருந்தை ஆக்கித் தந்தவன் நம் தமிழ்ப்பாட்டன். நாம் மறந்ததை நாசா நினைவில் வைத்துள்ளது.

எங்கே தமிழினம் தன் மரபுகளை மறந்து விடுமோ என ஐயுறுகையில் அங்கவை போன்ற தளிர் வளைக்கரங்கள், இரும்புக் கரங்களாய் அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை இந்தப் புத்தகத்தின் வாயிலாய்த் தோன்றுகிறது..

தமிழ் கூறும் நல்லுலகே, இலக்கியப் பிதாமகர்களே, ஆன்றோர்களே, எங்கள் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கவை யாழிசை, "எழுத்துலகம்: அகமும் புறமும்" என்ற நூலை, தன் முதல் நூலாக இந்தத் தமிழ் உலகிற்குப் படைக்கிறாள். 

அவள் எழுத்து ஒவ்வொன்றும் அறிவின் கணைகள்; தமிழ் காக்கும் போர் முரசு. நாளைய உலகின் வழிகாட்டி..

கட்டியம் கூறி வரவேற்போம்.

வா மகளே வா!
தரணி போற்ற தமிழ் காப்பாய்!
தமிழர் நோய் தீர்ப்பாய்!
பரவட்டும் உன் புகழ் .

கட்டுரையாளர்:
லட்சுமி ஆர்.எஸ்,
எழுத்தாளர்&ஆசிரியர்,
மதுரை.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு - மகாராசன்


தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.

வேளாண் மரபும், கூத்து மரபும், எழுத்து மரபும் சார்ந்த வாழ்வியல் பின்புலமானது திரு சோ.தர்மன் அவர்களைத் தமிழ் இலக்கியப் பேருலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக மிளிரச் செய்திருக்கிறது. தூர்வை, கூகை, சூல், வௌவால் தேசம், பதிமூனாவது மையவாடி போன்ற பெருங்கதைப் புனைவுகளின் வழியாகவும், பல்வேறு சிறுகதைகளின் வாயிலாகவும் தேர்ந்த கதைசொல்லியாகத் தமிழ்ச் சமூகத்தில் அறியப்பட்டிருக்கும் திரு சோ.தர்மன் அவர்கள், பல்வேறு நாடகப் பனுவல்களையும் எழுதியிருக்கிறார். வானொலி நாடகங்களாகவும் அவை ஒலிபரப்பாகி இருக்கின்றன. 

விவசாயி, பஞ்சாலைத் தொழிலாளி, தொழிற்சங்கவாதி, கதையாசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், பண்பாட்டு வழக்காற்று ஆய்வாளர் எனும் பன்முகப் பரிமாணங்களோடு திகழும் திரு சோ.தர்மன் அவர்கள், தமிழ் மரபின் சாயலை உள்வாங்கிய நவீனக் கவிதைகளையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். அவ்வகையில், கவிஞர் எனும் பரிமாணத்தையும் உள்பொதித்து வைத்திருந்தவர்தான் திரு சோ.தர்மன் அவர்கள். 

தமிழில் அறியப்படும் பெரும்பாலான எழுத்தாளர்கள் கவிதை எனும் வடிவத்தில்தான் முதலில் எழுதத் தொடங்கியிருப்பார்கள். அதன்பிறகுதான் சிறுகதை, புதினம் எனப் புனைகதை வடிவங்களில் நுழைந்திருப்பார்கள். அவ்வாறுதான் திரு சோ.தர்மன் அவர்களும் எழுத்துலகிற்குள் நுழையும்போது கவிதை எனும் வடிவத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆனாலும், கவிதை வடிவத்தைக் காட்டிலும் கதை சொல்லல் வடிவம்தான் அவரது படைப்பாக்கங்களை வளப்படுத்துவதற்குத் தோதாக அமைந்திருக்கிறது எனக் கருதியிருக்கிறார். அதாவது, கவிதையில் சொல்ல முடியாததைச் சிறுகதையிலும், சிறுகதையில் சொல்ல முடியாததைப் பெருங்கதைகளிலும் சொல்வதற்கான விரிந்த பரப்பும் சுதந்திரமும் இருக்கின்ற காரணத்தால், கவிதைப் படைப்புகளைக் காட்டிலும் புனைகதைப் படைப்புகளை எழுதுவதற்குத்தான் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். 

இதைக் குறித்து அவர் கூறுகையில், "எல்லோரும்போல நானும் கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இளம் வயது. அந்தநேரம் வயதுக்கேற்ற கவிதைகளைத்தான் எழுதினேன். கவிதை என்றால் என்ன என்று தெரியாமலேயே நான் கவிதை எழுதிக்கொண்டே இருந்தேன். இருபத்தைந்து வயதில் காதல் கவிதைகளும் இயற்கை வருணனைகளும்தான் எழுத முடிந்தது. என்னுடைய வாசிப்பு அதிகமாக அதிகமாக நான் நினைத்ததைக் கவிதையில் சொல்ல முடியாத ஒரு சூழல் உருவாகியது" என்கிறார். 

மேலும், சங்க இலக்கியங்கள் படித்த பிறகு நாம் எழுதினதெல்லாம் கவிதையா? என்று நினைக்கத் தோன்றியது. கவிதைகள் எவ்வளவு பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் வர்ணிப்பதுதான் கவிதையாக இருக்கிறது. அதனால்தான் நான் கவிதையை விட்டுவிட்டுக் கதைக்குள் சென்றேன். உரைநடைக்குள் போனால் நமக்கு விசாலமான இடம் கிடைக்கிறது. கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம்" என்கிறார். 

தினமணி, தினக்கதிர், நீலக்குயில், ஆனந்த விகடன், அக்கு, ழகரம், சதங்கை போன்ற இதழ்களில் தொடக்க காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. ஆயினும், அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவரது கைவசத்தில்கூட இல்லாமல் போயின. புனைகதை எழுத்துகளில் தீவிரம் காட்டியபிறகு எப்போதாவது அவர் எழுதிய கவிதைகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வந்திருக்கிறார். 

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளையும், சமூக ஊடகங்களில் அவர் பதிவிடும் கருத்துகளையும், அவரது சொற்பொழிவுகளையும் ஒருசேரக் கவனிக்கையில், அவ்வப்போது அவர் எழுதிய கவிதைகளும் தனித்துவச் சாயல் கொண்ட புலப்பாட்டுத் தொனியையும், கவிதைப் பொருண்மையின் ஆழத்தையும் கொண்டிருப்பதை உணர முடியும்.

புனைகதை எழுத்துகளில் அவர் விவரிக்கும் கதைக்களமும் கதை மாந்தர்களும் வாழ்க்கைப்பாடுகளும்தான் அவரது கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவர் வாழும் நிலமும் அவரது அனுபவங்களுமே அவரது கவிதையின் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு கதைகளையும் படித்த பிறகு ஏற்படுகிற வாசிப்பு உணர்வின் மனநிறைவும் அனுபவப்பாடுகளின் உள்வாங்கலும் அவரது கவிதைகளைப் படிக்கிறபோதும் ஏற்படுகின்றன. எனினும், கவிதை எனும் இலக்கிய வடிவத்திற்கான பொருண்மைச் செறிவும், மனித வாழ்வின் அனுபவப் போக்கைக் குறித்தத் தத்துவச் செறிவும் உள்ளீடாகப் பரவிக் கிடக்கின்றன.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவற்றையும் ஒருசேர வாசிக்கும்போது, அக்கவிதைகள் யாவும் தமிழ்த் திணை இலக்கிய மரபின் நவீனக் கவிதை வடிவமாய் இருப்பதை அறிய முடியும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபின் வேரும் நவீன இலக்கியத்தின் துளிருமாய் அவரது கவிதைகள் மனித வாழ்வின் பச்சையத்தைப் பேசுகின்றன.

தமிழ்க் கலை இலக்கிய மரபானது, பன்மைத் தன்மைகளை உள்ளீடாகக் கொண்டிருக்கும் தனித்துவம் நிரம்பியது. மேலும், ஒற்றைத் தன்மையோ அல்லது ஒரு போக்குத் தன்மையோ கொண்டிராமல், பன்முக மரபுகளையும் செழிக்கச் செய்திருக்கும் நெடிய வரலாற்றையும் கொண்டிருப்பதாகும்.

நிலம் சார்ந்த பல்வேறு வட்டார மரபுகளையும், தொழில் வழக்காறுகளையும், அனுபவப்பாடுகள் நிரம்பிய மனித வாழ்வியலையும், பல்வேறு வகைப்பட்ட மனித உணர்வுகளையும், சமூகப் பண்பாட்டுக் கோலங்களையும் கலை இலக்கியப் படைப்புகளாக வடிவமைக்கும்போது, அவற்றின் உள்ளடக்கம், உள்ளடக்கத்தில் வருகிற மனித வாழ்வியல், வெளிப்பாட்டு வடிவம், படைப்புக் கண்ணோட்டம் போன்றவை இருவேறு புலப்பாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கின்றன. 

அதாவது, வாய்மொழி நிகழ்த்து வடிவங்களைக் கொண்ட நாட்டுப்புறப் படைப்பாக்க மரபுகளாகவும், எழுத்து வடிவங்களால் நிலைப்படுத்தப்பட்ட செவ்வியல் படைப்பாக்க மரபுகளாகவும் வடிவமைந்திருக்கின்றன. அவ்வகையில், வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும் பாங்கை, தமிழ் கொண்டிருக்கிறது. 

இத்தகைய இருவேறு மரபுகளும் இணைகோட்டு மரபாகவும், கலை இலக்கியக் கோட்பாட்டு மரபாகவும்கூட செழுமையடைந்திருக்கின்றன. இத்தகைய இருவேறு மரபுகளைத்தான்

''நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்''

என்கிறது தொல்காப்பியம். 

மேற்குறித்த சூத்திரத்திற்கு உரையெழுதும் இளம்பூரணர், "நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது" எனக் கூறுகின்றார்.

மனித வாழ்வின் அகப்பாடுகளையும், மனிதரைச் சூழ்ந்திருக்கும் புறவுலகையும் புலப்படுத்துவதுதான் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள் ஆகும். இத்தகைய இலக்கியத்தைப் புனைவாகவும் புனைவுமொழியிலும் புலப்படுத்துவதை 'நாடக வழக்கு' என்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நாடக வழக்கானது செய்யுள் மொழியாகவும், பிற்காலத்தில் புனைவுமொழியாகவும் வடிவமைந்திருப்பதைக் குறிக்கிறது. 'உலகியல் வழக்கு' என்பது, மனித வாழ்வியலை உள்ளதை உள்ளபடியாகப் புலப்படுத்தும் நடப்பியல் தன்மையையும் பேச்சுவழக்கு மொழி வடிவத்தையும் குறிப்பதாகக் கருதலாம்.

மக்களின் வாழ்க்கையில் காணப்பெறும் பேச்சு வழக்கும், புனையப்படும் செய்யுள் வழக்கும் இலக்கியத்தில் பதிவாகின்றன. அதனால் இலக்கியத்தில் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்து காணப்பெறுகின்றன. இத்தகைய நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் உருவாக்கப்படும் இலக்கியப் படைப்பாக்கத்தையே 'புலனெறி வழக்கம்' எனச் சுட்டுகின்றனர் தமிழ் இலக்கண மரபினர்.

புலம், புலன், புலனெறி, புலமை, புலவர், புலயர் போன்ற சொற்கள் நிலம், ஐம்புலன்கள், அறிவு போன்ற பொருண்மையைச் சுட்டக்கூடியவை. நிலம் சார்ந்த பின்புலத்தில் பெறப்பட்ட ஐம்புல நுகர்வைப் புலப்படுத்தும் மன அறிவே புலனெறி என்பதாகும். 

இத்தகைய அறிவால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணப் படைப்பாக்க நெறியே 'நூலறிவுப் புலம்' எனப்படுகிறது. நூலறிவுப் புலத்தை வளர்த்துக் கொண்டவரே புலவர். புலவர்களின் படைப்பாக்கத் திறமே புலமையாகும். அத்தகுப் புலமையால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணங்கள் யாவும் புலம் - புலன் என்பதாகும். அதனால்தான், ''புலன் நன்குணர்ந்த புலமையோரே'' எனத் தொல்காப்பியரும்,

''புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்'' எனப் பனம்பரனாரும் சுட்டுகின்றனர்.

'புலன்' என்னும் இந்தச் சொல் இலக்கிய இலக்கண நூலறிவைக் குறிக்கும் அதேவேளையில், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகவும் குறிக்கப்படுகிறது. ''சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந்தோரே'' என, எட்டுவகை இலக்கிய வனப்புகளுள் ஒன்றாகப் புலன் என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இந்த நூற்பாவின் முதல் சீரினைத் 'தெரிந்த' என்ற சொல்லாகப் பாடம் கொள்கிறார் இளம்பூரணர். 'தெரிந்த மொழியால்' என்று பாடங்கொண்டதைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் 'சேரி மொழியால்' என்றே பாடங்கொள்கின்றனர்.

இந்த நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், "வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு, ஆராய வேண்டாமல் பொருள் தோன்றுவது புலனென்னும் செய்யுள் என்று உரைக்கின்றார். அதேபோல, செவ்விதாகக் கூறி, ஆராய்ந்து காணாமைப் பொருள் தொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பது கண்டு கொள்க" என்று உரை விளக்கம் தருகின்றார் பேராசிரியர். இக்கருத்தை வழிமொழிந்தேதான் நச்சினார்க்கினியரின் உரைக் கருத்தும் அமைந்திருக்கிறது.

அதாவது, "செவ்விதாகக் கூறப்பட்டு, ஆராய்ந்து காணாமை, பொருள் தானே தோன்றச் செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலிய வெண்டுறைச் செய்யுளென்று கொள்க" என்று பேராசிரியரின் கருத்தை ஒட்டியே பொருள் உரைக்கின்றார் நச்சினார்க்கினியர்.

மேலும், "பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டு, குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல், தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள்" என்று ஆய்வுரை வழங்குகின்றார் க.வெள்ளைவாரணர்.

புலன் என்பதற்குத் தொல்காப்பியம் தருகிற கருத்தும், அந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் தந்திருக்கிற உரைக் கருத்துகளும் உலகியல் வழக்கான பேச்சு வழக்கைத்தான் குறிக்க வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட்டார வழக்கு, சிற்றூர்ப் பேச்சு வழக்கு, கிராமிய வழக்கு எனப்படுகிற நாட்டுப்புற வழக்கு என்பதைத்தான் குறிப்பதாகக் கருத முடிகிறது. அந்தவகையில், புலன் என்பது எல்லோர்க்கும் பொருள் தெரிந்த சொல்லால் அமைக்கப்படும் இலக்கியம் என்பதாகக் கொள்ளலாம். தமிழ்ச் சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகக் குறிக்கப்படும் பள்ளு நூல்கள் அனைத்தும் புலன் என்னும் வனப்பைச் சார்ந்த இலக்கியங்கள்தான். பெரும்பான்மை மக்கள் மொழியிலும் வட்டாரத் தன்மையிலும் அமைந்திருக்கும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே புலன் என்னும் இலக்கிய வனப்பின் விளைச்சல்கள்தான்.

மேலும், "புலனென்பது, இயற்சொல்லால் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு" என்று யாப்பருங்கலவிருத்தி ஆசிரியர் அமிதசாகரர் மொழிகின்றார். அதாவது, உலகியல் வழக்கில் இயம்பும் சொற்களால் இயற்றப்படும் இலக்கிய வனப்பே புலன் என்பதாகும். அவ்வகையில், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவும் தமிழ் இலக்கிய மரபின் 'புலன்' எனும் வனப்பைச் சார்ந்தவையாக முகம் காட்டுகின்றன. அதாவது, தற்காலத்திய நவீனக் கவிதைகளில் பெரும்பான்மையாகத் தென்படுகிற இருண்மையோ, பூடகமோ, ஒளிவுமறைவோ, பாசாங்குத்தனமோ எதுவுமின்றி, மிக எளிமையான புலப்பாட்டு நெறிகளைக்கொண்ட நவீனக் கவிதைகளாகத்தான் அவரது கவிதைகள் வடிவமைந்திருக்கின்றன. 

எளிமை மிக இயல்பானது; நுட்பமானது; அழகானது. வாய்மொழி இலக்கிய மரபில் காணப்படுகிற பாட்டுகளும் கதைகளும் பழமொழிகளும் இன்ன பிற நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே எளிமையானதும் நுட்பமானதுமான மொழிப் புலப்பாட்டையும் அழகியலையும் கொண்டிருப்பவை. அதேபோன்றுதான், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் வெள்ளந்தியாகவும் வாஞ்சையாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கின்றன. மேலும், திரு சோ.தர்மன் அவர்களின் கவிதை மொழியானது, தனித்துவக் கவிதை அழகியல் வடிவத்தையும் நுட்பமான பொருண்மை ஆழத்தையும் பெற்றிருக்கிறது. 

தொல்காப்பியம் குறிப்பிடுகிற 'நாடக வழக்கு' என்பதற்குப் புனைவுச் செய்யுள் அல்லது புனைவுமொழி இலக்கியம் என்பதான பொருளில்தான் உரையாசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். நாடக வழக்கு என்பதை, நாடக நிகழ்த்து வடிவங்களில் இடம்பெறுகிற 'உரையாடல் பாங்கு' அல்லது 'உரையாடல் வடிவம்' என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்புண்டு. உலகியல் வழக்கு என்பதற்கும், புலன் என்பதற்கும் விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள், அதற்குச் சான்றாக 'விளக்கத்தார் கூத்து' எனும் நிகழ்த்துப் பனுவல் ஒன்றைச் சுட்டுகின்றனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் விளக்கத்தார் கூத்து என்பது, அவர்கள் காலத்தில் வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாக இருந்திருக்கிறது. அக்கூத்து நூல் எல்லோர்க்கும் பொருள் இனிது புலனாகியிருக்கிறது.  

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், நாடகக்கலை மரபிலும் கூத்துக் கலை மரபிலும் இடம்பெறுகிற உரையாடல் பாங்கு வடிவத்திலேயே அமைந்திருக்கின்றன. கூத்து மற்றும் நாடக நிகழ்த்து மரபில் இடம்பெறுகிற நடிப்புக் கூறுகள் நிகழ்த்துக் கலை வடிவத்தையும், அவற்றில் இடம்பெறுகிற உரையாடல் பகுதிகள் இலக்கியக் கலை வடிவத்தையும் ஒருசேரக் கொண்டிருப்பவை. நாடக மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறுகிற கதைமாந்தர்களின் உரையாடல் பாங்கு வடிவத்தை இலக்கியப் படைப்பாக்கத்தில் பயன்படுத்துகிறபோது இலக்கியப் பனுவலும் ஓர் நிகழ்த்துப் பனுவலாய் வடிவம் கொள்கிறது. அதாவது, கவிதைக்குள் இடம்பெறும் உரையாடல்கள், கவிதை எனும் இலக்கியப் பனுவலை நிகழ்த்துப் பனுவலாகவும் மாற்றிவிடுகின்றன. 

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், கவிதை எனும் இலக்கியப் பனுவலாகவும் இருக்கின்றன; கவிதைகளுக்குள் இடம்பெறும் உரையாடல்கள் நிறைந்த நிகழ்த்துப் பனுவலாகவும் அமைந்திருக்கின்றன. அவரது இளவயதுக் காலகட்டத்தில் அமையப்பெற்ற கூத்து மரபின் பின்புலச் சூழல்தான், கவிதைகளுக்குள் உரையாடல் பாங்கு இடம்பெற்றதற்கான காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

வேளாண் தொழில் மரபோடு கூத்து மரபும் ஊடாடிக் கிடந்த தமது குடும்பப் பின்புலம் குறித்து அவர் கூறும் பகுதிகள் இங்கு கவனிக்கத்தக்கவை. "கூத்துக் கலையைப் பார்க்க எனது பதின்மூன்று வயதுவரை வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருந்தது. எனது தந்தை என்னை சிறுவயதிலேயே கூத்து நடக்கும் இடத்திற்கெல்லாம் அழைத்துக்கொண்டு போய் நடிப்பார். எல்லா ஊர்களுக்கும் போவார்கள். அவர்கள் ஆடும் ஆட்டம், காட்சி, பாடல்கள் எல்லாமே சேர்ந்துதான் எனக்குள் வாசிப்பிற்கு உண்டான விதை விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களின் கூத்துக் கலையை எனது பதின்மூன்றாவது வயதிற்குப்பின் நிறுத்தி விட்டார்கள். அப்போது என் மனதிற்குள் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடம்தான் என்னை வாசிப்பிற்குள் நுழைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த உலகத்தில் யாருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். நான் ராமனின் தோள்களில் பயணப்பட்டிருக்கேன். சீதையின் மடியில் படுத்து உறங்கியிருக்கேன். அனுமனின் விகார முகமும் நீண்ட வாலும், மாயமான் மாரீசனின் கொம்புகளும் என் விளையாட்டுப் பொருட்கள். ஒயில் கும்மி என்று சொல்லக்கூடிய ராமாயணக் கூத்தில் என் அய்யாதான் ராமர் வேசம். என் மாமா லட்சுமணன் வேசம். சின்னைய்யா சீதை வேசம். இவர்கள் தூக்கி விளையாடும் செல்லப்பிள்ளையாய் நான். கடைசிவரை கூத்தைக் கடவுளாகப் போற்றி ராமனாகவே வாழ்ந்து மறைந்தவர் என் அய்யா. அவர் என்னுள் விதைத்துச் சென்ற கதைகளையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கேன். 

வெற்றிலையை இரண்டாக மடித்து, காம்பு கிள்ளி, நரம்பை உரித்து, நான்காய் மடித்து, அண்ணாந்து வாயில் வைத்தவுடன் பீமனும் கீசகனும் யுத்தம் செய்யும் கதையை எங்கள் அய்யா சொல்லும் அழகே அழகு" என்கிறார்.

நாடகம் மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறும் உரையாடல் பாங்கு, சங்க காலத் திணை இலக்கிய மரபிலும் காணக்கூடிய வடிவமாக இருக்கின்றது. அத்தகைய உரையாடல் பாங்கைத் தான் 'கூற்று முறை' எனக் குறிப்பிடுகின்றனர். சங்க கால அகப்பொருள் சார்ந்த திணைநிலைக் கவிதைகள் யாவும் கதை மாந்தர் கூற்றுகளாகவே அமைந்திருக்கும் பாங்குடன் திகழ்கின்றன.

உரையாடல் பாங்கு அல்லது கூற்று முறைப் பாங்கு, கவிதைப் புலப்பாட்டின் ஓர் உத்தி முறையாகவே பயின்று வந்திருக்கிறது. கவிதைப் படைப்பின் பொருண்மையை விளக்கப்படுத்தும் வகையில் கதை மாந்தர் கூற்றுகளாகவே தமிழ் மரபின் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தலைவன், தலைவி, தோழி, செவிலி, பார்ப்பான், பாங்கன், பாணண், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், ஆகிய பன்னிரு மாந்தர்கள் அகப்பொருள் கூற்று நிகழ்த்துதற்கு உரியர் என்கிறது தொல்காப்பியம். மேற்குறித்த கதை மாந்தர்கள் கூறுவது போலவே சங்க கால அகப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

அகப்பொருள் செய்திகளைக் கதை மாந்தர் கூற்றுமுறையில் அமைத்துப் பாடும்போது, 'ஒருவர் கூற்று' முறையில் (monologue) அமைத்துப் பாடுதல், 'இருவர் தம்முள் மாறி மாறி உரையாடும்' முறையில் (Dialogue) அமைத்துப் பாடுதல் எனும் இருவகைக் கூற்று முறையில் அக்காலப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ஓர் அழகிய நாடகக் காட்சியைக் கவிதைக்குள் கொண்டு வந்து நிறுத்தும்படியாகத்தான் கூற்று முறைகளும் உரையாடல் பாங்கும் அமைந்திருக்கின்றன. 

ஒருவரோ இருவரோ அல்லது பலரோ கூறுவதுபோல கவிதைக்குள் கூற்றுகள் இடம்பெறலாம். எனினும், இருவரோ அல்லது ஒருவரோ கூறுவதுபோல கவிதை அமைவதும், குறைந்தளவு ஒருவரது கூற்றாவது அகப்பொருள் கவிதையில் அமைவதும் சிறப்பாகக் கருதப்பட்டிருக்கிறது. சங்க கால அகப்பாடல்கள் பலவும் 'ஒருவர் கூற்று' முறையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒரு கூற்று முறையில் அமைந்த கவிதைகளை ''நாடகத் தனிக்கூற்று வகைப் பாடல்கள் (Dramatic Monologues)" என்கிறார் அறிஞர் மு.வரதராசனார்.

சங்க கால அகப்பொருள் இலக்கியப் புலப்பாட்டு நெறியான கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதைகளின் நவீன வடிவமாகத்தான் திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் அமைந்திருக்கின்றன. அகப்பொருளை மட்டுமல்ல, சமூக வாழ்வின் புறப்பொருளையும்கூட கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதை வடிவத்தில் புலப்படுத்தியிருக்கிறார். இத்தகையப் புலப்பாட்டு நெறிதான் இவரது கவிதைகளின் தனித்துவ வடிவமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

நாடக உரையாடல் பாங்கில் அமைந்திருக்கும் அகத்திணைக் கவிதைகளின் குறிப்பான தன்மை  

"சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்" என்பதாகும். அதாவது, கவிதையை வாசிக்கிற ஒருவர் இந்தக் கவிதை இன்னாருடைய அனுபவம்; இன்னாரைப் பற்றியது என்பதான தரவுகளைப் பெற்றுவிடக் கூடாது. மாறாக, கவிதையில் பதியம் போட்ட உணர்வுகளை வாசகரும் உள்வாங்கி அசைபோட்டுக் கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும். இதையே 'அகப்பொருள் மரபு' என்கிறார்கள். அகப்பொருள் மரபில் கவிதைகளைப் பின்னுகிறபோது பல்வேறு உத்திகளைப் படைப்பாளர்கள் கையாண்டுள்ளனர்.  

அகப்பொருள் மரபிற்கெனச் சில இலக்கிய உத்திகளை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்ககால அகத்திணைக் கவிதைகள் வேறு வேறு பொருள்கோடலுக்கும் வழிவகுப்பதாக 'அகப்பொருள் உத்திகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் 'உள்ளுறை' மற்றும் 'இறைச்சி' ஆகியன குறிப்பிடத்தக்கவை.

"உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக" எனச் சொல்வது உள்ளுறை உத்தி. அதேபோல,

"இறைச்சிதானே பொருட் புறத்ததுவே" எனவும் சுட்டுகிறது தொல்காப்பியம். அதாவது, கவிதையின் நேரடிப் பொருள் என ஒன்று இருக்கும். அக்கவிதைவழிப் பெற்றுக்கொள்கிற மறைபொருள் வேறொன்றாக அமைந்திருக்கும். பொதுவாகவே சில சொற்கள் மேலோட்டமான பொருளையும் (Surface meaning) உள்ளீடான பொருளையும் (Deep Meaning) கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் வேறொன்றைச் சொல்லி, குறிப்பானதை விளக்கி நிற்கும் நுட்பம் கொண்டவை. இந்த இலக்கிய நுட்பத்திற்குத் துணை செய்யும் வகையிலே 'முதற்பொருள்' எனப்பெறும் 'நிலங்களும் பொழுதுகளும்' கவிதையில் பயின்று வரும். அதேபோல, நிலத்திலே காணலாகும் உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களும் பரவி நிற்கும். இதைக் 'கருப்பொருள்' என்கிறார்கள். ஆக, முதற்பொருளும் கருப்பொருளும் இணைந்த 'இயற்கைப் பின்னணி' அகத்திணைக் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.  

இயற்கைப் பின்னணி மூலமாகக் கவிதை செதுக்கி, மனிதர்க்கு உரித்தான செய்தியைச் சொல்கிறபோது 'உரிப்பொருள்' என்றாகிறது. ஆகக்கூடி, சங்க காலத்திய அகத்திணைக் கவிதைகள் யாவும் அய்ந்துவகை உரிப்பொருள்களைத் தன்வயம் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் கட்டியெழுப்பிய சொல்லாடல்களைக் கடந்து ஊடிழையாடிப் பார்க்கும்போது கவிதையின் நேரடிப் பொருளிலிருந்து வேறொன்றைப் புரிந்து கொள்ள முடியும்.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் நவீன வாழ்வின் போக்குகளையும், மனித அனுபவங்களையும்தான் பேசுபொருளாக முன்வைத்திருக்கின்றன. கரிசல் வட்டாரத்தின் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்டு, அவ்வட்டாரத்தின் உயிர்ப் பொருட்களையும் உயிரற்ற பொருட்களையும் கருப்பொருளாகக் கொண்டு, அவற்றின் மூலமாக ஒவ்வொரு கவிதையின் வாயிலாகவும் ஓர் உரிப்பொருளைப் புலப்படுத்துகிறார் திரு சோ.தர்மன்.

தாம் வாழும் வட்டார நிலம், குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மற்றும் பறவைகள், வெள்ளாமைப் பயிர்கள், குளக்கரை மரங்கள் மற்றும் தெய்வங்கள், தம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் யாவற்றோடும் உரையாடும் தொனியில் கூற்று முறையில் அமைந்த உரையாடல் பாங்கைத் தம் கவிதைகள் முழுக்கக் கையாண்டிருக்கிறார். 

நாடகக் காட்சியாய் விரியும் அவரது கவிதைகள் நவீனக் கவிதைக்கான படிமங்களைக் காட்டுகின்றன. அக்கவிதைகளில் பொதிந்திருக்கும் உள்ளீடான பொருண்மைகள் குறியீட்டுத் தன்மையுடனும் நவீனம் பெற்றிருக்கின்றன. அதாவது, திரு சோ.தர்மன் அவர்களது 

கவிதைகள் உரையாடல் பாங்கிலான கூற்றுகளையும், காட்சிப் படிமங்களையும், குறியீட்டுப் பொருண்மைகளையும் கொண்ட கவிதை வடிவத்துக்குள் நவீன வாழ்வின் போக்கைக் குறித்த எளிய தத்துவம் போல் போதித்துச் செல்கின்கின்றன.

அகம் சார்ந்ததாகவோ அல்லது புறம் சார்ந்ததாகவோ அல்லது எழுத்து மரபு சார்ந்ததாகவோ அல்லது வாய்மொழி மரபு சார்ந்ததாகவோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது "இலக்கியம் என்பது, எந்தக் காலத்திலும் நுாற்றுக்கு நுாறு வீதம் நேரடியான சமுதாயச் சித்திரம் அன்று. புற உலகை அதாவது, காட்சிகளையும் அனுபவங்களையும் எழுத்தாளர் அப்படியே சொல்லில் வடிப்பதில்லை. அனுபவ முழுமையிலிருந்து தற்செயலான, மேம்போக்கான அம்சங்களையெல்லாம் நீக்கிவிட்டு, அடிப்படையான சாராம்சத்தை அக உணா்வில் உரைத்து வகைமாதிரிக்குப் பொருத்தமான வடிவத்தில் உருவாக்குகின்றனர். இன்னொரு விதமாய்க் கூறுவதாயின், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள் புறநிலைப்பட்ட எதார்த்தத்தை அகநிலைப்பட்ட எதார்த்தமாக மாற்றியமைக்கின்றனா். 

மனிதனின் சமூக வாழ்க்கையே கலை இலக்கியம் அனைத்திற்கும் ஒரே அடிப்படையாய் இருப்பினும், அவை உருவாக்கிக் காட்டும் வாழ்க்கை கண்ணாரக் காணும் வாழ்க்கையைவிட வளமிக்கதாயும் உயிர்த் துடிப்புள்ளதாயும் அமைந்து விடுகிறது. வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிறப்பான உறவு இதுதான்" என, இலக்கியத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கவிதை உள்ளிட்ட எந்தவோர் இலக்கிப் படைப்புக்கும் உருவாக்கத்திற்கும் உள்ள நெய்திடும் உறவு இதுதான்.  

ஆக, அகம் சார்ந்தோ அல்லது புறம் சார்ந்தோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியமானது வாழ்வியல் சார்ந்தது எனினும், நடப்பியல் சார்ந்தோ அல்லது புனைவு சார்ந்தோ வெளிப்படுத்தப்படுவது என்றாலும், மொழியால் ஒப்பனை பெறுகிற கலை வடிவமாகவே முகம் காட்டுகிறது எனலாம்.  

பெருமரத்தின் தளிர் நுனிக்கும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வோ்களின் நுனி முடிச்சுகளுக்கும் ஒரு தொடுப்பு இருப்பதைப்போல, மரபுக்கும் நவீனத்திற்கும் தொடுப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் மொழியே வளப்பமுடன் செழிக்கும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபுக்கும் நவீனத்திற்கும் ஊடாடிப் பயணிக்கும் வாய்ப்பைத் தருவதாக திரு சோ.தர்மன் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது கதைப் படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறேன். அவரது கலை, இலக்கியம், சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தும் படித்தும் வருகிறேன். அவரது எழுத்துகள் எமக்கான படைப்புலக் கிளர்ச்சியையும் வாசிப்பின் நிறைவையும் தருகின்ற மிக நெருக்கமான எழுத்துகள். அவற்றைப் போலவே, அவரது கவிதைகளும் அவரது படைப்புப் பரிமாணத்தைக் காட்டுவதோடு தனித்துவக் கவிதை அழகியலையும் கொண்டிருப்பவை. 

திரு. சோ.தர்மன் அவர்களது புனைகதைப் படைப்புகள் நூல்களாக வந்திருப்பதைப் போலவே, அவரது கவிதைகளும் நூலாக வெளிவரவேண்டும் எனும் பெருவிருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது, "அதெல்லாம் கவிதையா என்பது தெரியாது. கவிதையில் பெரிதாக நாட்டமில்லை" என, கவிதை நூல் வெளியீடு பற்றிய தமது தயக்கத்தைத் தெரிவித்தார். எனினும், அவரது கவிதைகள் நூலாக வெளிவரவேண்டும் எனும் எமது பிடிவாதப் பேரன்பையும் வேண்டுகோளையும் தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டார். 

அவர் எழுதிய கவிதைகள் யாவற்றையும் தெரிவுசெய்து, செப்பமாக்கித் தொகுத்து, கவிதை நூல் வடிவத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதைப் பார்த்த பிறகுதான், கவிதைகள் யாவற்றையும் ஒருசேரக் கண்ட பிறகுதான் முழு மனநிறைவோடு தமது கவிதைகள் நூலாக்கம் பெறுவதற்கான இசைவைத் தந்தார் திரு சோ.தர்மன். 

சோ.தர்மன் கவிதைகள் எனும் இந்நூலை, தெரிவும் தொகுப்பும் செய்து பதிப்பித்துக் கொண்டுவருவதற்குக் கனிவுடன் இசைவளித்த திரு சோ.தர்மன் அவர்களுக்குப் பேரன்பையும் நன்றியையும் உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இந்நூலை, யாப்பு வெளியீடாகப் பதிப்பித்திருக்கும் திரு செந்தில் வரதவேல் அவர்களுக்கும், இந்நூலினை அழகுடன் வடிவமைப்பு செய்து தந்த திரு பிரபாகர் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளைக் கொண்டாடும் தமிழ்கூறும் நல்லுலகம், அவரது கவிதைகளையும் கொண்டாடும்; கொண்டாட வேண்டும் எனும் பெருவேட்கையோடு மட்டுமல்ல, அவரது கவிதைப் படைப்பாக்க ஆளுமையையும் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்வோடு இந்நூலைக் கொண்டுவருவதில் நிறைவும் மகிழ்வும் அடைகிறேன்.

தோழமையுடன்,
மகாராசன்.

*

சோ.தர்மன் கவிதைகள்,
தெரிவும் தொகுப்பும்: 
மகாராசன்,
முதல் பதிப்பு: சனவரி 2024,
பக்கங்கள்: 117,
விலை: உரூ 120/-
வெளியீடு: 
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி: மகாராசன்

 

மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார்.

படைப்பாக்கத்திலும் தமது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' எனும் கவிதைத் தொகுப்பையும் கொண்டு வந்திருக்கிறார்.

காடு கரைகளில் சுற்றித் திரிந்து, ஆடு மாடுகளை மேய்த்துத் திரும்பி, வெயிலேறிய வெக்கையில் வியர்த்துக் கிடந்து, கரிசல் தூசுகளோடும் சம்சாரி மனிதர்களோடும் உறவாடித் தளிர்த்திருந்த தெக்கத்தி ஆத்மாக்களின் வேர்த்தடங்களைக் கவிதை மொழியில் உயிர்ப்பித்திருக்கிறார் சத்தீஸ்வரன் அவர்கள்.

வாழ்ந்த வாழ்க்கையையும், வாழ்கிற மிச்ச வாழ்வையும் பாசாங்கும் பூடகமும் ஒப்பனையும் இல்லாமல் மொழியில் தூவிடும்போது துயர்மிகு சொற்களும் அழகியலாய்ப் படைப்பாக்கம் செய்துகொள்ளும் என்பதற்கு சத்தீஸ்வரன் கவிதைகள் மிகச்சிறந்த சான்றுகளாகும்.

வெறுமையும் வெயிலும் மண்டிய ஓரக்காட்டுத் திசையின் நிலப்பரப்பான திருச்சுழி, கமுதி, வீரசோழன், நரிக்குடி, காரியாபட்டி வட்டாரத்தின் நில வரைவியலும் மனித வாழ்வும் தமிழ்ப் படைப்பு வெளியில் சொல்லிக் கொள்ளும்படியாகப் பதிவாகியிருக்கவில்லை. இந்நிலையில், அந்த வட்டாரத்தின் நிலத்தையும் அந்நிலத்தின் தற்போதைய இருப்பையும், அது சார்ந்த மனித வாழ்வின் அசலையும் கொஞ்சமும் பிசசாமல் கவிதைகளுக்குள் கொண்டு வந்து மொழியால் ஆன ஆவணமாய் ஆக்கிவிட்டிருக்கிறார் சத்தீஸ்வரன்.

தமிழ்ப் படைப்பாக்க மரபில் முதல் பொருள் எனப்படுகிற நிலமும் பொழுதும் மிக முக்கியமானவை. இந்த நிலமும் பொழுதும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறு வேறு தன்மைகளைக் கொண்டிருப்பவை. முதல் பொருளான நிலத்தில் காண்பவைதான் கருப்பொருட்கள். நிலமும் கருப்பொருளும்தான் மனித வாழ்வின் உரிப்பொருளை வடிவமைக்கின்றன. அவ்வகையில், தமது வட்டாரத்தின் முதல் பொருளையும் கருப்பொருளையும் உரிப்பொருளையும் சமகாலச் சூழலின் தன்மையோடு படைப்பாக்கம் செய்திருக்கிறார் சத்தீஸ்வரன்.

தம்மைச் சுற்றிக் கிடக்கும் ஒரு வட்டார நிலப்பரப்பில் வாழ்வோரின் மனித உள்ளுணர்வுகள், அந்த வட்டார நிலத்தின் மடியிலேதான் தவிப்பாறத் தவிக்கும். சத்தீஸ்வரனின் ஆகப்பெரும்பாலான கவிதைகள், அவரை உயிர்ப்பித்திருந்த நிலத்தின் மீதான வாழ்வின் ஏக்கத்தையும், அந்நிலத்தின் மீதான பற்றுக்கோட்டை விட்டுவிடக் கூடாது எனும் தவிப்பையும், வாழ்ந்திருந்த அந்த நிலம் மிச்சம் மீதி எதுவுமில்லாமல் சிதைக்கப்படுவதைக் கண்டு பீறீடும் கோபத்தையும், செய்வதறியாது நிற்கும் கையறு நிலையையும் புலப்படுத்தும் பாங்கில் தனித்துவத்தைக் காட்டுகின்றன.

மிகப் பருண்மையான நிலப்பரப்பில் காணலாகும் மிக நுண்ணிய கூறுகளும், கண்டும் காணாது தனித்திருக்கும் நிலத்தின் பன்மைக் கோலங்களை அடையாளப்படுத்துவதில் விரிகின்ற காட்சிப் படிமங்களும், நிலத்திற்கும் அவருக்குமிருக்கிற மிக நெருக்கமான உறவும் ஊடாட்டமும் புழுதிக் காட்டின் நிறத்தோடும் மணத்தோடும் மொழிவழியாய்க் காண்பிக்கின்றன.

தமது வட்டார நிலத்தின் உயிர்ப்பான வாகுவை, கவிதைக்குள் பாவுகிற முயற்சியில் அவரது வாழ்வும் மொழியும் மிக இலகுவாகத் துணை நிற்கின்றன. கவிதைகள் வழியாகவும் ஒரு வட்டார நிலத்தின் வரைவியலை அசலாகக் காட்சிப்படுத்திக் காண்பிக்க இயலும் என்பதைத் தமது தொகுப்பின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் சத்தீஸ்வரன்.

மிச்ச சொச்சமாய்க் கைவசமிருக்கும் பூர்வீக நிலத்தை இழந்து, அந்நிலத்திலிருந்து மெல்ல மெல்ல அந்நியப்படுத்தப்படும் ஆத்மாக்களின் வலிமொழியாகத்தான் சத்தீஸ்வரனின் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' அமைந்திருக்கின்றன. 

"மழை மேகம் 
கூடும் காலம் தேடியலைந்து நம்பிக்கையின் 
கடைசித்துளியும் வற்றிப்போய் உயிரலைந்த நிலமெல்லாம் விலைசொல்லும் நிலைவந்து மேய்ச்சல் நிலம் தொலைத்த வெள்ளாட்டங்குட்டிகளை
போன விலைக்கு விற்றுவிட்டு பிழைப்பு வேண்டி நகரேகும் வழியில் ஒதுங்க 
இடமற்றத் தவிப்பின் மீதேறி பொழிந்து தள்ளுமிதை
பொல்லாத வானென்று சொல்லீரோ ஊரீரே…! "

"விளைச்சல் மறந்து 
காந்தும் மண்ணில் 
வெறும் வயிற்றில் 
வேகும் பசியாய் 
வெயில் தின்று வெந்து கிடக்கும் குண்டாற்று மணற்பரப்பு மண்ணின் துயர்கள் 
முள்ளாய் மாறி 
காடு கரையெல்லாம் 
கருவேல மரங்கள் 
வெக்கையும் வேதனையும் உரிப்பொருளாக வெந்து 
கறுத்த கரிசல் மண்ணில் தோண்டித் தோண்டி கற்கள் நட்டும் மண்காத்து நிற்கின்றன இன்னும் சில கோவணமிழந்த ஐயனார்சாமிகள்…"

எங்கோ தூரதேசம் தேடி
ஊரைப் புதைத்துவிட்டுப் போனதனால்
உல்லாங்குருவிகளின் 
ஓலம் கேட்டு
ஓடிவர நாதியில்லை.
பாழுங்கிணற்றின் படிக்கல்லருகே
இற்றுவிழக் காத்திருக்கும் மரக்கிளையில் கயிறு கட்டித் தொங்கிக்கொண்டிருப்பவனின்
காய்ப்பேறிய கைகளில்
இன்னமும்கூட
மிச்சமிருக்கலாம் ஒருபிடி மண்."

"கரிச்சான்களின் சத்தங்கூட அத்துப்போன கரிசக்காட்டின் செத்த மண்ணில் வெள்ளாமையத்து 
புதர் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேலை 
ஒரு அசப்பில் 
பரட்டப் புளியமரத்தையோ கடனுக்கு அஞ்சித் தொங்கிய தொத்த சம்சாரியையோ நினைவூட்டியபடி இருக்கலாம்.
மிச்சமிருக்கும் உசுருகளை நியாபகம் வைத்துக் கொள்ள 
இனி எதுக்கும் ஏலாது தோட்டந்தொரவு வித்து விலாசமத்துப் போய் 
ஏதோ ஒரு நகரத்து வீதியில் நாறிக் கிடக்கிலாம் 
நம் பிள்ளைகளின் பிழைப்பு."

"முச்சந்திச் சிலையென விறைத்துக் கிடக்கும் 
இப்பெரு நகரத்தின் 
ரேகைகளை அழித்து 
சாணி மொழுகிய வாசல்களின் பூசணிப்பூ வாசம் சுமந்து வைக்கோல் போர்களின் மேலெழும்பி 
வியர்வை படிந்த 
புழுதி கரைத்து 
அப்பாவின் கோவணம் 
நனைந்து சொட்ட வார்க்காரத்தோப்பில் 
மின்னல் வெட்டி ஈரம் வற்றிய நெகிழி நெஞ்சுக்குள் உயிர்ப்பூட்டிச் செல்லும் இம்மழை எனது சொந்த ஊரிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்."

இப்படியாக, பூர்வீக நிலத்திற்கும் பூர்வீக மனத்திற்கும் இடையிலான நுண் உணர்வுகளும், பூர்வீக நிலத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட அலைந்துழலும் வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைமொழிக்குள் உலவித் திரிகின்றன. குறிப்பாக, பூர்வீக நிலத்தின் கிராமிய வாழ்வின் பாடுகளும், புலம்பெயர்தலால் நேர்ந்த நகர வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைப் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. இரு வேறு நிலத்தின் வாழ்க்கைப் பாடுகள் தந்திருக்கும் மனித உள்ளுணர்வுகள் தனிமைப்பட்டும் துயர் நிரம்பியும் இருப்பதைத்தான் அவரது கவிதைச் சொற்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமது முதல் கவிதைத் தொகுப்பின் வாயிலாகவே பக்குவமான படைப்பாக்க மொழியையும் புலப்பாட்டு நெறியையும் வெளிப்படுத்தியிருக்கும் சத்தீஸ்வரன், தமது வட்டார நிலத்தின் வரைவியலை அடுத்தடுத்த படைப்பாக்கங்கள் வாயிலாக இன்னும் வளப்படுத்துவார் எனும் பெரு நம்பிக்கையை அவரது கவிதைகள் தந்திருக்கின்றன. தமது நிலத்தைக் கவிதை மொழிக்குள் உயிர்ப்பித்திருக்கும் சத்தீஸ்வரன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
*
தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்,
ஞா.சத்தீஸ்வரன்,
முதல் பதிப்பு 2022,
விலை உரூ 120/-
ஆம்பல் பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 7868934995.
*
கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்.
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

புதன், 7 பிப்ரவரி, 2024

என் பெயரெழுதிய அரிசி: அகிம்சைச் சொற்களால் மானுடம் பாடும் கவிதைகள் - அம்சம் மகாராசன்.


சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, சுவை மிக்க நவ கவிதை எனப் புதுக்கவிதை பாடியவர் பாரதி. அத்தகையப் புதுக்கவிதை மரபில், மானுடம் பாடும் நெறியை இக்காலத் தலைமுறையினருக்கு எளிமையாவும் கவித்துவமாகவும் உயிரோட்டமாகவும் கவிதைகளில் புலப்படுத்தும் கவிஞர்களுள் திரு கண்மணி ராசா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கண்மணி ராசா எழுதிய கவிதைகள் 'என் பெயரெழுதிய அரிசி' எனும் நூலாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.

மனிதர்கள் வாழும் இந்தச் சமுதாயத்தின் மலர்ந்த தருணங்களையும், மாறாத வடுக்களாய் அமைந்த தருணங்களையும், மனித ஆழ்மன உணர்வுகளையும் தமது கவிதைகளில் முழுமையான பாடு பொருள் ஆக்கியுள்ளார். 

சமூகத்தில் நாம் எந்தளவுக்குச் சூறையாடப்பட்டிருக்கிறோம்; ஒடுக்கப்பட்டிருக்கிறோம்; சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதையும், அவரது ஆழ்மனதில் படிந்த உணர்வுகளையும் கவிதைகளில் இறக்கி, மனப்பாரத்தையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

புதிதாக வாசிப்பவர்களுக்கும்கூட கவிதையை ருசித்துக் காண்பதற்கான வடிவத்தில் கவிதைகளைத் தந்திருக்கிறார். கவிதையின் உணர்வைத் தனதாக்கிக் கொண்டு, கவிதையிலிருந்து மீள முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் கண்மணி ராசா. 

செறிவான சொற்கள், காட்சிப் படிமங்கள், குறியீடுகள் , உவமைகள், உள்ளுறைகள் போன்ற உத்திகளைத் தனதாக்கிக் கொண்டு எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில், அனைத்துத் தரப்பு வாசிப்பாளர்களுக்கும் பொதுவானதாகவும், உலகத்தில் நிலைத்திருக்கும் சமூக நிலைப்பாட்டையும் பொதுவியலாய் எழுதியுள்ளார் கண்மணி ராசா. 

கவிஞருக்குச் சமூகம் கொடுத்திருக்கும் உணர்வையும் வலியையும் கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் கடத்தியுள்ளார் கவிஞர். தான் வாழும் சமுதாயம், நம் முன்னோர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள், பசி, வறுமை, இரக்கம், கருணை, அடக்குமுறை, காதல், அன்பு, கனவு, இழப்புகள், நம்பிக்கை, ஏமாற்றம் போன்ற உணர்வுகளுக்குள் வாசகர்களையும் உறையச் செய்திருக்கிறார் கவிஞர்.

கவிஞரின் உருவத்தைப் போன்றும் உள்ளத்தைப் போன்றும் எளிமையான சொற்களும் ஆழமான உணர்வும் காத்திரமான உணர்வுகளும்தான் இவரது கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன. இவரது பெரும்பாலான கவிதைகள் அகிம்சைச் சொற்களையே கொண்டிருக்கின்றன. மனிதத்தின் மீதான அன்பின் சொற்களையே அவரது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். 

இவரது கவிதைகளின் வடிவம் எளிது என்றாலும், அவை கொடுக்கும் உணர்வும் அதன் தாக்கமும் கனமானவை. கவிதைகளைப் படிப்பவரை எளிதில் தட்டியெழுப்பி, சமகாலச் சமூகத்தையும் முந்தைய தலைமுறையினர் வாழ்வையும் எளிதில் நினைவூட்டி ரெளத்திரம் கொள்ள வைக்கின்றார் கவிஞர்.

"பொழுது சாய்ந்ததும் தெரிய
 செவ்வானம் அல்ல;
அது பொன்னுலகம்.
போராடினால்தான் கிடைக்கும்".

"கொக்கே
கொக்கே
முத்துப் போடு..!
கை நகங்களை
காட்டியபடியே
ஓடினர் குழந்தைகள்
ஐயோ...!
அது குண்டு போடும் ...
என்றலறியபடியே 
குழியைத் தேடினாள் 
அகதிக் குழந்தை".

"நீர் மாலைக்கு 
பொட்டப் புள்ளைக வாங்கம்மா...! எனும் குரல் கேட்டு,
சந்தனம் அப்பிய
கண்களிலிருந்து
சடாரென வழிந்தது
முன்னரே குளிப்பாட்டிய
தண்ணீரா ...?
அதுவரை அடக்கி வைத்த
கண்ணீரா ...?
இன்னமும் 
தவிக்கிறேன் நான்".

இப்படி, பகட்டில்லாத சொற்கள் மூலம் வலியை வாசகரின் மனதிற்கு அப்படியே நுழைக்கிறார்.

"இந்தக் கவிதையிலிருக்கும்
துயரம்
நீங்கள் கண்டதுதான்.
அப்புறமேன்
இந்தக் கவிதைக்கு 
வந்த கோபம் 
உங்களுக்கு 
வரவேயில்லை...?"

நம் மகிழ்ச்சியையும் வாழ்வையும் தொழிலையும் இழந்து ஏதிலியாய் ஆகிக் கொண்டிருக்கிறோம். நமது புழங்கு வெளியையும் புழங்கும் சொற்களையும் உணவையும் வரலாற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவிதைக்கான ரௌத்திரத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

"ஆனாலும்
எவரும் அறியாதபடி
எங்கள் எல்லோரிடமும் 
இருக்கிறது 
கண்ணகியின் 
இன்னொரு மார்பு".

"பசி வந்தபோது 
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது.
பசி வந்தபோது 
என் அப்பாவிடம் 
நெல் இருந்தது.
பசி வருகையில்
என்னிடம் ரேஷன் அரிசி இருக்கிறது. 
இனி
பசி வரும் போது 
என் மகனிடம் இருக்கும்...?"

"புழுக்கமாய் 
இருந்தாலும் சரி
பூட்ஸை அணிந்து கொள்.
எவ்வளவு நேரமானாலும் 
பரவாயில்லை.
மேலத்தெரு வழியாகவே 
பள்ளிக்குப் போ!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து அடித்தார்கள் 
உன் பாட்டனை".

"நகரத்து வீதிகளில்
நடந்து நடந்து
மகிழ்கிறான் 
சேரியிலிருந்து வந்தவன்
செருப்பணிந்த கால்களோடு".

"அடுப்பு வேலையில்
அவளுக்கு உதவியதில்லை.
ஆனாலும்,
அருமையாகச் சமைப்பேன் பெண்ணியக் கவிதை."

இப்படியாக, மிக எளிய நடையில் ஆழமான கருத்துக்களை ஒவ்வொரு கவிதையிலும் புலப்படுத்தியுள்ளார். கவிதைகளைப் படிக்கும்போது, அவற்றுள் தங்கி அனுபவித்து, அந்த உணர்வின் வழியில் உணர்வையும் வலியையும் அனுபவித்து, அதிலிருந்து வெளிவர ஒரு நிமிடம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் நான் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்த கவிதை நூல் இதுவென்றுதான் சொல்ல வேண்டும். 

கவிஞரின் சிந்தனையை, அவர் பார்க்கும் உலகத்தை, அவரது உணர்வை, எழுத்தில் யாவரும் ஏற்கும் வண்ணமாய் நிதானமான சொற்களைக் கொண்டு ரௌத்திரமான கருத்துக்களையும் அகிம்சை முறையில் எடுத்துரைக்கும் கவிதை நூலாக என் பெயரெழுதிய அரிசி அமைந்திருக்கிறது. 

கவிஞர் கண்மணி ராசா அவர்களுக்கு வாழ்த்துகள்.

*

என் பெயரெழுதிய அரிசி,
கண்மணி ராசா,
முதல் பதிப்பு 2023,
வாசக சாலை பதிப்பகம்,
விலை: 130/-
*
கட்டுரையாளர்:
திருமதி அம்சம் மகாராசன்,
முதுகலை ஆசிரியர்,
செம்பச்சை நூலக நிறுவனர்.



தமிழ் வேறு; திராவிடம் வேறு. ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக: மொழி ஞாயிறு பாவாணர்.

கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சி இன்மையாலும் தமிழை திராவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லாதிருந்தது. இக்காலத்திலோ ஆராய்ச்சி மிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் பிற இனமொழியாளர்க்கும் வேறுபாடு இருப்பதனாலும், தமிழென்றும் பிற இன மொழிகளையே (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவற்றையே) திராவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாதது.

தமிழ் தூய்மையான தென்மொழி என்றும், திராவிடம் என்பது ஆரியம் கலந்த தென்மொழிகள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரிந்த பின் மீண்டும் பாலாகாதது போல், வட மொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. 

வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். ஆதலால், வடசொல் சேரச்சேரத் திராவிடத்திற்கு உயர்வு. அது தீரத் தீரத் தமிழிற்கு உயர்வு.

திராவிடம் என்ற மொழிநிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும். திராவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

இங்ஙனம் வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழிற்கும் ஒருசிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது. ஆதலால், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல்கூடாது. 

திராவிடம் அரை ஆரியமும், முக்கால் ஆரியமும் ஆதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும்; தமிழனும் கெடுவான். பின்பு தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னும் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்றக் கொள்கையைக் கடைபிடித்துத் தமக்குத் தாமேயும் முட்டுக்கட்டை இட்டுக் கொண்டது. இது நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை. தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை.

தமிழ், சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு; திராவிடம் வேறு. தமிழையும் திராவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையும் கலப்பது போன்றது. 

வடமொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான்.

தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன், ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக. 

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது “மொழி பெயர் தேயம்” என்றனர் முன்னோர். “மொழி பெயர் தேசத்தாயிராயினும்” என்பது குறுந்தொகை (11). 

தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம் எனத் திரிந்தது. ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்), பவழம் - ப்ரவாளம் (வ), பித்தளை - இத்தடி (தெலுங்கு), குமி - குலி (தமிழ்).

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் “த்ராவிட சாஸ்த்ரம்” எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடு கூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க, தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே வாழ்வுயர்ச்சி காணும் வழி. தமிழ் வாழ்க! 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*



தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506