ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இந்திர அடையாளம் - ஆரியத்திற்கு எதிரான தமிழர் அடையாளம்: மகாராசன்.


தமிழர் மரபில் பன்னெடுங்காலமாக நிலவியிருக்கும் பல்வேறு பண்பாட்டு மரபுகளை அழித்தொழித்து, ஆரியத்தின் பண்பாட்டு அடையாளங்கள் திணிக்கப்பட்டு வந்தாலும், ஆரிய வைதீக அடையாளங்களிலிருந்து விலகியும் வேறுபட்டும் முரண்பட்டும் காணப்படுகிற பண்பாட்டு அடையாளங்கள் தமிழர் மரபில் இன்னும் நிரம்ப இருக்கின்றன. தமிழர் மரபின் அத்தகைய அடையாளங்களுள் ஒன்றுதான் இந்திர அடையாளமும்.


வேளாண்மை உழவுத் தொழிலின் பன்னெடுங்கால வரலாற்றுத் தொடர்ச்சியிலும், வேளாண்மை உற்பத்தி சார்ந்த பண்பாட்டு மரபிலும், உழவுத் தொழில் மரபினரின் வாழ்வியல் நடத்தைகளிலும், மழைத் தெய்வத் தொன்மங்களிலும், வளமை சார்ந்த சடங்குகளிலும், வழிபாட்டு வழக்கங்களிலும், பாடல், பழமொழி உள்ளிட்ட வாய்மொழி வழக்காற்று மரபிலும், வேளாண்மைக் கருவிகள் - வேளாண்மைத் தொழில் நுட்பங்கள் - சூழலியல் சார்ந்த அறிவு மரபிலும் இந்திரன் எனும் அடையாளமே தொடர்ந்து வந்திருக்கிறது.

வேளாண் மரபில் காணலாகும் இத்தகைய இந்திர அடையாளமானது, ஆரிய வைதீகத்தின் மரபுகளுக்கும் அதன் மேலாதிக்கத்திற்கும் எதிரானதும் பகையானதும் ஆகும்.

ஆரிய வைதீகத்தின் பண்பாட்டு மரபுகளுக்கு எதிரான பண்பாட்டு மரபுகளைக் கொண்டவர்கள்தான், தமிழ் உழவுத் தொழில் மரபினரான வேளாளர்கள் ஆவர். அதனால்தான், மழைத் தெய்வம் என்பதன் குறியீட்டு அடையாளமான இந்திரனை வேளாண்மைத் தொழிலின் அடையாளமாகக் கொண்டனர். அதோடு, உழவுத்தொழில் புரிந்த அம்மக்கள், இந்திர மரபின் நீட்சியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

உழவுத் தொழில் மரபினரின் - வேளாளர்களின் இந்திர அடையாளத்தைத் தாழ்த்தியும் இழிவுபடுத்தியதுமான ஆரிய வைதீக மரபுக்கு எதிராகத்தான், இந்திர அடையாளத்தை உழவுத் தொழில் மரபின் அடையாளமாக - மருத நிலத்தின் அடையாளமாக - மேன்மைமிகு அடையாளமாக - தமிழர் அடையாளமாக - பெருமைமிகு அடையாளமாகக் கருதியிருக்கின்றனர் உழவுத் தொழில் வேளாளர்கள். அதனால்தான், உழவுத் தொழில் மரபின் வேளாளர்கள் தம்மை இந்திரகுலம் - தேவேந்திரகுலம் என்பதாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதாவது, வேளாண்மை உழவுத் தொழில் மரபில் வேளாளர்களாகக் குறிக்கப்பட்டும் அடையாளப்பட்டும் வந்த உழவுத் தொழில் மரபினர், வரலாற்றுத் தொடர்ச்சியிலும் பண்பாட்டு நீட்சியிலும் தமக்கிருக்கும் வேர்த் தடங்கள் அறுந்து போகாத வகையில் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர்.

அதனால்தான், வேளாண்மைத் தொழில் மரபின் அடையாளமாய்ப் பரிணமித்த இந்திரன் - தேவேந்திரன் எனும் பெயர்களால் இந்திரகுல விவசாயம் - தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய அடையாளப்படுத்தலானது, வேளாண் மரபை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில், ஆரிய வைதீக மரபுகளை எதிர்ப்பதையும் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


சனி, 30 அக்டோபர், 2021

வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான பகையும் முரணும்: மகாராசன்

 



ஆரிய வைதீகத்தினருக்கும் உழவுத் தொழில் மரபின் வேளாளர்களுக்குமான உற்பத்தித் தொழில் சார்ந்த பண்பாட்டு முரண்களே பகை முரண்களாக ஆகியிருக்கின்றன. உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களுக்கும் ஆரியர்களுக்குமான முரண்களை மறைமலை அடிகளார் எடுத்துரைக்கும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை. 

ஆடு மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் குடியேறி, கடைசியாக இப் பரத நாட்டில் புகுந்த ஆரியர், அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவுத்தொழில் சிறப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையும் கண்டு வியந்து அவ் வேளாளரை அண்டிப் பிழைக்கலாயினர். வேளாளரும் தமக்குள்ள செல்வப் பெருக்காலும், இரக்க நெஞ்சத்தாலும் தம்பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தந்து பலவற்றாலும் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.. 

வேளாளர் உழவுத் தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருக்கச் செய்த பண்டை நாளில், ஆரியர் வேட்டுவ வாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர் வாழ்க்கையிலுமே இருந்தனர். அதனாலேதான், ஆரியரும் அவர் வழிப்பட்டாரும் செய்த நூல்களில் உழவுத் தொழில் இழித்துரைக்கப்பட்டிருப்பதோடு, அதனைத் தம் இனத்தவர் எவரும் செய்தல் ஆகாது என்னும் கட்டுப்பாடும் காணப்படுகிறது.. 

பழைய நாளில் ஆரியப் பார்ப்பனர் ஆ எருது முதலியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்தமையின், அவர் தமிழ்நாட்டுக் கோயில்களுள் நுழைதற்கும் இறைவன் திருவுருவத்தைத் தொடுதற்கும் தகுதியிலராக ஒதுக்கி வைக்கப்பட்டனர். கொலைத் தொழில் புலைத்தொழில்களைக் கைக்கொண்டு ஒழுகினமை பற்றி வேளாளரால் தாழ்த்தப்பட்ட ஆரியப் பார்ப்பனர், பையப் பைய அவ் இழிதொழில்களைக் கைவிட்டுத் தம்மைத் தாமே உயர்த்துப் பேசிக்கொண்டு, தம்மைத் தாழ்த்திய  வேளாளர்களைத் தாமும் தாழ்த்துதல் பொருட்டு அவரைச் சூத்திரர் என்று வழங்கலாயினர் என விவரிக்கிறார் மறைமலை அடிகளார். அவ்வகையில், உழவுத் தொழில் மரபின் வேளாளர்களைத் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளையும் கருத்தியல்களையும் பன்னெடுங் காலமாகவே உருவாக்கி வந்திருக்கின்றனர் ஆரிய வைதீக மரபினர். 

தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப் பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக - பண்பாட்டுப் பகையாக - இனப் பகையாக - சமயப் பகையாக நீடித்து வந்திருக்கிறது. இதைக் குறித்து டி.தருமராஜன் விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வருமாறு: 

மருதம் என்றொரு நிலவுடைமை வாழ்க்கைமுறை தோன்றும் பொழுது, அதற்கு முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த முல்லைநில வாழ்க்கையின் அதிகாரங்கள் பழைய அதிகாரங்களாக மாறுகின்றன அல்லது அவர்கள் தங்களைப் புதிய சமூக அமைப்பிற்குப் பழகிக் கொண்டு அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கால்நடைச் சமூக அமைப்பு வீழ்ந்து, நிலவுடைமை அமைப்பு உச்சம் கொள்ளும் இடைவெளியில், கால்நடைச் சமூகங்கள் தங்களையும் விவசாயத் தொழிலோடு இணைத்துக் கொண்டதை மானிட வரலாறு தெரிவிக்கிறது. 

அதுநாள் வரையில் பால், மாமிசம், தோல், மயிர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்த கால்நடைகள், நிலத்தை உழுகிற பணியிலும் உரமிடும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்ட மாற்றங்கள் நடைபெறத் துவங்கின. இதனால், காளைகளின் பயன்பாடு இனப்பெருக்கம் அல்லது போக்குவரத்து என்ற எல்லையைத் தாண்டி, நிலத்தைப் பண்படுத்தல் என்ற புதிய தளத்தை வந்தடைந்தது. விவசாய அறிவு என்பது நில அறிவையும், நீர் மேலாண்மையையும், பயிர் குறித்தத் தெளிவையும், கால்நடைகளின் பயன்பாட்டையும் இணைத்ததாக உருவாகத் தொடங்கியது இப்படித்தான்.. 

தேவேந்திர சமூகத்தவர்கள் காப்பாற்றி வரும் வரலாற்று ஞாபகங்களின்படி, தமிழகத்தில் நெல் விவசாயத்தில் கரை கண்டவர்களாய் அவர்களே திகழ்ந்தனர். மண்ணின் தன்மைகளைக் கொண்டு அவற்றை விதவிதமாய் அவர்களால் வகைப்படுத்த முடிந்தது. நீரைத் தடுத்து, தேக்கிவைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் புதிய உத்திகளை அவர்கள் கண்டடையத் துவங்கினார்கள். 

குளம், கம்மாய், ஏரி, கிணறு, கமலை, மடை, கலிங்கல், கால்வாய், வாய்க்கால், மறுகால், ஏந்தல் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் உருப்பெறத் துவங்கின. நெல்லின் புதிய புதிய வகைகள் கண்டறியப்பட்டு, அவற்றைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதுபோன்ற தொழில் நுட்பங்களில் தேவேந்திரர்களின் ஈடுபாடும் திறமையும் ஏராளமான பள்ளு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.. 

இந்தியா முழுமையும் நிலவிய இதுபோன்றவொரு விவசாய மலர்ச்சியினால் பெரிதும் திகைத்துப் போனது கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மட்டுமே. பரந்த புல்வெளிகளில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்து வந்த சமூகங்கள், தங்களது மேய்ச்சல் நிலங்கள் கழனிகளாக மாறி விட்டபடியால், அடிமடியில் கை வைத்தது போல் பதறிப் போயின. அதுநாள் வரையில், மாடு என்றால்  செல்வம் என்று மட்டுமே நினைத்து வந்த சமூகம், நிலத்தைப் பொக்கிஷமாய்க் கருதத் துவங்கியதை அவர்களால் உடனடியாய் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நிலவுடைமைச் சமூகத்தின் புதிய நடவடிக்கைகளுக்குப் பழகிக்கொண்டு தங்களை மாற்றிக்கொள்ள அவர்கள் பெருமளவில் சங்கடப்பட்டார்கள். 

நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் என்றால் அது மிகையில்லை. கால்நடைகளை மேய்ப்பதையே தங்களது குலத் தொழிலாய்க் கொண்டிருந்த பிராமணர்கள், புதிய சமூக அமைப்பில் தங்களது இருப்பு கேள்விக்குறியாகிப் போனதைக் கண்டு கலங்கித்தான் போனார்கள். மேலும், சடங்குகளின்போது யாகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கால்நடைகளை - குறிப்பாக மாடுகளைத் தீயிட்டுப் பொசுக்கும் வழக்கத்தையும், மாமிசத்தை உண்ணும் வழக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தனர். 

விவசாயம் முதன்மைத் தொழிலாய் மாறிப்போன சூழலில், அவர்களால் தொடர்ந்து இது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடுவது முடியாமல் போனது. பால், மாமிசம், தோல் என்ற நேரடிப் பயன்பாட்டையும் தாண்டி, மாடுகள் உழைப்பு என்ற காரணி மூலமும் அளக்கப்படத் துவங்கின. இதனால், மாடு குறித்த புதியதொரு பிம்பம் உருவாகத் துவங்கியது. மாடுகளின் சாணம் மிகச்சிறந்த உரமாகக் கருதப்பட்டது. அவை மனிதர்களோடு மனிதர்களாக விவசாயத் தொழிலில் ஈடுபடும் சக உழைப்பாளியாகப் பார்க்கப்படலாயின. இதனால், பிராமணர்கள் மாடுகளைக் கொன்று செய்யும் யாகங்களும், மாட்டு இறைச்சியை உண்பதும் கண்டிக்கத்தக்க செயல்களாக மாறிப்போயின. தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்குமான முதல் பகை இப்படியே தோன்றியது. 

தங்களது பழைய சமூக மரியாதையை (கால்நடை வளர்ப்புச் சமூக மரியாதையை) நிலைகுலையச் செய்தவர்கள் என்ற கோபம் பிராமணர்கள் மனதில் பெரும் துவேசமாகப் பரவியது. இதனால் வேளாண் தொழில் கேவலமானது என்றும், அதைச் செய்பவர்கள் இழிவானவர்கள் என்றும் பிராமணர்கள் பேசத் தலைப்பட்டனர். மேலும், தாங்கள் செய்கின்ற யாகங்களுக்குத் தேவையான மாடுகளைக் கிடைக்கவிடாமல் செய்தவர்கள் என்ற கோபமும் தேவேந்திரர்கள் மீது திரும்பியது. இதனால், தங்களது பாரம்பரிய உணவான மாட்டிறைச்சியை உண்பதில்கூட தடை ஏற்படுகிறது என்பதை, பிராமணர்களால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 

கால்நடைச் சமூக அழிவு, யாகங்களை நிகழ்த்த முடியாத சூழல், மாட்டு இறைச்சியை உண்பதால் ஏற்பட்ட இழிவு போன்ற காரணங்களினால் பிராமணர்கள் தங்களது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படுவதை வெகுவாகவே உணர்ந்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக அவர்கள் அடையாளப்படுத்தியது வேளாண்குடி மக்களை - அதாவது, தேவேந்திரர்களை. இதுவே, தேவேந்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் ஏற்பட்ட முதல் மோதல். 

நன்செய் விவசாயத்தைத் தங்களது பண்பாட்டு அடையாளமாக மாற்றிக்கொண்ட தேவேந்திரர்கள், நிலவுடைமைச் சமூக அமைப்பின் முதுகெலும்பாக நின்று பெரும் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டி வந்தது. கால்நடைச் சமூகத்துப் பழமைவாதிகளான பிராமணர்களை எதிர்த்த அவர்களது போராட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தங்களது விவசாய வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் கால்நடைகளை யாகம் என்ற பெயரில் வீணே கொன்று அழிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பெரும் சமூகப் போராட்டத்தை அவர்கள் நிகழ்த்த வேண்டி வந்தது. 

தேவேந்திரர்களின், பிராமணர்களுக்கு எதிரான போராட்டம், கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பிற்குமான மோதலாகவே கவனிக்கப்பட வேண்டும். கால்நடை வளர்ப்புச் சமூகப் பிரதிநிதிகளாக பிராமணர்கள் ஒருபக்கமும், நிலவுடைமைச் சமூக அமைப்புப் பிரதிநிதிகளாக தேவேந்திரர்கள் மறுபக்கமும் நின்று போராடினார்கள். அதாவது, பழமைக்கும் புதுமைக்கும் இடையே பெருத்த மோதல் உண்டானது. தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்று கொண்டிருந்தனர். 

நெல்லின் அறிமுகத்தாலும், விவசாயம் என்ற புதிய தொழில் முறையின் வளர்ச்சியாலும், சமூகத்தில் இத்தகைய மோதல் உருவான அதே காலகட்டத்தில்தான், பௌத்தம் என்ற சமயம் தனது வேர்களை அகலப் பரப்பி இந்த மண்ணில் தளைக்கத் துவங்கியது. 

கருத்தியல் ரீதியாகப் பிராமணர்களோடு சரிக்குச் சரி போராடி வந்த பௌத்தம், நிலவுடைமைச் சமூக அமைப்பின் வளர்ச்சியால் பிராமணர்களின் கொள்கைகளும் மூடநம்பிக்கைகளும் வலுவிழந்து வருவதைக் கண்டதும், விவசாயக் குடிகளையெல்லாம் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யத் துவங்கியது. தேவேந்திரர்களுக்கும் பெளத்தத்திற்குமான  உறவு, வலுவான ஒன்றாக மாறத் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான் என, வேளாண் தொழில் மரபினருக்கும் ஆரிய வைதீக மரபினருக்குமான அக முரண்பாட்டையும் புற முரண்பாட்டையும் விவரித்திருக்கிறார் டி.தருமராஜன். 

ஆரிய வைதீக மரபினரை எதிர்த்துப் போராடியதன் காரணமாகவும் - வேளாண்மை உற்பத்தியில் பெருவாரியாக ஈடுபட்டு வந்ததன் காரணமாகவும்தான், ஆசீவகச் சமயமும் பவுத்த சமயமும் வேளாண் தொழில் மரபினரிடம் பண்பாட்டு நெருக்கத்தைக் காட்டியிருக்கின்றன. வேளாண் தொழில் மரபினரின் தொழில்சார் பண்பாட்டு அடையாளமான இந்திர அடையாளத்தை ஆசீவகமும் பவுத்தமும் அடையாளப்படுத்தியிருப்பதன் பின்புலமும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

வேளாண் மரபினரோடு பண்பாட்டு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட ஆசீவக, பவுத்த சமயங்களைப் போலவே, பிற்காலத்தியச் சைவ, வைணவச் சமயங்களும் வேளாண் மரபினரோடு பண்பாட்டு நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சைவ, வைணவத் தமிழ் இலக்கியங்கள் பலவும் வேளாண் மரபினரைப் பலவாறு புகழ்ந்து பாடியிருக்கின்றன. மேலும், தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் வேளாண் மரபினருக்குப் பரிவட்டம் கட்டுதல், முதல் மரியாதை அளித்தல், முதல் மண்டகப்படி வழங்கல், தேர் வடம் பிடித்தல், நாள் கதிர் வழங்கல், விதைக்கோட்டை வழங்கல் போன்ற வழிபாட்டுச் சடங்குகளில் முக்கியத்துவம் அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். 

வேளாண் தொழில் மரபின் தமிழர் வழிபாட்டு அடையாளமாக இருந்துவந்த இந்திரருக்கு, கோயில்களும் வழிபாட்டு மரபுகளும் தனியாகவும் ஆசீவகத்திலும் பவுத்தத்திலும் நிறைய இருந்திருக்கின்றன. அதேவேளையில், அவற்றையெல்லாம் ஆரிய வைதீகச் சமய மரபுகள் பிற்காலத்தில் அழித்திருக்கின்றன; மறைத்திருக்கின்றன; தன்வயப்படுத்தி இருக்கின்றன. அதனால்தான், இந்திரருக்கெனத் தனிக் கோயில்கள் இல்லாமலும், வழிபாடுகள் ஏதுமற்றுப் பூட்டிக் கிடப்பதுமாக இருக்கின்றன. 

ஆயினும், வேளாண் மரபிலும் - தமிழர் மரபிலும் இந்திர வழிபாடு தனித்துவ அடையாளமாக இருந்து வந்திருந்திருக்கிறது. இதன் காரணத்தால்தான், இந்திர அடையாளத்தைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இந்திரன் பற்றிய பண்பாட்டுப் புனைவுகளைப் புராணங்கள்வழி உருவாக்கி இருக்கிறது ஆரிய வைதீகம். அதுமட்டுமல்லாமல், தொழில் மரபிலும் வழிபாட்டு மரபிலும் தமிழ் அடையாளமாக இருந்து வந்த இந்திர அடையாளத்தை, சிறுமைப்படுத்தவும் இழிவுபடுத்தவுமான நோக்கில், இந்திரன் பற்றிய இழி புராணங்களைக் கட்டமைத்திருக்கிறது ஆரிய வைதீகம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


வெள்ளி, 29 அக்டோபர், 2021

பாண்டியர்களும் உழவுத்தொழில் அடையாள மரபும் : மகாராசன்


சோழநாடு சோறுடைத்தது எனும்படியாக வேளாண்மைத் தொழிலை வளப்படுத்திய சோழர்கள், உழவுத் தொழில் மரபை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எனினும், சோழர்களுக்கு முன்பாகவே உழவுத் தொழில் மரபினராகவே அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் பாண்டியர்களே ஆவர் என்கிறார் பாவாணர்.

இதைக் குறித்து அவர் கூறும்போது, முதல் பாண்டியன் அவன் காலத்தில் பண்டையனாய் இருந்திருக்க முடியாது. ஆதலால், பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் வேந்தன் குடிப்பெயரைத் திரித்து, பழமையானவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது எனும் பாவாணர், பள் - பண்டு - பண்டி - பாண்டி - பாண்டியன் என்பதாயிற்று என்கிறார்.

மேலும், பாண்டி - பாண்டில் - பாண்டியம் = எருது; எருது கொண்டு உழும் உழவு அல்லது பயிர்த்தொழில். தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத் துணையாகத் தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும். ஏர்த் தொழிலுக்கு உதவுவதனால் காளை எருது எனப்பட்டது. ஏர் - ஏர்து - எருது. காட்டு மாட்டைப் பிடித்துப் பழக்கி, வீட்டு விலங்காக்கி ஏர்த் தொழிலுக்குப் பயன்படுத்தினர். உழவுத் தொழிலும் பாண்டியம் எனப்பட்டது என்கிறார் பாவாணர்.

பழங்காலத்தில் உழவுத் தொழிலைப் பாண்டியம் எனும் சொல்வழக்காலும் தமிழர் குறித்துள்ளனர். அவ்வகையில், வேளாண்மை உழவுத் தொழில் மேற்கொண்ட பழந்தமிழர்களும், அவர்வழி வந்த வேந்தர்களும் உழவுத் தொழில் மரபினராக அடையாளப்படுத்தும் வகையில் பாண்டியம் - பாண்டியர் எனக் குறித்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். உழவுத் தொழிலைப் பாண்டியம் எனக் குறிக்கும் வகையில்,

பாண்டியம் செய்வான் பொருளினும்

என்கிற கலித்தொகைப் பாடல் குறிப்பும் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

ஆக, பாண்டிய வேந்தர்களின் அடையாளமும், சோழ வேந்தர்களின் அடையாளமும் வேளாண்மை உழவுத் தொழில் மரபையே அடையாளப்படுத்துகின்றன. அதாவது, வேந்தர்களின் அடையாளம் என்பது, வேளாண்மை உழவுத் தொழிலாகவே இருந்திருக்கிறது. வேளாண்மை உழவுத் தொழில் மரபினரே வேந்தர்களாக இருந்திருக்கின்றனர்.

இத்தகைய வேந்தர்களே வேளாண்மை உழவுத் தொழிலுக்கும் உழவுத் தொழில் மரபினருக்கும் பெருந்துணையாய் இருந்திருக்கின்றனர். அதனால்தான், வேந்தன் எனவும், இந்திரன் எனவும் மருத நிலத்தின் தெய்வமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது.

மண்ணுலகின் வேளாண்மை உழவுத் தொழிலுக்கு மழை நீரே முதன்மையானதும் அடிப்படையானதுமாக இருப்பதால், மழை நீரே வேந்தனுக்கு ஒப்பானதாகவும், விண்ணுலகின் வேந்தராகவும் கருதப்பட்டிருக்கிறது. அதனால்தான், இந்திரன் எனும் மழை நீரை மருத நிலத்தின் தெய்வமாகவும், வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவும் உழவுத் தொழில் மரபில் கருதப்பட்டிருக்கிறது. அவ்வகையில், வேந்தன், இந்திரன், தேவேந்திரன் எனக் குறிக்கப்படுவன யாவும், வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவே எல்லாக் காலத்திலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன எனக் கருதலாம்.

வேளாண்மை உழவுத் தொழிலின் அடையாளமாகவும் குறியீடாகவும் கருதப்படுகிற இந்திரன் - தேவேந்திரன் பற்றிய தரவுகள் பல்வேறு தொன்மக் கதைகளிலும், வேளாண் வளமைச் சடங்குகளிலும், பண்பாட்டு வழக்காறுகளிலும், வாய்மொழி இலக்கியங்களிலும், கல்வெட்டு, செப்பேடு போன்ற வரலாற்றுக் குறிப்புகளிலும், இலக்கண இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


வியாழன், 28 அக்டோபர், 2021

சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்ட சின்னம் புலிதானா? : மகாராசன்


பரந்து விரிந்து வேய்ந்திருக்கும் மருத நில வயல்வெளிகளைக் கண்ணுற்று நோக்குவதால்தான், மழைத் தெய்வமானது மழையாகப் பொழிந்து மண்ணுயிர் காக்கின்றது. வேய்ந்திருக்கும் வயல்வெளியை மழை பொழிந்து நோக்குவதால் மழையை வேய்ந்தன் - வேந்தன் எனக் குறிக்கப்படுகிறது.


இதைப்போல, வேய்ந்திருக்கும் வயல்வெளிகளை ஒருமித்துப் பரந்து நோக்குவதற்கும் இரு கண்கள் போதாது என்பதால், ஆயிரம் ஆயிரம் கண்கள் கொண்டு மழைத் தெய்வம் நோக்குவதாகக் கருதியதால்தான், மழைத் தெய்வமான இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையான் எனும் பெயரும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவத்தைத்தான் சோழர்கள் தமது கொடியில் வரைந்திருக்கிறார்கள்.

மருத நிலத்தில் அரசு புரிந்த சோழர்கள் கொடியில் கண்களாகவே வரைந்திருந்த ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவமானது, புலியின் தோற்றத்தைப்போலவும் காட்சி அளித்திருக்கிறது. சோழர்களின் கொடியில் உள்ள புலிச் சின்னமானது, ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான்.

இந்த நுட்பமான செய்தியை, இராசராச சோழன் உலா நூலில் பதிவு செய்யும்போது,

....தாவி

வரப்பு மலை சூழ்வர ஆயிரம் கண்

பரப்பும் ஒரு வேங்கை பாரீர்

என, சோழனின் கொடிச் சிறப்பைக் கூறுகிறார் ஒட்டக்கூத்தர். இந்திரனாகிய புலிக்கொடியை; அதாவது, புலியெனக் கொடியில் இந்திரனை வைத்தவர்கள் சோழர்கள் என அப்பாடலில் சுட்டுகிறார் ஒட்டக்கூத்தர்.

இந்திரனைத்தான் புலிக்கொடியாகச் சோழர்கள் அடையாளப்படுத்தினர் எனும் செய்தியைக் கலிங்கத்துப்பரணி இலக்கியமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. சித்திரன் எனும் சோழ மன்னன், தன்னுடைய கொடியில் புலி என்பதாக இந்திரனைத்தான் அடையாளப்படுத்தி வைத்ததாகக் கூறும் வகையில்,

புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும் 

என்கிறது கலிங்கத்துப்பரணி.

இந்திரனைக் கொடியில் வைத்தவர்கள் என்பதால்தான், இந்திரனுக்கு விழா எடுத்திருக்கிறார்கள் சோழர்கள். இந்திரனுக்குச் சோழர்கள் விழா எடுத்திருப்பதன் பின்புலமும் இதுவாக இருந்திருத்தல் கூடும். அவ்வகையில், உழவுத் தொழில் மரபின் வழிபாட்டு அடையாளமாகக் கருதப்பட்ட இந்திர அடையாளத்தையே, வேளாண்மை உழவுத் தொழில் பண்பாட்டு அடையாளமாக - வேளாண் மரபினர் என்பதன் குறியீட்டு அடையாளமாகச் சோழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506



செவ்வாய், 26 அக்டோபர், 2021

வேளாண்மை - ஆரிய மரபின் ஒவ்வாமை : மகாராசன்




வேளாண்மை சார்ந்த இத்தகைய வளமைச் சடங்குகளில் இந்திரன் என்னும் அடையாளத்துடன்கூடிய தெய்வ வழிபாட்டுக் கூறுகள் வெவ்வேறு வடிவங்களில் புலப்படுத்தப்படுகின்றன. எனினும், இத்தகைய வளமைச் சடங்குகளுக்கும் வைதீகச் சடங்குகளுக்கும் யாதொரு தொடர்பும் உறவும் இருந்ததில்லை; இருக்கவுமில்லை. 

குறிப்பாக, ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரன் என்பதன் அடையாளத்தோடும் சாயலோடும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. ஏனெனில், ஆரிய வைதீக மரபில் வேளாண்மைத் தொழில் பாவமான தொழிலாகக் கருதப்படுகிறது. தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரியம். இதனை ஆரியப் பண்பாட்டுக் கருத்தியலாகவே பதிவு செய்யும் நோக்கில், 

பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது. 

சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது. 

என, உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். 

ஏர் பூட்டி உழுவதே பாவம் எனக் கருதுகிற ஆரிய வைதீக மரபின் சமக்கிருத மொழியில், ஏர் என்னும் சொல்லே காணப்படாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான்.  அதேவேளையில், வேளாண்மைத் தொழிலே தலையாயத் தொழிலாகவும், மேன்மையான தொழிலாகவும் தமிழர் வாழ்விலும் மரபிலும் கருதப்பட்டிருக்கிறது. 

உழவு செய்து, பயிர் விளைவித்து வாழ்தலே உழவுத் தொழில் மரபினரான வேளாளர்க்கு அழகு எனும் பெருமித உணர்வே, தமிழர் மரபாகவும் பண்பாட்டுக் கருத்தியலாகவும் இருந்து வருகின்றது. உழைக்காமல் சூதால் வருகின்ற பொருளை வெறுத்தலும், பார்ப்பாருடன் பழகினாலும் நெருப்பைபோல் அவரிடமிருந்து விலகி நடத்தலும், உழவு செய்தலை மிக விரும்பி வாழ்தலும்தான் வேளாண்மைத் தொழில் மரபினர்க்கு அழகு எனும் வகையில், 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல ஒழுகல், 

உழவின்கண் காமுற்று வாழ்தல் - இம்மூன்றும் 

அழகென்ப வேளாண் குடிக்கு 

என்கிறது திரிகடுகம். அதாவது, உழவைப் பாவமாகக் கருதும் ஆரிய மரபிலிருந்து வேறுபட்டு, உழவை விரும்பிச் செய்யும் தொழிலாகக் கருதுவது தமிழர் மரபாகும். 

ஆரிய வைதீகத்தின் சடங்கியல் மரபுகள் நெருப்போடும் வானத்தோடும் தொடர்புடையவை. தமிழ்நாட்டின் நிலப்பரப்பு வெப்ப மண்டலப் பகுதியைச் சார்ந்தது என்பதால், தமிழர் பண்பாட்டு வெளியில் காணலாகும் சடங்கியல் மரபுகள் நீரோடும் நிலத்தோடும்தான் தொடர்புடையவையாய் அமைந்திருக்கின்றன. தமிழர்களின் புழங்குவெளியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் நிலவுகிற அனைத்துச் சடங்குகளும் நீரில்லாமல் அமைவதில்லை. ஆகையால், தமிழர் பண்பாடு என்பது இயல்பாகவே நீர் சார்ந்தும் - நிலம் சார்ந்ததுமான பண்பாடாகவே அமைந்திருக்கிறது. 

தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் நீரோடு தொடர்புடையது என்றால், ஆரிய வைதீக மரபினரின் பண்பாட்டு நடத்தைகள் நீருக்கு நேரெதிரான நெருப்போடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. இந்த வேறுபாட்டு நிலைகள் பற்றி தொ.பரமசிவன் விவரிக்கும்போது, ஆரியர்களின் சடங்குகள் நெருப்பின்றி அமையாது. அவர்கள் வசித்த பகுதி, நீண்ட குளிர் காலத்தைக் கொண்ட பகுதி. எனவே, குளிரைப் போக்கும் நெருப்பு அவர்கள் பண்பாட்டு அடையாளமாக இருக்கலாம். தீ மூட்டிச் செய்யும் வேள்விகளின் தொடக்கம், குளிருக்குத் தீ மூட்டியதில் இருந்தும் தொடங்கியிருக்கலாம். அவர்களுடைய கடவுள் படையல்களை வேள்வி நெருப்பின் வழியாகவே பெற்றுக் கொள்பவர். 

வெப்ப மண்டல உயிர்கள் நீராடுதலில் விருப்பம் கொண்டவை. வெப்பமண்டல மனிதர்களான தமிழருக்கும் அம்பா ஆடல், மார்கழி நீராடல் என நீராடுதல் சடங்காக அமைந்தன. தம்மைப் போலவே கடவுளையும் குளிப்பாட்டும் வழக்கம் கொண்டனர். நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பது தமிழர் வழக்கமாயிற்று என்பார். 

ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனுக்கும் வேளாண்மைத் தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை. இதுகுறித்து டி.டி.கோசாம்பி கூறும்போது, ரிக் வேதத்தில்  ஆறுகளை விடுவித்த வீரச் செயலுக்காக இந்திரன் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். அரக்கனாகிய விரித்திரன் என்பவன், ஓடும் ஆற்றின் குறுக்கே செயற்கைத் தடுப்பு ஏற்படுத்தி நீரோட்டத்தைத் தடை செய்கிறான். விரித்திரன், ஒரு பெரிய பாம்பைப்போல மலைச் சரிவின் குறுக்கே படுத்துக் கிடந்தான். இந்திரன் அவனைச் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன. அசுரனின் மூச்சற்ற உடலின் மீது நீர் பிரவாகமாக ஓடியது என, உவமை நயத்துடன் வர்ணிக்கப்படும் இச்சொற்கள் யாவும், அணை ஒன்று உடைக்கப்பட்டதைத்தான் சொல்கின்றன என்கிறார். 

வேளாண்மை என்பதை விலக்கப்பட்ட தொழிலாக ஆரிய வைதீக மரபினர் கருதியதால்தான், வேளாண்மைக்கு அடிப்படையான நீர் ஆதாரங்கள் சீர்குலைப்பை வியந்தோதுவது மட்டுமல்லாமல், வேளாண்மைக்கு உகந்த வகையில் நீர் ஆதாரங்களைக் கட்டுவிப்பதும் பாவம் என்றே பதிவு செய்திருக்கின்றனர். 

ஆரிய வைதீக மரபில் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் படையல் சடங்கான சிரார்த்தச் சடங்கிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு பாவப் பட்டியலை முன்வைத்திருக்கிறது மநு சாத்திரம். ஓடுகிற நீரில் அணை கட்டுகிறவனும், நீரின் வேகத்தைத் தடுப்பவனும் சிரார்த்தத்தில் நீக்கத்தக்க வந்தணர்கள் எனக் குறித்திருக்கிறது மநு சாத்திரம். 

நீரை அடிப்படையாகக் கொண்டு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைத் தொழில் மரபில், நீரே முதன்மைத் தெய்வமாக  வணங்கப்பட்டிருக்கிறது. ஆரிய வைதீக வழிபாட்டு மரபில் அக்னி பகவான் - யாகம் என்பதான நெருப்பே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில், தமிழர் வழிபாட்டு மரபின் இந்திரன் வேறாகவும், ஆரிய வைதீகத்தின் இந்திரன் வேறாகவுமே இருந்திருக்கின்றன. 

தமிழரின் வேளாண்மைத் தொழில் மரபில், இந்திரனே வேளாண் தெய்வமாக - மழைத் தெய்வமாக - நீர்த் தெய்வமாக அடையாளப்படுத்தப்படுகிறது. வேளாண் மரபின் தமிழ் அடையாளம் இந்திரன் என்பதாகத்தான் தமிழர்கள் அடையாளப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆகையால், ஆரிய வைதீக மரபின் இந்திரன் வேறு; தமிழர் மரபின் இந்திரன் வேறு என்பதை உறுதியாகக் கூறலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

தமிழர்கள் கொண்டாட வேண்டிய நேர்மையான படைப்பு : செ. தமிழ்நேயன், மருந்தாளுநர்


ஆய்வுகள் வரலாற்றை நேர்செய்யும் என்ற நம்பிக்கை, சிலரின் நூல்களில் இருந்து தெளிவு பெறலாம். அந்தச் சிலரில் மகாராசன் அவர்களின் படைப்பு இருப்பதே மகிழ்ச்சி. இற்றைய நாட்களில் ஆய்வு என்ற பெயரில் சாதியப் பெருமைகளை மட்டுமே வழமையாகப் பதிவு செய்யும் சூழலில், நேர்மையான ஆய்வாக உள்ளது என்பதே சிறந்த முயற்சி. 

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் தமிழர் அனைவரும் கொண்டாட வேண்டிய படைப்பு. வேளாண் நாகரிகத்தில் நெல்லின் பங்கு என்ன?நெல் வகைகள், காளைகளைப் பற்றிய பட்டியல், உழவுச்சொற்கள், உழவர் சிறப்பு, மழையை ஏன் கொண்டாட வேண்டும்? சங்க கால எச்சம் இற்றை வரை நீள்கிறது என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். 

பள்ளர் என்பது காரணப்பெயர்?மரபுப்பெயர்? என்பதையும் விவரிக்கிறார். பள்ளர்களுக்கு ஏன் வேளாளர் அடையாளம்? வேளாண் குடிகளின் வாழ்வியலை இலக்கியச் சான்றுகள் துணைக் கொண்டு  நிறுவுகிறார். 

எழுத்தாளர் தம்முடைய உரையில் எழுத்துப்போலியை இடைஇடையே  பதிவு செய்துள்ளார் (ஐ-அய்). 

திராவிடச் சாயல் எதுவுமில்லை. திசை சார்ந்த சொல் வழக்காறுகள் உள்ளது. பள்ளு இலக்கியத்தை மீள் வாசிப்புக் செய்யத் தூண்டுகிறார். நெல் பயன்பாட்டைக் கொண்டு வரலாற்றின் காலத்தையும் நிறுவலாம் என்பதையும் பதிவு செய்கிறார். வேந்த வணக்கம் பற்றிய குறிப்புகள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. 

உழவு, உழவர், எருது, வேந்தர் வணக்கம், நெல் பற்றிய குறிப்புகள் என, தமிழர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு. 


கட்டுரையாளர்:

செ. தமிழ்நேயன், மருந்தாளுநர், சென்னை.

வேளாண் மரபை வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருக்கும் நூல் : இராஜா, பொறியாளர்.



இந்தியத் துணைக்கண்டத்தில் அரசியல் - பொருளாதாரம் - பண்பாட்டு ஆதிக்கமும், அதன் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாள்தோறும் வேளாண் மற்றும் பிற பாட்டாளி வர்க்கத்தினர் போராடியே வந்துள்ளனர்; வருகின்றனர். 

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே வாளோடு தோன்றிய மூத்தக்குடி" என்று பெருமை பேசும் தமிழர் தேசிய இனத்திலும்கூட ஒவ்வொரு குடிகளின் மீதும் திட்டமிட்டோ அல்லது புகுத்திய பொதுப்புத்தியின் தாக்கத்திலோ நாள்தோறும் பண்பாட்டுத் தாக்குதல் தொடுக்கப்படுவதும்; அதை எதிர்த்துப் போராடியே தங்களுடைய பெரும்பொழுதைச் செலவிடுவதுமான போராட்ட வாழ்க்கையே தமிழர்களுக்கு இதுவரை இருந்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக, தமிழக வேளாண் உற்பத்தியாளர்களில் பெரும்பங்காற்றும் பள்ளர் சமுகத்தின் மீது கடந்த நானூறு வருடங்களாக நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல் என்பதெல்லாம், மனிதநேயத் தன்மையற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதுகுறித்து நீண்ட ஆய்வுகளையோ அல்லது அதற்கான தீர்வையோ முன்னெடுக்கப்படாமல் தொடர்வதைக் காண்கையில், இவை அனைத்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது...! 

அரசும் ஆய்வாளர்களும் தீர்வை முன்னெடுக்கும் வரையில், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளிகள் தங்களுக்கான தீர்வை முன்னெடுக்கமால் விட்டு விடுவார்களா என்ன...? 

அவ்வகையில், சமுகப் பண்பாட்டியல் ஆய்வாளர் முனைவர் ஏர் மகாராசன்  அவர்கள் எழுதி, யாப்பு பதிப்பகம் வெளியிட்டுள்ள "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" எனும் நூல், நடுநிலையோடு 'வேளாளர் யார் ...?' என்று மற்ற வேளாண் குழுக்களையும் இணைத்துப் பல்வேறு இலக்கியத் தரவுகளோடும், தமிழ் இனக்குழுக்களுக்கு இடையே இருக்கும் முரண்களைக் களைந்து ஒன்றுபட அழைப்பு விடுத்திருப்பது பாராட்டத்தக்க ஒன்று. 

வாழ்த்துரையில் எழுத்தாளர் சோ.தர்மன்  அவர்கள் "வேளாண் மரபினர் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்" என்று அணிந்துரை செய்திருப்பது போல், நூலாசிரியரும் தான் சொல்ல வரும் கருத்தை ஆழமாகவும் தெளிவாகவும், அதேசமயத்தில் மற்றவர்களை எவ்விடத்திலும் புண்படுத்தாத வண்ணம் எழுதியிருப்பது வேளாண் மரபின் மாண்பைக் காட்டுகிறது. 

பல எழுத்தாளர்களும் பேசத் தயங்கும் அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கும் தலைப்பில், மிக அற்புதமான படைப்பைப் படைத்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்! 

பள்ளர் மற்றும் இன்றைய வெள்ளாளர், கவுண்டர், படையாச்சி, உடையார் ஏனைய வேளாண் தொழிற்மக்களுக்குள் இருக்கும் தொழிற்வழித் தொடர்புகளைக் குறித்து, வரலாற்று இயங்கியல் பார்வையோடு அணுகியிருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. 

அதேவேளையில், தென்மாவட்டங்களில் முட்டிமோதிக்கொண்டிருக்கும் பள்ளர் மற்றும் மறவர் இருவருமே தங்களை இந்திர குலத்தார் என்று அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற பல விடயங்களை நூல் பேசியிருப்பதும் கவனிக்கத் தக்கது. 

இறுதியாக, நம்மை மற்றவர்கள் எப்படி மாண்போடு நடத்த வேண்டும்..? எப்படி அடையாளப்படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே நாமும் மற்றவர்களை நடத்துவோமேயானால், தமிழ்ச் சமுகத்தில் இடை புகுந்திருக்கும் முரண் களைந்து, தமிழும் தமிழரும் உயர்வார்கள் என்பதில் ஐயமில்லை...! 

வேளாண் சமுக ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களில், இந்நூலும் ஒன்று என்பது என் கருத்து. 

தமிழ்க் குடிகளுக்கு இடையே இருக்கும் உறவுகள் மற்றும் முரண்கள் குறித்து, இதுவரையில் பெரிதாக எந்தவொரு நூலும் வெளிவரவில்லை. இந்நூல் அதற்குத் தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், சமுகப் பண்பாட்டு உறவுகளைப் பேசும் நூட்கள் வெளிவர வேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..! 

நூலை ஆழ்ந்து படித்துப் பார்த்த பிறகே என் கருத்தைப் பதிவு செய்கிறேன். மற்றவரை அடையாளம் காட்டுகிறேன் என்ற பெயரில் விசமத்தனமாக நூட்களை எழுதி, அதன் மூலம் சமூகப் பதட்டம் உருவாக்கி, கூட்டம் சேர்த்துக் கட்சி ஆரம்பித்து, இறுதியில் சமூக அரசியல் முகத்தில் கல்லெறிந்து பணம் ஈட்டும் நரிகளும் உள்ளனவே...? அதிலிருந்து நூலின் ஆசிரியர் தனித்து நின்று வெற்றி பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான ஒன்றாகவே நான் காண்கிறேன். 

கட்டுரையாளர்: 

இராஜா, நுண்கலைப் பொறியாளர், நாகர்கோவில்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

தமிழர் மரபில் இந்திர அடையாளம் : மகாராசன்

 



மழைநீர் எனும் ஒரே பொருளைக் குறித்து, உலக வழக்கு எனும் மக்கள் வழக்கில் ஒருசில சொற்களாகவும், நாடக வழக்கு எனும் இலக்கியச் செய்யுள் வழக்கில் வேறு சில சொற்களாகவும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவ்வகையில், மருத நிலத்தின் மழைத்தெய்வமாக வேந்தன் எனவும், இந்திரன் எனவுமே இருவேறு தமிழ் வழக்குச் சொற்களால் குறிக்கப்பட்டிருக்கிறது எனவும், மழையைக் குறித்து வந்த வேந்தன் வழிபாடே இந்திர வழிபாடாகப் பெருவழக்காய்க் குறிக்கப்பட்டு வந்திருக்கிறது எனவும் கருதலாம். இதனை, இலக்கண இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பதிவாகியுள்ள குறிப்புகளின் வழியும் அறியலாம்.

இந்திர விழவின் பூவின் அன்ன புன் தலைப் பேடை வரிதிகல் அகவும் என, இந்திர வழிபாட்டைப் பற்றிய குறிப்பைப் பழந்தமிழ் நூலான ஐங்குறுநூறு பதிவு செய்திருக்கிறது.

உண்டால் அம்ம, இவ்வுலகம் - இந்திரர் அமிழ்தம் இயைவது

என, இந்திரன் பற்றிய சொல்லாடலைப் பதிந்திருக்கிறது புறநானூற்றுப் பாடல்.

மேலும், பாண்டிய மன்னன் கூடல்வாழ் மக்களுடன் வைகை ஆற்றில் நீராடிய காட்சியானது, இந்திரன் நிகழ்த்தும் நீராட்டம் போன்றது எனும் வகையில்,

…. அருமரபின் அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து

என, ஆயிரம் கண்ணுடையான் இந்திரன் என்பதாகச் சுட்டுகிறது புறநானூறு.

மண்ணகம் அருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீராட்டி

என, மழைத் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சிலப்பதிகாரம், இந்திர விழவு எனப் பதிகத்திலும், விண்ணவர் கோமான் விழவு என, இந்திர விழவூரெடுத்த காதையிலும் குறிப்பிடுகிறது. மழையைக் குறிக்கும் இந்திரரையே வேந்தர் எனும் பொருள் குறிக்கும் சொல்லாட்சியில் பதிவு செய்திருக்கிறது.

சிலப்பதிகாரத்தைப் போலவே மணிமேகலைக் காப்பியமும் இந்திர வழிபாட்டுச் சடங்கை ஆயிரம் கண்ணோன் விழா என்பதாக விழாவறை காதையில் பதிவு செய்திருக்கிறது. மேலும், மருத நிலத்தின் கருப்பொருட்களைப் பற்றிக் கூறும் நம்பி அகப்பொருள் இலக்கண நூலும் இந்திரன் எனும் தெய்வப் பெயரையே முதன்மைப்படுத்துகிறது.

இந்திரன் எனும் தெய்வத்தின் பெயர்த் தொகுதியைப் பற்றி விவரிக்கும் சூடாமணி நிகண்டு, மேகவாகணன், வேள்விக்கு வேந்தன், விண்முழுதுமாளி, பாகசாதணன், வச்சிரபாணி, கோபதி, நாகநகர்க்கு நாதன், நான் மருப்பின் யானை ஊர்தி, போகி, வாசவன், வேந்தன், புரந்தரன், புலவன், சக்கிரன், மருத நிலத்து வேந்தன்…

மருத்துவன், வானோர் கோமான், புருகூதன், சசிமணாளன், புரோகிதன், கௌசிகன், கரியவன், சுனாசீரன், ஆகண்டலன், வலாரி, அரி, சதக்கிரது, ஆயிரம் கண்ணன் என இந்திரனின் இதரப் பெயர்களையும் சுட்டுகிறது. மேற்சுட்டிய இந்திரனின் பெயர்கள் பெரும்பாலும் மழையோடு தொடர்புடைய பெயர்களாகவும், மழையை வேந்தராக உருவகிக்கும் பெயர்களாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

சனி, 23 அக்டோபர், 2021

தமிழரின் இந்திரன் வேறு; ஆரியரின் இந்திரன் வேறு : மகாராசன்

வேந்தன் வழிபாடு எனும் பேரிலும், இந்திர வழிபாடு எனும் பேரிலும் மருத நிலத்தில் நடைபெற்று வந்த வழிபாடானது, மழைநீரைத் தெய்வமாகக் கருதிய மழை வழிபாட்டுச் சடங்குதான் என்பதையும், வேந்தன் எனும் இந்திர வழிபாடு என்பது, ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திர அடையாளத்தோடு தொடர்புடையதல்ல என்பதையும் மறைமலை அடிகளார் மிக விரிவாகவே விளக்கப்படுத்தி இருக்கிறார். அவை வருமாறு:

ஆரியர் வணங்கிய இந்திரனும் தமிழர் வணங்கிய இந்திரனும் ஒருவர் அல்லர். ஆரியர்க்குரிய இந்திரன் இடி மழை மின்னல் முதலியவற்றிற்குரிய தெய்வமாதலோடு, அவர்தம் பகைவரோடு போராடுங்கால் அவர்க்கு உதவியும் துணையுமாய் நின்று அவர்க்கு வெற்றியைத் தருபவனாகவும், அவர் தரும் சோமச் சாற்றையும் விலங்கின் இறைச்சியையும் நிறைய உட்கொண்டு, அவர் வேண்டிய நலங்களையெல்லாம் அவர்க்கு விளைவிப்பவனாகவும் சொல்லப்படுகின்றான். 

தமிழர் வணங்கிய இந்திரனோ வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் உள்ள உழவர்களால் மழையின் பொருட்டு மட்டும் வேண்டி வணங்கப்பட்ட மழைக் கடவுள் ஆவான். மழையின் பொருட்டாகவன்றி, வேறு எந்த நன்மைப் பேற்றின் பொருட்டாகவேனும் தமிழர்களால் அவன் வணங்கப்பட்டவன் அல்லன். இருக்கு வேதத்தில் உள்ள பாட்டுகளில் மூன்றில் ஒருகூறு இந்திரன் மேல் செய்யப்பட்டு இருத்தல் போல, தமிழ் நூல்களில் எங்கும் ஒரு பாட்டேனும் இந்திரன் மேல் செய்யப்படவில்லை. 

தொல்காப்பியம் முதலான மிகப் பழைய தமிழ் நூல்களில் இந்திரன் என்னும் சொல்லே காணப்படவில்லை. மருத நிலத்து மக்களால் கொண்டாடப்படும் தெய்வம் வேந்தன் என்று சொல்லப்படுகின்றது. வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதல் காண்க. தமிழர் மழையை வேண்டி வணங்கிய வேந்தனும், ஆரியர் மழையின் பொருட்டாகவும் வணங்கிய இந்திரனும் மழைக் கடவுளாதல் பற்றிப் பிற்காலத்தவரால் அவ்விருவரும் ஒருவராகக் கொள்ளப்படுவார் ஆயினர்.

அவ்வாறு கொள்ளப்படினும், தமிழர்க்குரிய வேந்தனுக்கும் இருக்கு வேத ஆரியர்க்குரிய இந்திரனுக்கும் ஏதோர் இயைபும் இல்லை என்பது, அவ்விருவர்தம் பழைய நூல்களையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாளர்க்கும் நன்கு விளங்கும். பிற்காலத்துப் புராண நூல்களில் சொல்லப்படும் இந்திரனுக்கும் இருக்கு வேதத்தில் சொல்லப்படும் இந்திரனுக்கும்கூட சிற்சில வகைகளில் தவிர, மற்ற பல வகைகளில் ஏதோர் ஒற்றுமையும் இல்லை. 

உற்று ஆராயுங்கால், தமிழர்க்குரிய வேந்தன் என்போன், தமிழர்க்குள் முதன்முதல் தலைவனாய்த் தோன்றி, மழைபெய்யும் காலமும், அம் மழையின் உதவியால் பயிர் செய்வதற்கேற்ற அளவிய நிலமும், அந்நிலத்தைத் திருத்தி செவ்வனே பயிர் முளைக்கும் வகைகளும் நன்குணர்ந்து, உழவுத்தொழிலைக் கற்பித்துத் தமிழ் மக்களை மேல்நிலைக்குக் கொணர்ந்தவன் ஆதல் வேண்டும் என்பது புலப்படும். 

நன்றி செய்த முன்னோரை நினைந்து அவர்களைப் பரவுதல் தமிழர்க்கு இயற்கை ஆதலால், அவர் கால்வழியில் வந்த மருதநிலத்து உழவர் முதல் வேந்தனான அவனது ஆவியை வேண்டி வணங்குவார் ஆனார் என்க என விவரிக்கிறார் மறைமலை அடிகள். 

தமிழர் மரபிலிருக்கும் இந்திரனையும், ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திரனையும் வேறுபடுத்திக் காட்டும் மறைமலை அடிகளாரின் எடுத்துரைப்பைப் போலவே, ந.சி.கந்தையா கூறும் கருத்தும் பொருத்தமுடையதாகும். அதாவது, வேந்தன் வணக்கம் இந்திரன் வணக்கமாக இலக்கியங்களில் கூறப்படுகிறது. இவ் இந்திரனும் ஆரியர் கடவுளாகிய இந்திரனும் ஒருவராவரோ என்பது ஆராயத்தக்கது. வடநாட்டார் இந்திரனை வேள்விகள் வாயிலாக வழிபடுவர். தென்னாட்டிலோ விழாக் கொண்டாடி வழிபடுவர். வடநாட்டாரது இந்திரன் தெய்வ உலகத்திற்கு அரசன் எனப் புராணங்கள் கூறுதலின், தென்னாட்டார் தம் வேந்தனுக்குத் தேவர் உலக அரசன் என்னும் பொருளில் இந்திரன் எனப் பெயரிட்டுத் தம் மரபுப்படியே பழைய வழிபாட்டை நடத்தி வந்திருத்தல் கூடும்.. ஆராயுமிடத்து, வேந்தன் வழிபாடே இந்திரன் வழிபாடல்லது வேறன்று என்பார் ந.சி.கந்தையா.

மருத நிலத்தின் தெய்வமாகக் குறிக்கப்படும் வேந்தனும் இந்திரனும் ஒன்றேதான்; அதுவும் தமிழர்தம் தெய்வமேதான். அதிலும் குறிப்பாக, மருத நிலத்தின் மக்கள் மட்டுமே வழிபடப்பட்ட தெய்வம்தான் என்பதை பி.டி.சீநிவாச ஐயங்கார் பல காரணங்கள் தந்து விளக்கியுள்ளார்.

அதாவது, தென்னிந்திய மக்கள் பழங்கற்காலத்தின் இறுதி நாட்களிலேயே நிலத்தினை உழுது பயிரிடக் கற்றனர் என அறிகிறோம். உழவுத் தொழிலினை மேற்கொண்ட மக்கள் தமிழகத்தில் மருத நிலத்திலேயே வாழ்ந்து வந்தனர். அவர்கள் வளிமண்டலத் தெய்வம் ஒன்றினைத் தொன்றுதொட்டு வழிபட்டு வந்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களைப் பயிரிடுவதில் ஈடுபட்ட வேளாண் மக்கள், உழவுத் தொழிலுக்குப் பெரிதும் இன்றியமையாத மழையினைத் தரும் தெய்வம் ஒன்று உண்டெனக் கருதியது இயற்கையே ஆகும்.

வேந்தன் ஆரியர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட இந்திரனாக இருந்தால், தமிழகத்தில் மருத நிலத்தில் வாழும் மக்கள் மட்டும் வழிபடும் தெய்வமாக அவன் விளங்குவதும், விந்தியத்திற்கு வடக்கே எல்லா மக்களும் வணங்கும் தெய்வமாகக் காணப்படுவதற்கும் உரிய காரணம் யாது?

ஆரியர்கள் தென்னிந்தியாவில் குடியேறியபோது, அவர்களுடைய சமயக் கருத்துகள் தென்னாட்டில் பரவின. அந்நிலையில், ஆரியரின் இந்திரனுக்குரிய பண்புகளை ஒட்டி, மருத நிலத் தெய்வமான வேந்தன் தேவர்களுக்கு எல்லாம் அரசனான இந்திரனாகக் கருதப்பட்டான். இக்கருத்து, பண்டைத் தமிழர்க்கும் ஆரியருக்கும் இடையே உண்டான கலப்பு முழு நிறைவடைந்த காலத்தில் தோன்றியதாகும்.

மேலும், இந்திர வழிபாட்டினை ஆரியர்கள் செய்த முறைக்கும், மருத நிலத் தமிழர்கள் செய்த முறைக்கும் மிக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, வட நாட்டு இந்திரனைத்தான் தமிழகத்தில் வாழ்ந்த மருத நில மக்கள் வழிபட்டனர் என்று கூறுவது பொருத்தமற்றதாகும் என்பார் பி.டி.சீநிவாச ஐயங்கார்.

மேற்காணும் குறிப்புகளின் வழியாக, தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் உழவுத் தொழில் மரபினரைத் தவிர, மற்ற தொழில் மரபினர் எவரிடத்தும் இந்திரன் அல்லது வேந்தன் தெய்வ வழிபாட்டு வழக்கம் இல்லை என்பதும், தமிழ் நிலப்பரப்பில் குறிக்கப்படும் இந்திரன் அல்லது வேந்தன் எனும் அடையாளம், தமிழ் வேளாண் தொழில் மரபினரின் மழைத் தெய்வமே ஆகும் எனக் கருதலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

வியாழன், 21 அக்டோபர், 2021

வேந்தன் - இந்திரன்: மழைப் பொருண்மையின் அடையாளங்கள் - மகாராசன்

வேந்தன் என்பதும், இந்திரன் என்பதும் மழைநீரைக் குறிக்கும் ஒரே பொருண்மை கொண்ட இருவேறு சொற்களாகும் எனும் பொருளில், ம.சோ.விக்டர் எடுத்துரைக்கும் பின்வரும் கருத்து ஒப்பு நோக்கத்தக்கது.

வேய் என்ற மூலச் சொல் விரிந்து, வேய்ந்தன் என்று சொல்லப்பட்டது. வேய் - வேய்தல்: விரிதல், பரந்திருத்தல், விரிந்த பரப்பளவைக் கொண்டிருத்தல். வேய் - வேய்ந்தன்: விரிந்த, பரந்த நிலப்பரப்பை ஆள்பவன். வேய்ந்தன் - வேந்தன் எனச் சுருக்கப்பட்டது. மருதநிலத்தின் வேளாண்மைக்கான வயல்களையும், வேளாண் மக்களையும் ஆள்பவன், வேந்தன் எனப்பட்டான். வேந்தன், வேளாண் குடியின் தலைவனாவான்.

சில் என்பது பொதுவாகக் கெட்டியான பொருளையும், சிந்துநீர்ப் பொருளையும் சுட்டும். சிறுசிறு துளிகளாக விழும் மழைநீரைச் சிந்து என்ற சொல் குறிக்கும். சில் + து = சிந்து என்றானது. அரன் - ஒறுப்பவன், ஒறுக்கின்ற மன்னன் அல்லது வேந்தன் என்பதே பொருளாகும். சிந்து + அரன் = சிந்திரன், மழை. சிந்து - இந்து எனத் திரியும் வாய்ப்புகள் உண்டு. சிந்திரன் - இந்திரன் எனப்பட்டது; மழைக்கான கடவுள் என்ற பொருளைத் தருவது என்கிறார் ம.சோ.விக்டர்.

சிந்து என்னும் பெயர் குறித்துப் பாவாணர் கூறியிருக்கும் கருத்தும் நோக்கத்தக்கது. ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திராவிடர் மேலை ஆசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்பராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப் பெயராகவே இருக்கலாம்.

சிந்துதல் = சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும்.

தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் (குறுந்.120) என்பது முகில் துளி சிதறுதலையும்,

அருவி யன்ன பருவுறை சிதறி யாறுநிறை பகரு நாடனை (குறுந்.121) என்பது, ஆறு துளி சிதறுதலையும் குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.) என்னும் இருபொருளும் ஏற்பட்டன.

இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை என விளக்கப்படுத்துகிறார் பாவாணர். பாவாணரின் இக்கருத்து, ம.சோ.விக்டரின் மேற்குறித்த கருத்தையும் இணைவித்துப் பார்க்க உதவுகிறது.

அதனால்தான், சங்க இலக்கியங்கள் இந்திரன் பற்றிய செய்திகளைத் தருகின்றன. திருவள்ளுவர் இந்திரன் என்ற சொல்லை, மன்னன் அல்லது வேந்தன் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார். தமிழில், இந்திரன் மருதநிலக் கடவுளாகக் கருதப்படுகிறான். மருத நிலத்தின் வேளாண்மைக்கான நீரைத் தருவதால், இந்திரன் மருத நிலக் கடவுள் ஆனான் என்கிறார் ம.சோ.விக்டர்.

இந்திரன் என்னும் சொல்லுக்கு நீர்ப் பொருள் இருப்பதாகக் கூறும் கா.சு.பிள்ளையின் கருத்தும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அதாவது, இந்திரனை வேந்தன் என்பதற்குக் காரணம், அவன் மழைத் தெய்வமாதல் பற்றியும், வயலுக்கு நீர் இன்றியமையாமை பற்றியுமாகும். இன் திறன் என்ற சொற்றொடரே இந்திரன் என மருவிற்று என்பார் அவர்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் காண்க..

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

*


திங்கள், 18 அக்டோபர், 2021

மழை - வேந்தன் - இந்திரன் : தெய்வங்களும் சமூக உறவுகளும் - மகாராசன்




மருத நிலத்தின் தெய்வமாக வேந்தன் எனக்குறிக்கும் வகையில், 

வேந்தன் மேயத் தீம்புனல் உலகம் 

எனச் சுட்டுகிறது தொல்காப்பியம். மண்ணுலகில் வாழும் மக்களைக் காக்கும் அதிகாரியாகக் கருதப்பட்டவரே வேந்தர் ஆவர். வேளாண்மையே முதன்மைத் தொழிலாய் நடைபெற்றுவந்த மருத நிலச் சமூகக் கட்டமைப்பில், மக்களைக் காக்கும் கடமையும் அதிகாரமும் புரிந்தோர் பல்வேறு பெயர்களில் குறிக்கப்பட்டுள்ளனர். 

இதைக் குறித்து ம.சோ.விக்டர் கூறும்போது, குடும்பன் - கிழான் - வேளிர் - மன்னன் என்ற படிநிலைகளில், வேளாண் மக்களில் சிலர் ஆளும் அதிகாரத்தைப் பெற்றனர். இவர்கள் அனைவரும் வேளாண் குடியினரே என்பதை மறந்துவிடக் கூடாது. தகுதியுள்ள எவரும் மேற்கண்ட பொறுப்புகளில் வரத் தடையிருந்ததில்லை. 

வேளாண் தொழிலை விடுத்து ஆளும் துறையில் இவர்கள் பட்டறிவைப் பெற்றிருந்ததால், பிற்காலத்தில் குடும்பன் முறையிலிருந்து மன்னன் வரை, மரபு வழியில் அமர்வதற்கான சூழ்நிலை உருவாயிற்று. இவர்களில் நாடெங்கும் குடும்பர்களின் எண்ணிக்கை மிகுந்து, உயர் பொறுப்புகள் ஏற ஏற, எண்ணிக்கை குறைந்து, மன்னன் என்ற ஆளுமை தனியொருவனாக அமைந்தது. ஊர்க்குடும்பனே மன்னராட்சியின் தொடக்கமும் அடிப்படையுமாக இருந்தான் என்கிறார். 

வேந்தர் எனும் அரசுருவாக்க ஆளுமையர்கள் குறித்துப் பிரபஞ்சன் கூறும் கருத்தும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது. அதாவது, ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன் நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல்விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றனர். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். 

வேந்தன் என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள். மற்றவர்கள் வேளிர், மன்னன், கோ என்ற பெயரிலும், அரசன் என்ற பெயரால் மட்டுமே அறியப்படுகிறார்கள். வேந்தர் என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள் என, உலகுக்கு அச்சாணியாய் இருந்து, உலகுக்குச் சோறிடும் பண்பாலும் வளத்தாலும் திறத்தாலும் உழவுத் தொழில் மரபினரே வேந்தராகி இருந்ததாக விளக்கப்படுத்துகிறார் பிரபஞ்சன். 

மண்ணுலகின் வேந்தரைத் தொழுது வழிபடும் பண்பாட்டு வழக்கம் உழவுத் தொழில் மரபினரிடம் பல காலகட்டத்திலும் நீடித்து வந்திருக்கிறது. தாய், தந்தை, குரு, தெய்வம் போன்றவற்றுக்கு நிகராகவே வேந்தரும் வழிபடு அடையாளமாகக் கருதப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாண்டிய, சோழ, சேர வேந்தர்கள் மட்டுமே தெய்வ நிலைக்கு நிகரான வழிபடு அடையாளமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

தமிழ் மூவேந்தர்களைத் தவிர, அரசதிகாரம் சார்ந்த வேறு எவரையும் வழிபடுவதோ தொழுவதோ வேளாண்மை உழவுத் தொழில் மரபினரின் வழக்கத்தில் இருந்ததில்லை. சதி செய்து ஆட்சிக்கு வந்த பிறரை - பின்னுள்ளோர்களை அவர்கள் மதிப்பதுமில்லை; மதித்ததுமில்லை என்பதைக் கட்டி மகிபன் பள்ளுப் பாடல் பதிவு செய்திருக்கிறது. அதாவது, 

தந்தை தாய் குரு தெய்வமும் செந்தமிழ்ப் பூசுரர் இன்றி 

     சதிராய்ப் பின்னுள்ளோர்களை மதியாதவன்… 

இந்திரன் குலத் தோன்றியே வந்தநாள் முதலாகவே 

     இலகும் ஏழூர்க் குடும்பன் நானே 

என்கிறது அப்பாடல். 

வேளாண்மை உழவுத் தொழிலின் உற்பத்திச் செயல்பாட்டில் வேந்தர்களின் வழிநடத்தலும் நிரம்ப இருந்திருக்கிறது. வேளாண்மை உழவு மரபிலிருந்தே வேந்தர்கள் உருவாகி வந்த நிலையில், வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தேவையான வழிவகை வாய்ப்புகளை அரசுக் கட்டமைப்பின் துணையோடும் பலத்தோடும் வேந்தர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். 

ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், அணைகள், கால்வாய்கள் என நீர் ஆதாரங்களை ஏற்படுத்துவதும் புனரமைப்பதுமான பணிகளையும், வேளாண்மை உற்பத்திப் பெருக்கத்திற்கான அரசின் இதரத் திட்டங்களும், வேளாண் விளைபொருட்களுக்கான சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வேளாண்மைத் தொழில் அனைத்துக்குமான அறப்பணிகள், வேந்தர்கள் முன்னெடுப்பில் நடந்திருக்கின்றன. அதனால்தான், மருத நில வேளாண்மை உற்பத்திச் சமூக அமைப்பில் வேந்தர்கள் மதிக்கப்பட்டிருக்கிறார்கள்; வழிபடப்பட்டிருக்கிறார்கள். 

வேளாண்மை உற்பத்திச் சமூக அமைப்பில் வேந்தர்களின் பங்களிப்பைக் குறித்துக் கூறும் ந.சி.கந்தையாவின் பின்வரும் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது. அதாவது, பயிர் செய்கைக்குரிய நாடுகளிலிருந்த மக்கள் ஆதிகாலத்தில் பயிர்ச் செய்கைக்கேற்ற குளங்கள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும் நாட்டை வளப்படுத்திய மன்னரைத் தெய்வமாக வணங்கினார்கள். எகிப்தியர்கள் தம் முதல் அரசனைத் தெய்வமாக வழிபட்டனர். அவனும் அவன் வழி வந்தோரும் பயிர்ச் செய்கைக்குரிய காலத்தில் முதல் முதல் ஏர் பிடித்து உழுதல் மரபாயிருந்தது. 

இவ்வழக்கு இலங்கை அரசரிடத்தும் இருந்தது. இலங்கையிலும் இவ்வாறே பெரிய குளங்கள் வெட்டிப் பயிர்ச் செய்கையை வளப்படுத்திய மன்னர் வழிபடப்பட்டனர். சுமேரிய அரசனும் வழிபடப்பட்டான். இவ்வாறே தமிழ் நாட்டிலும் வேந்தன் வணக்கம் வயலும் வயல் சூழ்ந்தனவுமாகிய நிலங்களில் வாழ்ந்த மக்களிடையே இருந்ததெனத் தொல்காப்பியம் கூறுகின்றது என விவரிக்கிறார் ந.சி.கந்தையா. 

இத்தகைய வேந்தர் வழிபாடு வேளாண்மை உழவுத் தொழில் மரபினரிடம் இருந்திருப்பதை, 

சேமமே மிகு சந்நிதியின் சேர சோழ பாண்டியர்க்குத் 

தேவை பால் பழமும் பொங்கல் அவல் யாவையும் 

கோமகன் முதலாயுள்ளோ நேமியோர் பதமும் வேண்டிக் 

கூறிடுந் தெய்வங்களையே நேருடன் போற்றி 

என, சேர சோழ பாண்டிய வேந்தர்களைக் குல தெய்வமாக வழிபட்டு, பொங்கல் படையலிட்டுப் பூசைகள் செய்த உழவுத் தொழில் மரபினரின் வேந்தர் வழிபாட்டைப் பதிவுறுத்துகிறது திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு. 

திருவேட்டை நல்லூர் அய்யனார் கோயிலில் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களின் சிலைகளைக் கொண்ட வழிபாட்டு மண்டபத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு மரபு, இன்னும் வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

உழவுத் தொழில் மரபினரிடம் நிலவிய இத்தகைய வேந்தர் வழிபாடு, தனித்த பண்பாட்டு அடையாளத்துடன் இருந்த வழிபாட்டு மரபுகளுள் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. அதனால்தான், தொல்காப்பியர் காலத்தில், மருத நிலத்தின் வழிபடு தெய்வமாக வேந்தன் குறிக்கப்பட்டிருக்கிறது. 

மக்கள் கூட்டத்திற்குத் தலைமை ஏற்று வழிநடத்தியவர்களை - முறையாக மக்களைக் காத்தவர்களைத் தொழுவதும் வாழ்த்துவதும் மட்டுமல்லாமல், அவர்கள் வழியில் வாழ்வின் பாடுகளை அமைத்துக்கொண்ட மக்கள் பிரிவினர், அவர்கள் உயிர் நீத்த பிறகு தெய்வமெனத் தொழுது வழிபடவும் செய்துள்ளனர். 

குடும்பத்திலோ - குழுவிலோ - ஊரிலோ வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைவுகூறும் வகையிலும், மக்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்கள் நினைவாகவும் வழிபாடு நடந்திருக்கிறது. நீத்தார் வழிபாடு, நடுகல் வழிபாடு போன்ற வழிபாடுகள், ஏதோ ஒருவகையில் மக்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்களைத் தெய்வமெனக் கருதும் சடங்கியல் கூறுகளைக் கொண்டிருப்பவைதான். 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்; 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தான் ஓம்பல் தலை; 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 

இறை என்று வைக்கப்படும் 

போன்ற குறட்பாக்கள், தமிழரிடம் நிலவி இருந்த தலைமை வழிபாடுகளைப் புலப்படுத்தக் கூடியவைதான். இந்நிலையில், மானுட நிலையிலிருந்து தெய்வ நிலையை அடைய முடியும் எனத் தமிழர் நம்பியதன் வெளிப்பாடுதான் இத்தகைய தலைமை வழிபாடு எனும் க.ப.அறவாணர் கருத்தும் பொருத்தமுடையதாகும். 

வேளாண் வாழ்க்கையும், வேளாண் உற்பத்தியும், வேளாண்குடிகளின் பண்பொழுக்கமுமே வேந்தன் வழிபாட்டுக்குத் தோற்றுவாயாக அமைந்திருக்க வேண்டும். வேளாளரே வேந்தராகி இருந்த சமூக அமைப்பில், வேளாளரே வேந்தன் வழிபாட்டின் அடிப்படை ஆவர். இந்நோக்கில், பாவாணர் கூறும் பின்வரும் கருத்துகளும் குறிப்பிடத்தக்கவையாகும். 

நல்வினைகள் சிறந்த விருந்தோம்பலுக்கு ஏராளமாக உணவுப் பொருள் வேண்டும். ஆதலால், அதை விளைவிக்கக்கூடிய உழவருக்கு அவ்வினை சிறப்பாக உரியது என்றும் கருதப்பட்டது. விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்ததனால் அவன் வேளாளன் எனப்பட்டான். விருந்தோம்பல் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்னும் கொள்கை நிலைத்துவிட்டது. இம்மையில் இல்லத்திலிருந்து அறம் செய்து வாழ்பவன் மறுமையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த்தவே  

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்; 

தெய்வத்துள் வைக்கப் படும் 

என்றார் திருவள்ளுவர்.  

இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொது மக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவார் எனின், இம்மையில் வேந்தனாக இருந்து அறவாழ்க்கை நடத்தியவன் மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள்கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப்பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று. வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. வேந்தன் வணக்கம் குமரி நாட்டிலேயே தோன்றி விட்டதனால், முதல் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டு இருத்தல் வேண்டும்.  

உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழை விண்ணிலிருந்து பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டுதோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண்டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவ மதமும் திருமால் மதமும் தோன்றியபின் வேந்தன் விழா படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்தி வந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர் - பிராமணர் தென்னாடு வந்த பின் வேந்தன் விழா வடநாட்டில் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.  

நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்தபின் மேல் உலகத்திற்குச் செல்லும் என்றும், உலகில் (மருத நிலத்தில்) அரசனாக இருந்தவன் மறுமையில் மேல் உலகத்திலும் அரசன் ஆவான் என்றும், மருதநில மாந்தர் கருதி, முதன்முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால், வேந்தனாகிய தங்கள் தெய்வத்திடம் இருந்து வருவதாகக் கருதி, மழை வளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள்.  

நல்வினையாவன வேளாண்மையும் தொழிலும். போர்த் தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மை ஆகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது, அவர் வேளாண்மையில் சிறந்தவர் என்னும் கருத்து பற்றியே, 

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 

நல்விருந்து வானத் தவர்க்கு 

என்றார் திருவள்ளுவர். 26ஆம் புறப்பாட்டும் இக்கருத்து பற்றியதே. நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க என்பதனால், போரில் இறந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையால் அறியப்படும்.  

உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த்தொழிலுக்குரிய மறவரும் இன்றும் தங்களை இந்திர குலத்தார் என்றும், தங்கள் குல முதல்வன் இந்திரன் என்றும் கூறிக் கொள்கின்றனர் எனவும், இந்திரன் என்பது வேந்தன் என்னும் சொல்லுக்கு நேரான வடநாட்டுச் சொல். வேந்தன் மருதநிலத் தமிழ்த் தெய்வம் எனவும் வேந்தன் வழிபாடு குறித்து விவரிக்கிறார் பாவாணர். 

அதேபோல், மருதநிலத்தில் இந்திரனை வணங்கி வேளாண் தொழில் மேற்கொண்ட உழவர்களைப் பற்றி ந.சி.கந்தையா கூறும்போது, ஆற்றோரங்களில் வாழ்ந்து தானியங்களை விளைவித்தோர் வேளாளர் எனப்பட்டனர். அவர்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். ஆற்றுக்குச் சேய்மையில் வாழ்ந்தோர் மழை நீரை ஏரிகளிலும் குளங்களிலும் தேக்கிவைத்து ஏற்றம், கபிலை, பிழா, இடா முதலியவைகளால் இறைத்துச் சாமை, அவரை, துவரை முதலிய தானிய வகைகளையும் விளைவித்தனர். 

இந்நிலத்துக்குரிய குலதெய்வம் வேந்தன். அக்கால மக்கள் நல்ல அரசனின் ஆளுகையில் எல்லா நன்மைகளும் உண்டாகின்றன என்று நம்பினார்கள். ஆகவே அவர்கள் எல்லா நற்குணங்களும் அமைந்த அரசனைத் தெய்வமாக வணங்கினார்கள். பிற்காலத்தில் வேந்தன் இந்திரன் எனப்பட்டான் என்கிறார். 

மேலும், மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதனால் தமிழகத்தில் மருதநிலத்தில் அரசன் இருந்தான் என்று அறியலாம். பயிர்களைச் சேதமில்லாமல் காக்கத் தோன்றிய வேளாண் விஞ்ஞானி வீரர் பரம்பரையினரே பிற்காலத்தில் அரசராயினர், வேந்தராயினர் என்று கூறுவார் சாமி சிதம்பரனார். 

அவ்வகையில், அறமும் மறமும் கொண்டு மண்ணுலகில் வாழ்ந்த வேளாளரே விண்ணுலகிலும் தெய்வமாய்த் தோன்றுவர் எனவும், மண்ணுலகில் அறத்தோடும் மறத்தோடும் ஆட்சி புரிந்த வேந்தரே விண்ணுலகின் தெய்வங்களுக்கும் வேந்தராவர் எனவும் கருதப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், வேளாண்மைக்கான மழை நீரானது, விண்ணுலகில் இருந்து வருவதனால், மழை நீரும் விண்ணுலகின் வேந்தராகவே கருதப்பட்டிருக்கிறது. மழை நீரும் விண்ணுலகின் தேவர் வேந்தராகவே கருதப்பட்டிருக்கிறது. 

தேவர் வேந்தர் என்பது குறுகி, மழை நீர்த் தெய்வமும் வேந்தர் என்றே அழைக்கும் மரபு பெருவழக்காய் இருந்திருக்கிறது என்பதை மேற்காணும் எடுத்துரைப்புகளிலிருந்து அறியமுடிகிறது. அதேவேளையில், மழைத் தெய்வமாகக் கருதப்பட்ட வேந்தன் வழிபாடு என்பது தமிழர் அடையாளமாகவும், இந்திர வழிபாடு என்பது ஆரிய அடையாளமாகவும் ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். 

எனினும், மழைநீர்த் தெய்வமாக வேந்தன் எனவும், இந்திரன் எனவும் மக்கள் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தமிழர் வழிபாட்டு மரபாகவும் அடையாளமாகவும் குறிக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் விவரிப்புகளும் நிறையவே கிடைத்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை. 

அதாவது, தமிழர் வழிபாட்டு மரபில் குறிக்கப்படும் இந்திரன் எனும் அடையாளம், ஆரிய மரபில் சுட்டப்படும் இந்திரன் எனும் அடையாளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது. ஆனாலும், ஆரிய மரபில் இந்திரன் எனும் அடையாளம் இருப்பதாலேயே, தமிழர் மரபில் நிலவும் இந்திரன் அடையாளத்தை ஆரிய அடையாளமாகவே கருதுகின்றனர். எனினும், தமிழர் வழிபாட்டு மரபில் இந்திரன் எனும் அடையாளம் ஆரிய அடையாளத்திலிருந்து வேறுபட்டது ஆகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506



உற்பத்தி வடிவம் : தெய்வங்களும் சமூக மரபுகளும் - மகாராசன்

 



தமிழ் இலக்கண மரபில், ஒவ்வொரு திணை சார்ந்த நிலத்திற்குமுரிய கருப்பொருட்களுள், தெய்வம் என்பது முதலாவது கருப்பொருளாகச் சுட்டப்படுகிறது. தமிழ் மரபின் தெய்வங்களாகக் குறிக்கப்படுகின்ற யாவையும் பொருட்களாக இருந்து பயன் அளித்த - அளிக்கின்ற ஆற்றல் வளங்களாய் இருந்திருக்கின்றன. அதனால்தான், தெய்வம் என்பதைக் கருப்பொருளாகவே சுட்டுகிறது தமிழ் இலக்கண மரபு. இத்தகைய தெய்வம் என்பதான கருத்தாக்கமும் வழிபாட்டு வழக்கங்களும்கூட, அந்தந்தக் காலத்தியச் சமூக உருவாக்கம்தான். 

தெய்வங்களும் சமூக மரபுகளும் குறித்து தொ.பரமசிவன் கூறியிருக்கும் கருத்து இவ்விடத்தில் நோக்கத்தக்கது. மனித சமூகத்தின் வளர்ச்சி அதனுடைய கூட்டுச் சிந்தனையின் விளைவு ஆகும். இரும்புக்காலம், செம்புக்காலம் என்று மனிதன் உலோகங்களைக் கண்டுபிடித்து நாகரிகம் பெற்றதும்; சக்கரம், உழுகலப்பை போன்ற அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததும் கூடிக்கூடித் தொழில்செய்து பெற்ற அனுபவத்தினால்தான். தெய்வங்களும் அப்படிப் பிறந்தவைதான். 

மிகப் பழங்காலத்தில் சிந்தனை அளவில் இளம் குழந்தைகளாக வாழ்ந்த மனிதர்கள், தெய்வம் என்பதை ஒரு ஆற்றலாகத்தான் கருதினர். கை கால்களுடன் கூடிய ஒரு உருவமாகவோ அல்லது மனிதனைப் போன்ற உருவமாகவோ கருதவில்லை. தமிழ்நாட்டில்கூட முருகு எனப்பட்ட ஒரு ஆற்றலையே முதலில் வணங்கினர். பின்னர் தனி மனிதச் சிந்தனை வளர்ந்தபோதுதான், முருகு முருகன் ஆக்கப்பட்டான். இவ்வகையான குறிகளும், குணங்களும், குலங்களும் கொண்ட கடவுள்களும் அந்தந்தச் சமூகத்தின் தேவைக்கேற்ப அமைந்தவையே. 

தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதான். கால்நடை வளர்ப்போரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன்தான் இருக்க முடியும். உழவர்களின் தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ அல்லது கையிலே கலப்பை ஏந்திய பலராமனாகவோதான் இருக்க முடியும். 

சுருக்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட  இனக்குழு - மக்கள் கூட்டம் என்ன வகையான உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ, அதைப்பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும் அமையும் என, தெய்வம் பற்றிய சமூகக் கருத்தாக்கம் பற்றிய விவரிப்பைத் தருகிறார் தொ.பரமசிவன். அதாவது, ஒரு நிலப்பரப்பு சார்ந்து வாழும் தொழில் மரபினர், தத்தமது தொழில் சார்ந்தே தெய்வம் பற்றிய கருத்தாக்கத்தையும் உருவாக்கி வந்திருப்பர். மருத நிலத்தின் தெய்வம் பற்றிய கருத்தாக்கமும் வழிபாட்டு வழக்கமும்கூட இத்தகையப் பின்புலத்திலிருந்துதான் - உற்பத்தி வடிவத்திலிருந்துதான் உருவாகி இருக்க முடியும் எனலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 220,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


வெள்ளி, 3 செப்டம்பர், 2021

திரை மீளர் என்பதன் திரிந்த நிலையே திராவிடர் என்பதாகும் : மகாராசன்


திரை மீளர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்பதாகும்; திரிந்துபோன பால் நிலையே திராவிடர் என்பதுமாகும்.

*

தமிழர் என்பதே திராவிடர் என்று திரிந்ததாக மொழியியல் ஆய்வின் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். தமிழர் எனும் சொற்பதம் ஆதிகாலத்திலிருந்து இப்போதுவரையிலும் புழக்கத்திலும் வழக்கத்திலும் இருந்து கொண்டிருக்கையில், தமிழர் என்பதன் திரிபு வடிவமான திராவிடர் எனும் பதத்தை வலிந்து திணிப்பதும் அல்லது ஏற்கச் செய்வதும், தமிழர் பண்பாட்டு அடையாள அழித்தொழிப்பின் நீட்சியாகும்.

திராவிடர் எனும் சொற்பதமானது, தமிழர் என்பதைக் குறிக்கும் சமக்கிருத வடிவமாகும் என்கிறார் அறிவர் அம்பேத்கர். 

ஆரிய எதிர்ப்பு, சமக்கிருத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று பேசுவோரெல்லாம், தமிழரைக் குறிப்பதற்குத் திராவிடர் எனும் சமக்கிருதச் சொல்லையேதான் பயன்படுத்துவோம் என்கிறார்கள். அவர்களது ஆரிய எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்பதெல்லாம் உண்மைதான் எனில், ஆரிய பிராமணியப் பண்பாட்டு அடையாளமான சமக்கிருதச் சொல்வடிவத்தைப் புறக்கணிப்பதே சரியாகும். மாறாக, திராவிடர் எனும் சொல்லால்தான் தமிழரைக் குறிப்போம் எனில், ஆரியத்தை-பிராமணியத்தை-சமக்கிருதத்தை அவர்கள் உள்ளூர மோகிக்கிறார்கள் என்றே பொருள்.

தமிழர் என்பதே திராவிடர் என்றாயிற்று எனும் கருதுகோள்கள் ஒருபுறம் இருக்கையில், திராவிடர் எனும் சொற்பதமானது, திரை மீளர் எனும் சொற்பதத்தின் திரிபு வடிவம் என்பார் கடலியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலசுப்பிரமணியம் அவர்கள்.

பழங்காலத் தமிழர்கள் கடலியல் சார்ந்த அறிவையும், தொழிலையும், வாழ்வையும், வணிகத்தையும், பண்பாட்டையும் கொண்டிருந்தவர்கள்; இன்றுவரையிலும் கொண்டிருப்பவர்கள். திரை என்றால் கடல் என்பது பொருளாகும். மீளல் என்றால் மீண்டு வருதல் என்பது பொருளாகும். கடலுக்குள் சென்று மீண்டு வருவோரை திரை மீளர் என்று தமிழில் அழைக்கும் மரபு அக்காலத்தில் பெருவழக்காய் இருந்திருக்கிறது. அவ்வகையில், திரைகடலோடி திரவியம் தேடி மீள்வோரை திரை மீளர் என்று அழைத்திருக்கின்றனர். 

கடலியல் சார்ந்த வாழ்வையும் தொழிலையும் வணிகத்தையும் உலகம் முழுவதற்குமான முன்னோடிகளாக அடையாளப்படுத்திய தமிழர்கள் திரை மீளர் என்று குறிக்கப்பட்டிருக்கின்றனர். 

திரை மீளர் என்பதே திர மிளர் என்றாகி, திரவிடர்; திராவிடர் என்று திரிபடைந்திருக்க வேண்டும். திரை மீளர் என்னும் சொற்பதத்தையே திரமிளா என்று வேற்றுநாட்டவர்கள் குறித்திருப்பதாகவும் சான்று காட்டுவது உண்டு.

பால் என்பது தயிராகாமல் கெட்டுப்போனால், பால் திரிந்து போனது என்பர். அதைப் பாலாகவும் பயன்படுத்த இயலாது; தயிராகவும் பயன்படுத்த இயலாது. தமிழர் எனும் ஒரு மூலச்சொல் இன்றளவிலும் திரிபடையாமல் இருந்து கொண்டிருக்கையில், திரிபடைந்த திராவிடர் எனும் திரிசொல்லைப் பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை.

தமிழரையோ அல்லது திரை மீளர் என்பதையோ குறிக்கும் திரிபடைந்த சொல்லான திராவிடர் எனும் சொல்லைப் பாலாகவும் கருதமுடியாது; தயிராகவும் கருதமுடியாது. அது திரிந்துபோன பால் நிலையாகும்.

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

03.09.2021

சனி, 28 ஆகஸ்ட், 2021

பாடத்திட்டக் குழுக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் - மகாராசன்

ஒரு படைப்பை, கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பதற்கும் நீக்குவதற்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் வழிகாட்டல் குழுவுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது எனில், அந்தக் குழுவின் அதிகாரத்தோடு சாதியமும் துணை அதிகாரமாக மறைவில் இயங்கக்கூடியது. 

பாடத்திட்டம் வைப்பதற்கும் நீக்குவதற்கும் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் இருப்பதைப்போல, சாதிய மதவாதக் காரணங்களும் - சாதிய மதவாதக் கண்ணோட்டங்களும் மறைவில் இருக்கவே செய்கின்றன. 

பாடத்திட்டக் குழுவிலும், வழிகாட்டுக் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார்? அந்தக் குழுக்களில் எல்லாப் பட்டியல்களிலிருந்தும் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? வழங்கப்படவில்லை; வழங்கப்படுவதுமில்லை. 

பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்களைச் சமூகப் பிரிவு வாரியாகப் பங்களிப்பு செய்வதற்குச் சட்டக் குறிப்புகள் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்பதால், அந்தக் குழுவில் மேட்டிமை / உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆக்கிரமிப்புதான் நிகழும்; அப்படித்தான் நிகழ்ந்தும் வருகிறது. 

பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்கள் மற்றும் வழிகாட்டும் குழுக்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதில்லை. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? இருப்பதில்லை. 

அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள வல்லுநர்களின் பட்டியலை ஆராய்ந்தால், அதில் எஸ்.சி தரப்பினர் எத்தனை பேர்? பி.சி தரப்பு எத்தனை பேர்? எம்.பி.சி தரப்பு எத்தனை பேர்? மதச்சிறுபான்மையினர் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்? என்பது தெரியவரும். 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது, எஸ்.சி/எஸ்.டி தரப்புக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருவதே சமூகநீதி. 

உள் ஆளாக இருந்தாலும், புறவெளி ஆளாக இருந்தாலும் வகுப்புவாரி சமூகநீதியைப் பேசுவதில் தவறேதும் இல்லை. 

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதுதான் சமூகநீதியின் குரலாகும்; அது குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான குரலாகாது. 

சமூக அடுக்கு நிலையில் பின்தங்கியவர்களின் படைப்பு மட்டுமல்ல; அவர்களைப் பாடத்திட்டக் குழுக்களிலும் பிரதிநிதித்துவ அடிப்படையில் வல்லுநர்களாக இடம்பெறச் செய்திடக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே நேர்மையான சமூகநீதிக் குரலாகும். 

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

28.08.2021.


சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ்ப் பெரியார் வ.உ.சி: தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் வடிவம் :- கதிர்நம்பியின் சிதம்பர வேங்கை நூலுக்கான அணிந்துரை - மகாராசன்


பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது எனில், தனக்கென வாழாமலும், தன் வாழ்வுக்கென முயலாமலும், பிறருக்காகவும் பிறரது வாழ்வுக்காகவும் தமது வாழ்வைக் கொடையளித்து ஈகம் செய்த மிகச்சில நல்ல மனிதர்கள்தான் காரணம் என்பதைப் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. 

உண்டால் அம்ம, இவ்வுலகம்; 
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; 
பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; 
அன்னமாட்சி அனையராகித் 
தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி. 

இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும், அதனை, இனிது என்றென எண்ணிக்கொண்டு தான்மட்டும் உண்ணாதவர்களும்; உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளாதவர்களும்; பொதுத்தொண்டு செய்வதற்குப் பிறர் அஞ்சி ஒதுங்குவதுபோல ஒதுங்காமல், நற்பணிகளைச் செய்யும்போது தயங்காதவர்களும்; பொதுத் தொண்டால் புகழ் வரும் எனில், அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுத்து, பழி வருமெனில் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மறுப்பவர்களும்; அயராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களும் வாழ்ந்ததாலும் வாழ்வதாலும்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தமக்குக் கிடைத்த வாழ்வை, தமிழ்ச் சமூகத்தின் இயங்குதலுக்கு ஒப்பளித்த  வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈகத்தாலும்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்வதில் பிழையேதும் இல்லை. ஆம், தமிழ்ச் சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் வ.உ.சி ஆவார். 

வாழும் காலத்தில் துரோகமும் தண்டனையும் வறுமையும் தம்மைச் சூழ்ந்து துரத்தித் துரத்திப் பின்தொடர்ந்து வந்தாலும், அறிவையும் ஆளுமையையும் தன்மானத்தையும் இழந்திடாத பெருந்தமிழ் அறிஞராகத் திகழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார். 

சாதியப் பெருமிதம் பேசும் பலரும், சாதிய மேட்டிமையின் அடையாளமாகத்தான் வ.உ.சிதம்பரனாரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

உண்மையில், மேட்டிமைச் சாதியத்தின் அடையாளமாக வ.உ.சிதம்பரனார் ஒருபோதும் இருந்ததில்லை; இருந்ததாகவும் சான்றுகள் இல்லை. சுயசாதியைக் கடந்தும்; சுயசாதியின் எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் இருந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். அதனால்தான், அவரது சாதியினர் மட்டுமல்லாமல், எல்லாச் சாதியினராலும் மதிக்கப்பட்டிருக்கிறார். 

'மேம்படு  பள்ளனை ஏதமில்லாமலே எண்ணிலா வழக்கில் அமிழ்த்தினர் போலிஸார்; அனைத்தினும் திருப்பினேன்' என்றொரு குறிப்பைத் தமது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். 

1900 காலகட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கி, இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்திப் பல தடவை அலைக்கழிக்க வைத்திருக்கின்றனர். 

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன், தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த விவசாயி, ஒரு நாள்  உலகம்மன் கோயில் அருகே மயக்கமடைந்து சரிந்து விழுந்திருக்கிறார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த சமயத்தில், தற்செயலாக உதவ முன் வந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி, தனது மனக் குமுறலையும்  தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் விலாவாரியாக வ.உ.சிதம்பரனாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்திவிட்டு, அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு விவரங்களைக் கேட்டுக்கொண்ட வ.உ.சிதம்பரனார், இனி மேல் தாங்கள் நீதிமன்றப் படி ஏற வேண்டியது வராது; நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப்படாமல் வீடு போய்ச் சேருங்கள்  என்று கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயியின் வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி கிடைத்திருக்கிறது. அந்தக் செய்தி ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்ததும், அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடியிருக்கிறார். 

அந்த சமயத்தில், அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறியிருக்கிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே உலகநாதப் பிள்ளையின் வாரிசான அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால், இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம் எனும் வாய்மொழித் தரவை, எழுத்தாளர் சோ.தர்மன் பகிர்ந்ததாக ஆய்வாளர் இரெங்கையா முருகன் கூறுவார்.

அதேபோல, சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்து உணவளித்து வந்த நிகழ்வையும் ஆய்வாளர் இரெங்கையா முருகன் பதிவு செய்திருப்பார்.   தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் இராமையா தேசிகரைப் பாதுகாத்து வந்த இந்தச் செய்தியானது தெரியவர, அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது. 

'சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென் தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.

ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால் தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்.

குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென் தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்.

கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால் ‘அவளிடத்’துரைத்திட அடுக்களை சென்றேன்.

‘எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும் உருவம் முதலிய ஒன்றினும் பேதம் மருவுதலிலாமை மலை போல் கண்டும், கற்பனை யாகக் காணும் குலத்தின் சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய! துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண் இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம் ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின் பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர் என, வ.உ.சி.யின் சுயசரிதை இதைப் பதிவு செய்திருக்கிறது.  

பார்வை இழந்த அன்னாருக்கு இதுவரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்குச் சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டியும் விட்டிருக்கிறார் வ.உ.சி.யின்  மனைவி. இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிடப் பயந்திருக்கிறார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள். 

அதேபோல, வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரைத் தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றிப் பாதுகாத்திருக்கிறார் வ.உ.சி. தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வாராம். அச்சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்குப் பயந்து, அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்களாம். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின்படியே நானோ துறவி; துறவிக்கு ஏது சாதி என்று கூறியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. 

இவ்வாறாக, தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் சாதி பேதங்களைக் கடந்தவராகவும், சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் வ.உ.சிதம்பரனார் இருந்திருக்கிறார். அதெல்லாவற்றையும்விட, தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியலின் முன்னத்தி ஏராகவும் வ.உ.சிதம்பரனார் முன்நின்றிருக்கிறார். 

ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வ.உ.சிதம்பரனாரின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பானது, புறநிலையில் இந்திய விடுதலையையும், அகநிலையில் தமிழ்த்தேசக் கட்டுமானத்திற்கான கருத்தியல்களையுமே உள்ளீடாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது, வ.உ.சிதம்பரனாரின் போராட்ட வாழ்வும், செயல்பாடுகளும், சிந்தனைகளும், கனவுகள், வேட்கை என அனைத்துமே தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் நோக்கிலும் பாங்கிலும் அமைந்திருக்கக் கூடியவை. 

வ.உ.சிதம்பரனாரின் கடந்த காலத்திய வாழ்வைப் பேசுவதும் எழுதுவதும் அவருக்கு மதிப்பளிப்பன என்றாலும், அவரது அகநிலையில் உறைந்து கிடந்த தமிழ் அடையாளச் சிந்தனை மரபை நிகழ்காலத் தமிழ்ச் சமூக இயங்குதலுக்குப் பொருத்திக் காண்பதுதான் வ.உ.சிதம்பரனாருக்கு இன்னும் கூடுதலாக மதிப்பளிக்கும். 

தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் முன்னோடிகளுள் வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். தமிழ்த்தேசிய அரசியலை, மரபும் நவீனமும் கலந்த தற்சார்பு அரசியலாக வடிவமைக்க உதவும் கருத்தியல்களை வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைகள் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. 

வ.உ.சிதம்பரனாரின் செயல்பாடுகளும் எழுத்துகளும் பேச்சுகளுமான சிந்தனைப் புலப்பாடுகளில் காணலாகும் தமிழ்த்தேசிய அரசியலுக்கான கருத்தியல் உள்ளீடுகளை, பேசுபொருளாக்கி முன்னெடுக்க வேண்டிய தேவை நிறையவே இருக்கின்றது. அந்தத் தேவையை உணர்ந்து உருவாக்கி இருக்கும் நூல்தான், பொறியாளர் கதிர் நம்பி எழுதியிருக்கும் 'சிதம்பர வேங்கை' எனும் இந்நூல். 

வ.உ.சிதம்பரனார் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவில்லை. ஆனால், அவரது சிந்தனைப் புலங்கள் யாவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல்களே உள்ளடங்கி இருப்பதை இந்நூல் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கிறது. 

மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, வேளாண்மை உற்பத்தி, இதர உற்பத்திகள், வணிகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட யாவற்றிலும் தற்சார்புப் பொருளியல் கண்ணோட்டத்தையும் அதற்கான கட்டமைப்பையும் பெருங்கனவோடு நிகழ்த்திக் காட்டிய வ.உ.சிதம்பரனாரை, தமிழ்த் தேசிய அரசியலுக்கான அடையாளமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் பெருவேட்கையாய் இருக்கின்றது. 

வ.உ.சிதம்பரனார் வேட்கை கொண்டிருந்த ஒரு தேசிய இனத்திற்கான தற்சார்புப் பொருளியல் கட்டுமானத்தை, தமிழீழத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆவார். அதனால்தான், வ.உ.சி குறித்துத் தேவநேயப் பாவாணர் பாடிய பாடல் வரியிலிருந்து 'சிதம்பர வேங்கை' எனும் சொல்லாடலை நூல் தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். 

புலிக்கு வேங்கை எனும் பெயரும் உண்டு. வ.உ.சிதம்பரனாரின் தற்சார்புப் பொருளியல் கட்டமைப்பை - அதன் கருத்தியலைத் தமிழீழத்தில் வடிவம் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகள் ஆவர். தமிழீழத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்சார்புப் பொருளியல் கட்டமைப்புக்கான  நகர்வு, தமிழ் நாட்டிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் சிதம்பர வேங்கை நூலாக வெளிவருகின்றது. 

சிதம்பரம் பிள்ளை, மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில், இரு வர்க்கத்தாரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப் பின் ராஜ துவேஷத்தை ஊட்டும் என்று தீர்ப்பினை எழுதியது ஆங்கிலேய வல்லாதிக்கம். 

எம் சிதம்பர வேங்கையோ, தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் மூலவர்களுள் ஒருவர்; தமிழ்த்தேசியத் தற்சார்பைச் சிதைக்கும் உலகமயச் சுரண்டலுக்கு எதிரான கருத்தியல் ஆயுதம் என்பதைத் தமிழ்கூறும் நல் உலகத்திற்கு அடையாளப்படுத்துகிறார் பொறியாளர் கதிர்நம்பி. அவ்வகையில், சாதியவாதிகளின் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை மீட்டெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் முன்னோடியாக முன்னிறுத்தும் பெருங்கடமையைச் செய்திருக்கும் பொறியாளர் கதிர்நம்பி  அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் இந்நூல், அன்னாருக்குப் புகழ் மாலை சூட்டுவதோடு, அன்னாரின் கருத்தியலைப் பரவலாக்கத் துணை புரியும் நூலாயுதமாகவும் திகழ்கிறது. 

தமிழ்த்தேசிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை அணுகுவதற்கு உதவும் மிகச்சிறந்த வழிகாட்டியாக, பொறியாளர் கதிர்நம்பி அவர்களின் இந்த நூல் பெருந்துணை புரியும். 

அறிஞர் தொ.பரமசிவன் ஆய்வு வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய அரசியலுக்கான அறிவுசார் உரையாடல்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிற பொறியாளர் கதிர்நம்பி அவர்கள், இதுபோன்ற நூல்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும்; எழுதுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் மீது பெருமதிப்பையும் பேரன்பையும் எமக்குள் பாவியவர்கள் ஆய்வாளர்கள் குருசாமி மயில்வாகனன், இரெங்கையா முருகன் ஆகியோர்தான். அந்த வரிசையில், பொறியாளர் கதிர்நம்பி அவர்களும் வ.உ.சிதம்பரனாரைக் குறித்து இந்நூல் வாயிலாக எமக்குள் நிறையப் பாவியிருக்கிறார். 

தமிழரின் அறிவு மரபை வளப்படுத்திக் கொண்டிருக்கும் பொறியாளர் கதிர் நம்பி அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துகள். உள்ளன்போடு அணிந்துரை வழங்க வாய்ப்பளித்தமைக்கு அன்பு கலந்த நன்றி. யாப்பு வெளியீடாக இந்நூலைப் பதிப்பித்திருக்கும் தோழர் செந்தில் வரதவேல் அவர்களுக்கும் தோழமை நன்றி.

சிதம்பர வேங்கை சீறிப் பாயட்டும். 

தோழமையுடன் 

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

21.08.2021.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீர்முலைத் தாய்ச்சிகள்: மகாராசன்

மணல் உடுத்திய பாதைகள்          வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில்உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்          அரத்த நாளங்களைப் போல,  நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்நீர் நாளங்கள்.     

கடைமடை நிலத்தாளின்                  மானம் போர்த்திய                                  நீர்ச் சேலைத் துணிகள்.             

மழையாள் வகுந்தெடுத்த      உச்சந்தலை நீர்க்கோடுகள்.      

பசுந்தாள் வேர் நாவுகளை நனைக்கும்உமிழ் நீர்ச் சுரப்பிகள். 

தொடை விரித்து ஈனும்                தாயவள் போல்,                                  உழவும் குடியும்                                நெல்லும் சொல்லும் ஈன்ற      நீர்முலைத் தாய்ச்சிகள்.

ஏர் மகாராசன்.


நன்றி:

ஓவியம்: இரவி பேலட்

வியாழன், 15 ஜூலை, 2021

என் எழுத்துகளின் நிறம்: மகாராசன்


மானுடத்தின் பாடுகளையும் நிலத்தின் பாடுகளையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். அந்த வகையில் மானுட விடுதலைக்கான அரசியல் தத்துவத்தின் நிறமான சிவப்பும், நிலம் உள்ளிட்ட சூழலியல் காப்புக்கான நிறமாகப் பச்சையும் சேர்ந்த செம்பச்சை நிறம் தான் எனது எழுத்துகளுக்கான நிறம். 

குறிப்பாக, தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் மரபில் காணலாகும் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்துகளின் தனித்துவமாகக் கருதுகிறேன்.

ஏர் மகாராசன்

**

ஒளிப்படம்: நித்யன்