வியாழன், 13 ஜனவரி, 2022

வேளாண் அறுவடையும் போலச்செய்தல் சடங்கும் - மகாராசன்

 



அறுவடையை மய்யமிட்டுப் புலப்படுத்தப்படும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டு நடத்தைகள், வழிபாட்டுச் சடங்கியல் மரபிலும் காணப்படுகின்றன. அதாவது, உழவுத் தொழில் மரபினரின் அறுவடைச் செயல்பாட்டைப் போலச்செய்து காட்டும் சடங்கியல் நிகழ்வுகள் பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தில், தைப்பூசத்திற்கு முதல்நாள் நெல்கதிர் அறுவடைத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் கோயிலிருந்து புறப்பட்டு, மதுரை அருகே அனுப்பானடி - சிந்தாமணியைச் சுற்றியிருக்கும் வயல் பகுதிக்கு அறுவடைக்காக வருகை தருவதான சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அறுவடைச் சடங்கு நடக்கும் இந்த நிலப்பகுதியானது, கிருதுமால் என்ற ஆற்றின் கரையில் இருந்தது. தற்காலத்தில் இந்த ஆறு மறைந்துவிட்ட நிலையில், மதுரையின் உட்பகுதியில் மட்டும் இந்த ஆற்றின் சில பகுதிகள் இன்றும் உள்ளது. சிந்தாமணி என்ற பகுதியில் வைகை ஆற்றின் கிளை ஆறாக, இந்தக் கிருதுமால் ஆற்றின் முதல் மடை அமைந்துள்ளது. அதன் வழியாக வரும் நீரில் விளைந்த நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வே விழாவாக நடந்திருக்கிறது.

மீனாட்சி அறுவடை செய்யும் வயல், அனுப்பானடியைச் சேர்ந்த மடைவாரியர் குடும்பத்திற்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து கொடுக்கப்பட்டதாகவும், இந்த வயலை மடைவாரியர் குடும்பத்தினர் பராமரித்து வருவது தொன்றுதொட்டு வந்த வழக்கம் எனவும் கூறப்படுகிறது. தற்காலத்தில், அந்த இடத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றித் தற்காலிக வயலாக மாற்றி, வேறு இடத்தில் இருந்து எடுத்து வந்த விளைந்த நெல் கதிர்களைத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அந்த இடத்தில் நட்டு வைக்கிறார்கள். பின்பு, மீனாட்சி அம்மன் கதிர் அறுப்பதைப் போன்ற அறுவடைப் பாவனைச் சடங்கு நடைபெறுகிறது.

மருத நிலத்தின் வேளாண்மை உழவுத் தொழில் மரபைக் குறிக்கும் பாண்டியம் எனும் சொல்லால் அடையாளப்படுத்திக் கொண்ட பாண்டியர்களின் வழிமரபினராகவே மீனாட்சி கருதப்படுகிறார். பாண்டிய வேந்தர்களின் காலத்திலிருந்து இத்தகைய அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதன் நீட்சியாகத்தான், உழவுத் தொழிலின் வேளாண் மரபினராக மீனாட்சி - சுந்தரேசுவரர் நெல் கதிர் அறுவடை செய்யும் அறுவடைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

நெல் கதிர் அறுவடைச் சடங்கு நடந்து முடிந்த மறுநாளில்தான், அனுப்பானடி அருகிலிருக்கும் மாரியம்மன் கோயில் வண்டியூர்த் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கின்றது. மீனாட்சி - சுந்தரேசுவரர் கதிரறுப்புத் திருவிழா முடிந்து, தெப்பத்தில் அமர்ந்து உழவின் வெற்றியை அடையாளப்படுத்தும் விதமாக மக்களுக்குக் காட்சி அளிக்கும் வகையில் அமையும் இவ்விழா, ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத்தன்று நடைபெற்று வருகின்றது.

அறுவடைச் சடங்கிலும், தெப்பத் திருவிழாச் சடங்கிலும் உழவுத் தொழில் வேளாண் மரபினர்களான அனுப்பானடி ஊர்க் குடும்பர்களே பெருவாரியாகப் பங்கேற்பதோடு, அங்கு நடைபெறும் சடங்கியல் பண்பாட்டுக்கு உரித்தான நிகழ்த்து உரிமைகளையும் வழிவழியாகப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நடைபெறும் நெல் அறுவடைச் சடங்கைப் போலவே, திருக்குற்றாலீசுவரர் கோயிலிலும் அறுவடைச் சடங்கு நிகழ்ந்து வருகின்றது. அங்கு நடைபெறும் அறுவடைச் சடங்கையும் உழவுத் தொழில் வேளாண் மரபினரான குடும்பர்களே நடத்தி வருகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது.

இவ்வாறாக, வேளாண்மை உழவுத் தொழிலின் உற்பத்திச் செயல்பாடுகளைப் பண்பாட்டு வடிவத்தில் புலப்படுத்தப்படுகிற மழை, உழவு, விதைப்பு, நடவு, அறுவடை சார்ந்த வளமைச் சடங்குகள் யாவும், உழவுத் தொழில் வேளாண் மரபினரின் வேர்த் தடங்களைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளன.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


அறுவடையும் பொங்கல் பண்பாட்டுத் தளுகையும் - மகாராசன்


அறுவடைக் காலத்தின் மகிழ்வைக் குறித்துப் பழந்தமிழ் இலக்கியங்கள் நிரம்பவே பதிவு செய்திருக்கின்றன. உழவுத் தொழிலின் நிறைவாய் அமையும் அறுவடை நிகழ்வில் உழவர் யாவரும் மனமகிழ்ச்சி கொள்வார்கள். உழவர்கள் மகிழ்ச்சி அடையும் நிலத்தை ஆளும் அரசரே நல்லரசின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கிறார்.

அவ்வகையில், அறுவடை நாளில் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று, பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுவதைப் புறநானூறு பதிவு செய்யும்போது, 

நும்கோ யார் என வினவின், எம்கோ 

களமர்க்கு அரித்த விளையல் வெங்கள் 

யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,

ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,

வைகு தொழில் மடியும் மடியா விழவின் 

யாணர் நன்னாட்டுள்ளும், பாணர் 

பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகி 

கோழியோனே கொப்பெருஞ் சோழன் 

என்கிறது. 

உழவர்களைக் களமர்கள் எனக் குறிக்கும் இப்பாடல் குறித்து நா.வானமாமலை கூறும்போது, ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாக வெளியிடுகிறார். உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். 

இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும் என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்தரிக்கிறது என்கிறார்.

அதேபோல, அறுவடைக்கு வேண்டிய நிலமும், மேழியும், எருதுகளும், உழவர்களும்தான் வேளாண் தொழிலுக்கு வேண்டியவை. இவற்றால்தான் அறுவடை நடைபெற முடியும். இவற்றை ஒருங்கே கொண்டிருந்தவர்களே புகழப்பட்டிருக்கிறார்கள். 

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் எனும் புலவர், சிறுகுடிக் கிழான் பண்ணனைப் புகழ்ந்து பாடும்பொழுது, விளைநிலங்களை அளிக்கும் எம் பண்ணனைக் குறித்துக் கேட்டீர்கள். அவனுடைய உழவு எருதுகளையும் உயர்வினையும் பொருளாகக் கொண்டு, கிணை கொட்டி நாடோறும் யான் பாடுவேன். பாடேனாயின், மணி விளங்கும் முற்றத்துத் தென்னவன் வழியினன், முரசு முழங்கும் தானையன் ஆகிய பெருமைமிக்க வழுதியும், என் சுற்றத்தைப் புரந்து அருள் செய்யாது போவானாகுக என்கிறார். இதனை,

வெல்லும் வாய்மொழிப் புல்லுடைவி

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ; அவன்

வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா, 

நாடொறும் பாடேன் ஆயின், ஆனா 

மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன், 

பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை

அண்ணல் யானை வழுதி,

கண்மாறிலியர்என் பெருங்கிளைப் புரவே!

என, உழவுத் தொழில் மரபினர்களையும், அவர் வழிமரபினரான பாண்டியர்களையும் மேற்காணும் புறப்பாடல் பதிவு செய்திருக்கிறது. 

இந்நிலையில், அறுவடைக் காலத்தில் உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையிடும் சடங்கானது, மாட்டுப் பொங்கலன்றுதான் நிகழ்த்தப்படுகிறது. ஏரையும் உழவையும், நிலத்தையும் மாடுகளையும், பயிர்களையும் அறுவடையையும், உழைப்பையும் இயற்கையையும் ஒருங்கே போற்றுகிற வகையில்தான், மாட்டுப் பொங்கல் பண்பாட்டுத் தளுகையை வளப்படுத்தியிருக்கிறார்கள். மாட்டுப் பொங்கல் பண்பாட்டின் உயிர்த்தொடர்ச்சியாக மாடுகள் சார்ந்த நிகழ்த்துச் சடங்குகளையும் நிகழ்த்துவது மரபாக இருந்திருக்கிறது. 

உழைப்பில் சரிநிகராய்ப் பங்கேற்ற மனையாள் உட்பட, மனையார் அனைவரின் உள்ளங்கள் அனைத்தும் மகிழ்வில் பொங்கவும், இயற்கையிடம் நன்றிப் பெருக்கைப் பொங்கி வழிந்து காட்டவும்தான் மனைப் பொங்கல். அதேவேளையில், தம்மோடு உழைப்பில் பகராளிகளாய் உழைத்திட்ட காளை மாடுகளுக்குக் கைமாறாய் நன்றியுணர்வையும் வணங்குதலையும் வாழ்த்துதலையும் உணர்வுகளால் பொங்கிக் காட்டியும், அத்தகைய மாடுகளுக்கும் மகிழ்வைப் பொங்கிவர வைக்கவும்தான் மாட்டுப் பொங்கல். அதாவது, அறுவடை கண்டு மகிழ்வு பொங்கும் உழவுக் குடிகள், அவ் அறுவடைக்குத் துணை நின்ற மாடுகளையும் மகிழ்வில் பொங்கச் செய்யும் பண்பாடே மாட்டுப் பொங்கல் ஆகும். 

புது மாதத்தில் புது நெல்லும், புது மஞ்சளும், புதுப் பானையும், புது வெல்லமும், புதுக் கரும்பும், புத்தாடையும், புதுக்கோலமும் கொண்டு புதுப் பொங்கல் வைத்து மகிழ்வர் உழவர். இந்த மகிழ்வை மாடுகளும் பெறவேண்டும் என்பதற்காகவே மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடி கயிறு அனைத்தும் புதியதாக அணிவித்து, கொம்புகளின் பிசிறு சீவி எண்ணெய் தடவி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டி, செவ்வந்திப்பூ மாலை சூட்டி அலங்கரித்து பசுக்கள், கன்றுகள், காளைகள் என அனைத்து மாடுகளையும் மகிழ்வுபடுத்துவர். அதோடு, முதல் நாள் வைத்த மனைப் பொங்கல் போலவே அனைத்துப் படையல்களோடும் பொங்கலிட்டுத் தளுகை வைத்து வணங்குவர். அந்தத் தளுகைப் பொங்கல், முதலில் மாடுகளுக்குத்தான் ஊட்டப்படும். 

உழவுத் தொழில் புரியும் அவரவர் வீடுகளில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகளுக்கும் தளுகைப் பொங்கலும் வாழைப் பழங்களும் ஊட்டி விட்டதற்குப் பிறகு, அம்மாடுகளின் மீது கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கு நடைபெறும். பொங்கல் வைக்கும்போது பானையில் பொங்கி வழியும் பால் நீரை எடுத்து வைத்திருந்து, கும்பாவில் ஊற்றிய அப்பொங்கல் நீரை, வாழை இலையால் மாடுகளின் மீது அள்ளித் தெளித்தபடியே,

பொங்கலோ பொங்கல்!

பால் பானைப் பொங்கல்!

பட்டி பல்க! பார்த்த கண்ணு வெடிக்க!

பிணியும் நோவும் தெருவோடு போக!

எனப் பாடி, கண்ணேறு கழிக்கும் நீர்த் தெளிப்புச் சடங்கை நிகழ்த்துவர் உழவு மரபினர்.

மனிதரும் மாடுகளும் இணைந்து உழுதிட்டதாலும் உழைத்ததினாலும் கிடைத்திட்ட உணவு உற்பத்தியின் முதல் அறுவடையை, மனிதரும் மாடும் நுகர்ந்திடுவதைத்தான் மாட்டுப் பொங்கல் சடங்கு உணர்த்துகின்றது. அதாவது, வேளாண் உணவு உற்பத்தியில் ஈடுபட்ட மனிதரும் மாடும் தங்களது அறுவடையை நுகர்ந்து கொள்வதின் போலச் செய்தல் சடங்காகத்தான் மாட்டுப் பொங்கல் அமைந்திருக்கிறது. 

பொதுவாக, அறுவடைக் காலத்திலேயே மனனப் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டாலும், வேளாண்மை நடைபெறுகின்ற சிற்றூர்ப் புறங்களில் மனைப் பொங்கலைக் கட்டிலும் மாட்டுப் பொங்கலே பெருமளவில் கொண்டாடி வந்துள்ளனர். இன்றும்கூட அப்படித்தான். மாடுகளுக்குப் பொங்கல் படையிலிட்டு வணங்கிய பிறகு, கூடவே, வேளாண்மை உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபட்ட மனிதர்களும் மாடுகளும் தழுவிக் கொள்ளும்படியான நிகழ்வு ஒன்றுகூடி நடத்தப்பட்டிருக்கிறது. 

உழைப்பில் பங்கேற்கிற இரு வேறு உயிரினங்களான மனிதரும் மாடுகளும், உறவாலும் அன்பாலும் மகிழ்வாலும் தழுவிக் கொண்டு உயிர்ப்பிக்கிற வகையில், காலங்காலமாக நேர்ந்து வருகிற ஒரு நிகழ்த்துச் சடங்கை ஊரார் கூடி  நேர்த்திக் கடனாக நிகழ்த்தி வந்திருக்கின்றனர். 

மாடுகளும் மனிதர்களும் தழுவிக் கொள்ளும் இச்சடங்கு, வேளாண் உற்பத்தியின் நேர்த்திக் கடனாகவே பயிலப்பட்டிருக்கிறது. சடங்கியல் சார்ந்த இந்த நேர்த்திக்கடன், வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்காகவே பின்பற்றப்பட்டிருக்கிறது. 

சினை பிடித்தல், ஈத்து, பால் சுரப்பு, பெருத்த திமில் இன்மை போன்ற காரணங்களால் பசு மாடுகளைத் தழுவிக் கொள்ளும் மரபு இருந்திருக்கவில்லை. உடல் வலு, உழுது இறுகிப் போன உடல் தோற்றம், நீள் முதுகு, சதை இறுகிய கால்கள், பெருத்த திமில், துள்ளல் போன்றவை காளை மாடுகளுக்கு உடலியல் கூறுகளாய் வாய்த்தவை. ஆதலால், மனிதர்கள் தழுவி விளையாடும் மாடாகக் காளை மாடுகளே உகந்ததாகவும் உரித்தானதாகவும் கருதியுள்ளனர். 

மாட்டுப் பொங்கல் தளுகையை மாடுகளுக்கு ஊட்டிவிட்டும், நீர்த் தெளிப்புச் சடங்கு முடிந்ததன் பிறகும், அலங்கரிக்கப்பட்ட அக் காளை மாடுகளை ஊர்ப் பொதுவிடங்களில் அல்லது வயல்வெளிகளில் அவிழ்த்துவிட்டு, அவற்றின் திறத்தோடும் தினவோடும் உறவாடித் தழுவிக் கொள்ளும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. போலச் செய்தல் சடங்காகவும் பயில்முறைச் சடங்காகவும் இந்நிகழ்த்துச் சடங்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, வேளாண்மையின் தொடக்கம்தான் கடுமையான உழைப்பை வாங்கும். உழவுக் காலத்தில் நஞ்சையிலும் புஞ்சையிலும் மாறி மாறி மாடுகள் உழுகின்றன. நஞ்சையில் புழுதி உழவு, தொளி உழவு, தொளிப் பிறட்டுதல், பரம்படித்தல், ஏற்றம் இறைத்தல், கமலை இழுத்தல் போன்ற உழவின் அத்தனையிலும் பங்கேற்கிற காளை மாடுகள், அறுவடைக்காலம் வரும் வரையிலும் பெரும்பாலும் ஓய்விலும், சிற்சில வேலைகளில் மட்டுமே பங்கெடுக்கும். ஆதலால், காளை மாடுகள் தமது ஓய்வுக் காலங்களில் தினவுடனேதான் இருக்கும். அவற்றின் தினவைத் தீர்க்கும் பொருட்டுத்தான் மாடு உரசு கல் சிற்றூர்ப் புறங்களில் நடப்பட்டுள்ளன. இதனை, ஆ உரிஞ்சி, ஆ தீண்டு குற்றியென்று சொல்லப்பட்ட  தறிகள் என்பார் பாவாணர். 

அறுவடைக்காலம் வரையிலும் ஓய்வில் இருக்கும் காளைகள் தினவுடனும் துள்ளலுடனும் மிடுக்குடனும்தான் இருந்திருக்கும். முன்னங்கால்களால் பிராண்டுதல், கொம்புகளால் மண்ணைக் கிளறுதல், பாய்ந்தோடுதல், முட்ட வருதல், பின்னங் கால்களால் உதைத்தல், சீண்டுதல், எக்குப் போடுதல், இணை தேடுதல் போன்ற அனைத்தும் காளைகளின் தினவு வெளிப்பாடுகள்தான். காளைகளின் இத் தினவையும் துள்ளலையும் மனிதர்களின் தழுவல்களே நிறைவு செய்கின்றன. 

இவை ஒருபுறமிருக்க, அறுவடைக்குப் பிறகு அடுத்த உழவு தொடங்க இருப்பதனால், காளைகளும் சோம்பல் முறித்து, தினவு தீர்ந்து உழவில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததால், அக் காளைகளைத் தழுவி அணைத்துக் கையாளும் பழகு முறையாகவும் மாடு தழுவல் சடங்கு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நோக்கத்திலும் பின்புலத்திலும்தான் மாடு தழுவல் சடங்கானது வேளாண் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும். 

வேளாண் சார்ந்த  உழவுக் குடிகள் ஒவ்வோர் ஆண்டும் இம் மாடு தழுவல் சடங்கைக் கண்டிப்பாக நிகழ்த்த வேண்டும். இது நடக்காவிட்டால் தீங்கு நேரும், மழை இன்றிப் போகும், பஞ்சம் வரும் என்பது உழவுக் குடிகளின் - உழவுத் தொழில் மரபினரின்  நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அவ்வகையில், மாட்டுப் பொங்கல் தளுகையும், பொங்கல் சார்ந்த நடத்தைகளும் வேளாண்மைத் தொழிலுக்கான வளமைச் சடங்காகவே பயிலப்பட்டு வழமையாக்கப்பட்டு வந்திருக்கின்றன. 

காளை மாடுகள் தழுவும் சடங்கியல் நிகழ்த்தல்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் நிறையவே பதிவு செய்திருக்கின்றன. 

மள்ளர் கட்டிய வெள்ளைக் காளையைப் 

பேய்த்தண்ணீர் வெறியாலே 

கொம்பை உயர்த்திப் பிடிப்பாராம், 

குருமலைதனில் வாழும் கெச்சிலாக்

குடும்பன் கட்டிய இடும்புக் காளையை

மருவில்லாத தென்னிசைக் குடும்பன் வளைத்துப் பிடிக்கவே

என, உழவுத் தொழில் மரபினரின் ஏறு தழுவல் சடங்கை எட்டையபுரப் பள்ளு சுட்டியிருக்கிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


திங்கள், 10 ஜனவரி, 2022

ஆரிய வைதீகத்தைக் கட்டுடைத்திருக்கும் மிக முக்கியமான நூல்: மா.ஜெயச்சந்திரன்



நீரின்றி அமையாது உலகு என்பார் திருவள்ளுவர். மாமழைப்போற்றுதும்! மாமழைபோற்றுதும்! திங்கள் போற்றுதும்! திங்கள் போற்றுதும்! என்கிறது சிலப்பதிகாரம். அவ்வகையில், திங்கள் எனும் 'நிலா' வணக்கமும், மழை வழிபாடும்

தமிழர்களிடையே பண்டையக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதை நாம் அறியமுடியும்.

   

இறை வணக்கத்திற்கு அடுத்து 'வான் சிறப்பு' அதிகாரத்தை வைத்து நீரின் அவசியத்தை உலகுக்கு உணர்த்தியவர் வள்ளுவர். 'நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' என்கிறார் வள்ளுவர். இந்தக் குறளில் திருவள்ளுவர் 'ஒழுக்கு' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதாவது, மழை இல்லையென்றால் நாட்டில் ஒழுக்கம் கெட்டு விடும் என்கிறார். மேலும், 'நீரின்றி அமையாது உலகு' எனும் வரியில் 'அமைத்தல்' என்பது செயற்கையானது;  'அமைந்திருத்தல்' தான் இயற்கையானது! இந்த பூமி நீரைக்கொண்டே விரிவடைகிறது என்றும் எழுதுகிறார் வள்ளுவர். அதனால்தான், விரிநீர் வியன் உலகு! என்று எழுதினார் வள்ளுவர். 


"வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று" என்று, சாவா மருந்து எனக் கூறப்படும் அமிர்தத்திற்கு நிகரானது  'மழை!' என்றும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். 


உழவர்களின் உழைப்பைப் பயனுள்ளதாக்குவது மழையே!

அந்த மழை வேண்டி உழவர்களால்  செய்யப்படும் சடங்கே  மழைச்சடங்காகும். 


மழைச் சடங்கு, வேளாண் மக்களால் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் முதன்மையானது. 

இந்த மழைச்சடங்கு சமூக நன்மை கருதிச்  செய்யப்படும் கூட்டுச்சடங்கே! 


மழைச்சடங்கும், முளைப்பாரிச் சடங்கும் தானியங்களின் செழிப்பையும், மனித வாழ்வின் செழிப்பையும் தூண்டச் செய்யும் வளமைச் சடங்குகளே! 


உழவர்கள் மழை வளமில்லாத நிலையில், தங்களது துன்பத்தையெல்லாம் தீர்க்கவேண்டும் என்று இரங்கி மழைத்தெய்வத்தை வேண்டுகிறார்கள் என்பதை, 


ஏர் பிடிக்குந் தம்பியெல்லாம் பின்னப்பட்டு நிக்கிறாங்க!அந்தக்குறை கேட்டு வந்திறங்கு இந்திர தேவா! 


மேழிபிடிக்கும் தம்பியெல்லாம் முகஞ்சோந்து நிக்கிறாங்க! 

அந்தக்  குறை கேட்டு வந்திறங்கு 

இந்திர தேவா ! 


பூமி செழிப்பதெப்போ? 

எங்க புள்ளைப் பஞ்சம் தீர்ப்பதெப்போ? 

ஓடி வெதச்ச கம்பு 

ஐயோ இந்திரதேவா!

ஊடு வந்து சேரலையே!

பாடி வெதச்ச கம்பு ஐயோ இந்திரதேவா!

பானை வந்து சேரலையே! என்று பாடுகிறார்கள். 


உழவர்களின் வேண்டுதலுக்கிணங்க இந்திரன் அருள் கிடைக்கப்பெற்று 'ஈசானிமூலை' கருத்து, மழை கொட்டுகிறது. அப்போது பாடும் பாடலாக, 


"நாடு செழிச்சிருச்சு

நல்ல மழை பெஞ்சிருச்சு!

ஊரு செழிச்சிருச்சு

ஒத்த மழை பெஞ்சிருச்சு!

கொல்ல செழிச்சிருச்சு

கொள்ள மழை பெஞ்சிருச்சு!

கோடு திரிஞ்சிருச்சு

கோடைமழை பெஞ்சிருச்சு!

காலம் செழிச்சிருச்சு

காரிமழை பெஞ்சிருச்சு" என்று உழவர்கள் மழை பெய்த  மகிழ்ச்சிப்பெருக்கில் பாடுகிறார்கள். ஆக, நீரின்றி அமையாது உழவு! 


நீரே கடவுள்! தேவேந்திரனே நீரே

என் கடவுள்! என்று மழைத்தெய்வமான இந்திரனை வழிபடு தெய்வமாகக் கொண்ட மருதநில மள்ளர்கள் தமது வேந்தனாகிய இந்திரனுக்கு

இந்திரவிழாவின்போது மழைச்சடங்கை  நிகழ்த்தி 

"மள்ளர் எல்லாம் கூடி மழைக்குறி பார்த்துக் காத்திருக்கிறார்கள்". அப்போது காவுக் இறைவனாகும் இந்திரன், கற்பகப்பூங்காவின் தலைவனாகிய இந்திரனின் ஏவற்கட்டளையை ஏற்று மழை பொழிந்தது என்பதை,

காவுக்கு இறைவனாகும் இந்திரன்

எவற் பணி கொண்டெழுந்த கார் என்று பதிவுசெய்கிறது முக்கூடற்பள்ளு. ஆக, மருதநில வேளாண் மக்களால் மழைக்கடவுளாக வணங்கப்படுகிறவன் இந்திரனே!வேளாண் மரபினரால் செல்வத் திருமகனாகச்  சங்க காலத்திலிருந்தே

கொண்டாடப்பட்டவன்

இந்திரன். இந்திரனுக்கு வச்சிரமே  படைக்கலம்! ஆதலால், அவனை 

"வச்சிரத்தடக்கை நெடியுயோன்" என்கிறது புறநானுறு. 


இந்திரனும் முருகனும் 'கோட்டங்களில்தான்' வாழ்ந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்! 


கோயிலுக்கு முந்தைய வடிவம் கோட்டமல்லவா?! ஆதலால்தான், அவர்கள் பக்தி இயக்கத்திற்கும் முந்தியவர்கள்; மூத்த தொல்குடிமக்களின் தொன்ம வழிபாட்டுச்சடங்கில் நிலைகொண்டவர்கள். 


முருகனும், இந்திரனைப்போலவே மழைக்கடவுளாக, வளமை வழிபாட்டுக்குரியவனாகவே வணங்கப்பட்டிருக்கிறான். 


இந்திரனுக்கு மழைச்சடங்கு, என்றால் முருகனுக்கு மழைவேண்டி "வயந்தன் கம்பாட்டம்!" முருகனுக்குக் காவடிஆட்டம் என்றால்?! இந்திரனுக்கு இந்திராணியோடு வயலில் ஆடிய கடையஆட்டம்!

இந்திரனுக்கு இந்திர விழா! என்றால், முருகனுக்குக் கார்த்திகைத் தீபத் திருநாள்! 


கார்த்திகை விழா! என்பது ஒரு பண்பாட்டுவிழா! பெய்த மழை போதும் என்று நன்றிகூறி மழையை வழியனுப்ப ஆகாயத்தைநோக்கி நெருப்பைக்காட்டுகிற இந்த விழாவே தமிழர்கள் கொண்டாடும்

திருக்கார்த்திகை எனும்

தீபத் திருநாளாகும். 


மழையை வழியனுப்பும் விழாவைப்போல மழையை வரவேற்கும் ஒருவிழாதான் ஆடி-18;

ஆடிமாதம் 18ஆம் நாள். ஆடிமாதம் நல்ல மழைபெய்து ஆற்றில் வரும் புதுப்புனல் வருகையை வரவேற்றுக் கொண்டாடும் விழாதான் ஆடி 18.

இது மருதநில வேளாண்குடிகளும் அவர்களது உழவோடு தொடர்புடையை 18 தொழிற் குடிகளும் இணைந்து கொண்டாடும் விழாவாகும். 


மழையை வரவேற்கும் விழா! மழையை வழியனுப்பும் விழாவைப்போல, மழைத்தெய்வமான வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றிகூறும் விழா வேண்டுமல்லவா?!அதுதான் இந்திரவிழா! 


"தீவகசாந்தி செய்தரு நன்னாள் " என்று பண்டையக் காலத்தில் காவிரிப்பூம்பட்டிணத்தில் நடடைபெற்றுவந்த இந்திரவிழாவைப் பற்றி மணிமேகலை கூறுகிறது. 


அந்த விழாவின்போது, இந்திரவிழாவிற்கு வரும் மகளிர் எல்லாம் பல்வேறு வகையான பூக்களை, மலர்களைச் சூடியிருந்தனர் என்கிறது ஐங்குறுநூறு! 


"இந்திர விழவின் பூவின் அன்ன

புன்தலைப் பேடை" என்கிறது ஐங்குறுநூறு! 


இந்திரன் அறத்தின் தெய்வம்/ஆற்றலின் குறியீடு/ வளமைக்கான தெய்வம்/ பஞ்சபூதங்களின் தலைவன்/ முதல் வேந்தன்/ மருதநில மள்ளர்களின் குல முதல்வன்/அதனால்தான், இந்திரனைப் புலியெனக் கொடியில் வைத்தான் சோழன் என்கிறது இந்நூல். 


உழத்தியர் வணங்கும் முதல்நாற்று முடியை இந்திரமுடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபு! 


தீம்புனல் உலகின் வேந்தனான  பாண்டியன் முடிக்கு(கிரீடம்)ம் 'இந்திர முடி 'என்றே பெயர். 


இந்திரன் உயர்ந்தவன்/ஆற்றலில் சிறந்தவன். ஆகையால்தான் குஞ்சர மல்லன் தென்குடும்பன் இராச இராச சோழன் தன்னை "இந்திர சமானன்" என்று  கூறி இந்திரனோடு தம்மை ஒப்புமைக் காட்டி சிலிர்த்துக்கொண்டான்.... 


'மங்கலம்' என்ற சொல்லுக்கும் இந்திரனுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆம், அவன் மங்கலன்தான். 


இந்திரனை அமங்கலனாக்க அகலிகைக் கதையைப் புனைந்து  வீழ்த்த நினைத்த ஆரிய வைதீகச் சூழ்ச்சியைக்  கட்டுடைத்து போடுகிறது வேளாண் மரபின் தமிழ்அடையாளம் எனும் இந்நூல்! 


வேளாண் மக்களின் வளமைச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டதாகும். மழைத்தெய்வம் இந்திரனே, தேவேந்திரனே! இந்திர குலத்தார் எனும் உழவுத்தொழில் மரபினரே இந்தச் சடங்கை முன்னெடுக்கிறார்கள். மழை இல்லாத காலங்களில்  மழைவேண்டி

மழைச் சோறு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 


மழைச்சோறு எடுக்கும் போது எல்லா வீடுகளிலும் கூட மறக்காமல் மழைச்சோறு சடங்கு நடத்துவதற்காக சோறு வாங்குகிறார்கள் பகை வீடுகளிலும்கூட... இந்நிகழ்வின் மூலம் பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இதில் மங்குகிறது என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் ஏர் மகாராசன். 


பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான் நிலத்தின் மழை ஏக்கத்தை, நிலத்தின் மழைத் தவிப்பை, நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள் என்றும்,  இந்திர வழிபாட்டின் நீட்சியாகத்தான் பல்வேறு வளமைச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவை பெண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்றும், சோறு வாங்கும்போது கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பாடல் பாடுவது எனப் பெண்களே இந்தச் சடங்கில் மையம் கொள்கிறார்கள் என்கிறார் மகாராசன் 


இந்திரனை வைதீக அடையாளமாக நுழைத்தது முதல் சித்திரை முதல் நாளை ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்தது வரை தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வைதீகமானது தன்வயப்படுத்திக் கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பல காலமாக ஈடுபட்டு வருகிறது. 


தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையை இழிவான தொழில்; பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரியம்.

உழவுத்தொழிலை இழிவானது என்கிறது மனு சாஸ்திரம். ஏர் பூட்டி உழுவதே பாவமாகக் கருதிய வைதீக மரபு, அதனுடைய சமஸ்கிருத மொழியில் ஏர் எனும் சொல்லே இல்லை என்றும், அதே வேளையில், வேளாண்மைத் தொழிலே தமிழர் வாழ்விலும் தலையாயத் தொழிலாக இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார் மகாராசன். 


உழவைப் பாவமாகக் கருதிய ஆரிய மரபின் சடங்குகள், மரபுகள் நெருப்போடும் வானத்தோடும் தொடர்புடையவை. அதற்கு மாறாக, வேளாண் பண்பாட்டு மரபு என்பது மண் சார்ந்தது. அதன் சடங்குகள், மரபுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆரிய வைதீகத்துக்கு எதிரானது. 


மழைச்சோறு சடங்கு எனும் வேளாண் பண்பாட்டுச் சடங்கானது வைதீக மரபுக்கு எதிரானது! 


தமிழர் பண்பாட்டு மரபுச் சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்குகளும் நீரில்லாமல் அமைவது இல்லை. ஆகையால், வேளாண் பண்பாட்டு மரபு என்பது, வேளாண் பண்பாடு என்பது இயல்பாகவே நீர் சார்ந்தும் மண் சார்ந்தும்  இயங்கக் கூடியது என்கிறார் மகாராசன். 


ஆகவே, ஆரிய  வைதீகச் சடங்கு உடன் கூடிய ஆரிய மரபு இந்திரனுக்கும், 


இந்திர அடையாளத்துடன் கூடிய மருதநில உழவர்கள் முன்னெடுக்கும் வேளாண்மைச் சடங்குகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இயல்பிலேயே வேளாண் பண்பாடும், அவர்தம் வழிபாட்டு மரபும், ஆரியர் வழிபாட்டு மரபும் வேறுவேறாகும். இதையேதான் அம்பேத்கரும் ஆரிய வைதீக வேதங்களில் இந்திரன் பாதியிலேயே வந்து பாதியிலேயே காணாமல் போய்விடுகிறான் என்றும், ஆரிய இந்திரன் என்பதும் புனைவே என்கிறார். 


இயற்கை உற்பத்தியும், மானிட உற்பத்தியும் செழிப்பை நோக்கியே நகருகின்றன. பொங்கல், பூ, சந்தனம், குங்குமம், தேங்காய், வாழை இவையெல்லாம் செழிப்பின் அடையாளங்கள்தான். பெரிய வயிறும், நிறைந்த மார்பும் செழிப்பின் அடையாளம்தான். உரத்தின் கடவுளான ஜேஷ்டாதேவி என்கிற 'தவ்வை' வளமையைக் குறிக்கிற விதமாகவே பெரிய, பருத்த மார்புகளோடு காணப்படுகிறாள். 


அதேபோலத்தான், இந்திரனும் முருகனும் தாந்திரீக மரபின் வளமை வழிபாட்டின் நீட்சியேயாகும். 


முருகன் 'செய்யோன்' என்று அழைக்கப்பட்டான்! இந்திரன் 'செங்கண்மால்' என்று அழைக்கப்பட்டான். இரண்டுமே செம்மையோடு, செந்நிறத்தோடு தொடர்புடைய பெயர்களே ஆகும். 


செம்மை என்பது மகப்பேறு காலக் குருதி! பூப்பு எய்தல் குறியீடுதான் செம்மை என்பதாகும். 


பரிபாடலில் முருகனை வர்ணிக்கும்போது, முருகன் உடல் எல்லாம் குங்குமம் பூசியுள்ளார்கள்.

அவனது யானைக்கும் குங்குமம் இடப்பட்டது. தந்தத்தில் குங்குமம், பிடரியில் குங்குமம், அவனது 'கொடி ' உட்பட எல்லாவற்றையுமே செம்மையாகக் காட்டப்படுகிறது. 


செம்மை என்பது குருதியின் குறியீடே!

செய்யோனாகிய முருகனும் வளமைக்கான கடவுள்தான் என்பதையே இது உணர்த்துகிறது. 


வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் இந்நூலின் அட்டைப் படத்தில் நெல்நாற்றுமுடியில் குங்குமம் இடப்பட்ட காட்சியை நூல் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பதுகூட விதை, நாற்று என்பதெல்லாம் விளைச்சலை, போகத்தை, வளமையையே குறிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகத்தான்!

'நெல் நாற்றுமுடி'க்குக் குங்குமம் வைத்திருப்பதே  தாந்திரீக மரபின் வளமைக்கான குறியீட்டு மரபு வடிவம்தான். 


மேலும், நாற்றுமுடி, 'இந்திரமுடி' என்றே இன்றுவரை அழைக்கப்படுகிறது. அதில் குங்குமம் இடுவது என்பது, வளைமை வழிபாட்டின் குறியீட்டு மரபின் நீட்சியேயாகும்! 


விதையிடுதல், நாற்றுநடுதல்,

மழைபெய்வித்தல், மழைநீரைக்காத்தல், ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைக்

காத்தல் என்ற வளமை சார்ந்த வழிபாட்டுக் குறியீட்டு மரபைச் சார்ந்தவர்களாகத்தான்  ஐயனாரும்/இந்திரனும் காணப்படுகிறார்கள். 


இந்த போதிசத்துவர்களின் நினைவாகத்தான் போகிப்பண்டிகையன்று நெல்லோடு சிறுபூளைப் பூவையும் கலந்து  தூவுதல், வேப்பிலை, மாவிலை, கூழைப்பூ எனும் கண்ணுப்பீளை தோரணங்களையெல்லாம் குளக்கரையிலும்,

வீட்டின் முகப்புகளிலும் வைத்துக்கட்டி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதுவே காப்புக்கட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. 


அறுவடைக்கான வேளாண் உற்பத்தியைப் போகம் எனும் சொல்லால் குறிப்பது வழக்கம். போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான் போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் 'போகி' என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்கள். அதாவது, போகத்தைத் தருவதால் 'போகி' என  மழையைக் குறித்துள்ளார்கள். மேலும், வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாக இருப்பவை  இந்த மழையும் மாடுகளும்தான்.

அந்தவகையில், உழவுத்தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

மழையைத் தெய்வமெனத்

தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்கிறார்கள் உழவுமரபினர் என்றும், அத்தகைய மழைத்தெய்வமானது 'போகி' என்னும் இந்திரனே என்கிறது இந்நூல்! 


இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிச்சொல்லே.

வருணன்(நீர்)/ வாயு(காற்று)/ சூரியன்/ அக்னி மற்றும் பிறதெய்வங்கள் /தேவர்கள் இந்திரனுக்குக் கீழே இருப்பவைகளாகும். 


இந்த ஐம்பூதங்களே பலபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரம்.

அந்த உற்பத்திக்குக் காரணமான இந்திரனே பஞ்சபூதங்களின் தலைவனுமாவான். 


வேளாண்மரபின் மழைநீர்த்தெய்வம் இந்திரனே! அவனே முதல்வேந்தன்/காப்புக்குரியவன். காப்புக்கட்டுதல் என்பது ஒரு வளமைச்சடங்காகும். 


பொங்கலுக்கு முதல்நாள் மழைத்தெய்வத்துக்கு நன்றி பாராட்டுதல் எனும் வளமைச்சடங்குதான் இந்தக் காப்புக் கட்டுதல். 


காப்புக்கட்டுதலில் வேப்பிலை /மாவிலை/ கண்ணுப்பூவிலை அல்லது கூழைப்பூ!/ஆவாரம் பூ போன்றவை வீட்டுமுகப்புகளிலும் குளக்கரையிலும் வைத்து காப்புக்கட்டப்படுகிறது. இந்தக் கண்ணுப்பூவிலையைப் பற்றி அதன் பல பெயர்களாக கண்ணிப்பிள்ளை/ கூழைப்பூ/கண்ணுப்பூளை/ கூரைப்பூ என்றெல்லாம் விவரிக்கும் இந்நூல், எதற்காக இந்திரனுக்கு இந்தப்பூவை வைத்துக் காப்புக் கட்டுகிறார்கள் என்றால்?! ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திர அடையாளத்தை-

போகியைக் குறிக்கவே பொங்கலுக்கு முதல்நாளான காப்புக்கட்டுதலில் இந்தப்பூவானது பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஏர் மகாராசன். 


மேலும், போகி என்பது நீருக்கு நன்றிசெலுத்தும் நாள்;

பொங்கல் என்பது 'போகி' யாகிய இந்திரனுக்கும் மாடுகளுக்கும் நன்றிசெலுத்தும் நாளே என்றும் குறிப்பிடுகிறார் மகாராசன். 


சிந்து என்பதற்கு நீர்ப்பொருள்தான்.

நீர் என்று சொல்லப்படவேண்டிய இடங்களிலெல்லாம் 'சிந்து' என்றே நூற்றுக்கணக்கான பாடல்களில் ரிக்வேதம் கூறுகிறது. 


சிந்து+அரன்=சிந்திரன்.

சிந்திரன் என்பதே இந்திரன் என்று மருவியது. ஆகையால், இந்திரன் தமிழ்ச்சொல்லே என்று இந்திரனுக்குச் சொல்லாய்வுகளின் வழி விளக்கம்காட்டி சிலிர்க்க வைக்கிறது இந்நூல்.... 


நீர் திரவ வடிவம்!

திட வடிவம்! என இரு வடிவங்களையுடையது என்பது அறிவியல் மரபு! 


அந்த மரபை உடைத்து?!

நீருக்கு ஒரே வடிவம்தான். அது, இந்திரன்தான் என்கிறது  இந்நூல்! 


நீரியல் சிந்தனையறிவு வேளாண் மக்களுக்கு மட்டுமல்ல, இந்நூலாசிரியக்கும் மிகஅதிகம் என்ற உணர்வு இந்நூலை வாசிக்கும்போதே நமக்கு ஏற்பட்டு விடுகிறது. 


'நீரின்றி அமையாது உலகு'-என்பது

எவ்வளவு உண்மையோ?! அவ்வளவு உண்மை!   இந்நூலின்றி இனி அமையாது  வேளாண் மரபு! 


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! என்கிறான் பாரதி!

'வந்தனை' செய்திருக்கிறார்

ஏர் மகாராசன். 


வாழ்த்துக்கள்! 


கட்டுரையாளர்:

கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,

மாவட்டச் செயலாளர்,

நாம் தமிழர் கட்சி. 


*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506


ஞாயிறு, 9 ஜனவரி, 2022

போகிப் பண்டிகை: மழைத் தெய்வ - இந்திர வழிபாட்டின் பண்பாட்டு வடிவம் : மகாராசன்


ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.  இத்தகையப் பொங்கல் விழாவைப் போகி வழிபாட்டுச் சடங்குடன் தொடங்குவதுதான் உழவுத் தொழில் மரபினரின் வழக்கமாய் இருந்திருக்கிறது. வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும். மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு. போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர். 

வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை - இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது. 

கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர். எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது. 

ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது. 

பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

போகி என்னும் மழைத் தெய்வத்திற்கான வளமைச் சடங்கின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் ம.சோ.விக்டர் இதுகுறித்துக் கூறும்போது, கதிரவனுக்கும், மழைக்கும், இயற்கைக்கும், வேளாண் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகப் பொங்கல் விழா கருதப்படுகிறது. உலக நாகரிகங்களில் இதனை அறுவடை விழா எனக் கொண்டாடினர். சங்ககாலத்தில் தொடர்ந்து ஒரு மாதம் நிகழ்வுற்ற  இந்திர விழாவின் தொடர்ச்சியாக அல்லது அந்த விழாவை மீண்டும் புதுப்பிக்கும் விழாவாகப் பொங்கலைக் கருத இடம் உண்டு. 

போகிப் பொங்கல் என்ற முதல் நாள் விழா, பழையன போக்கி புதியன ஏற்றல் என்ற பொருளில் அறியப்படுகிறது. போகி - போக்கி என்ற சொற்சுருக்கமாகக் கூறுவர். போகி என்ற பெயர் இந்திரனுக்கு உரியது. போகுதல் என்பது நுழைதல், புணர்தல் என்ற பொருளிலும் விரியும். பொங்கல் விழாவின் முதல் நாள் விழா, இந்திரனை நினைவுகூறும் விழாவாகவும் கருத இடமுண்டு என்கிறார். 

மேலும், சங்ககாலத்தில் இந்திரவிழா ஒன்றே தமிழகத்தின் பெருவிழாவாக இருந்தது. சங்கம் மருவிய பின் அயலாருடைய ஆட்சி தமிழகத்தில் தோன்றிய பிறகு இந்திர விழா கைவிடப்பட்டது. பொங்கல் விழா சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவும் காளைகளுக்கும், உரம் முதலியவற்றை அளிக்கும் மாட்டுக்கும் நன்றி கூறும் விழா என்று சொல்லப்படுகிறது. 

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாளில் கொண்டாடப்படும் விழா வேளாண்மையை மையப்படுத்துகிறது. வேளாண்மைக்கு அடிப்படையான நீரைப் பற்றிய செய்திகளும் நீரை வழிபடுவதும் பொங்கல் விழாவில் காணப்படவில்லை. போகி என்ற சொல் பழையவற்றைப் போக்கி அழித்தல் என்றும், அதனால் பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவது என்றும் சொல்லப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்று சொல்லப்படுவதற்கும் தீயிடல் போன்ற நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

போகி என்ற சொல் இந்திரனைக் குறிப்பது (போகி தமிழ்ச் சொல்லே). பொங்கல் விழாவின் முதல் நாளில் போகி நாள் என அறியப்படுவது இந்திரனை நினைவு கூறுவதே எனக் கருத இடமுண்டு. எனவே, போகி நாள் நீருக்கு நன்றி சொல்லும் நாளாகக் கருதலாம். எனவே, கைவிடப்பட்ட இந்திர விழாவின் மறு விழாவாக இந்திரனை முதல் நாள் வாழ்த்தித் தொடங்கும் விழாவாகப் பொங்கல் விழாவை கருத இயலும் என்கிறார் ம.சோ.விக்டர். ஆகவே, உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் பண்பாட்டுப் புலப்பாட்டு நடத்தைகள், மழைத் தெய்வமான போகியை  - இந்திரனைத் தொழுத பிறகே நடைபெறுகின்றன எனலாம். 

தை மாத வேளாண்மைப் போகத்தின் அறுவடை என்பது, மருத நிலத்தின் வயல்வெளி சார்ந்த நெல் அறுவடையை மட்டும் குறிப்பதல்ல. மருத நிலத்தில் பெருவாரியாக நெல் விளைவிக்கப்பட்டாலும், கரும்பு, மஞ்சள், வாழை போன்றவையும் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, குறிஞ்சி, முல்லை நிலங்களிலும், நெய்தல் நிலத்தின் அருகமைப் பகுதிகளிலும், மிக அரிதாகப் பாலை நிலத்திலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தந்த நிலத்தின் வாகுக்கும் மழைப் பொழிவுக்கும் ஏற்ற வகையில் வேளாண் பயிர்கள் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. 

மேற்குறித்த நிலங்களிலும் வேளாண் போகம் அறுவடை செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நில மக்கள் யாவருக்குமான உணவின் பெருந்தேவையையும் பெருமகிழ்வையும் தந்திருப்பது நெல்லின் அறுவடைதான். அதனால்தான், அய்ந்து வகைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழர் யாவரும், நெல்லரிசிப் பொங்கலிட்டு அறுவடைப் பண்பாட்டைப் புலப்படுத்தியிருக்கின்றனர். 

பொங்கல் தளுகையில் மருத நிலத்தின் நெல்லரிசி மட்டுமே இடம்பெறுவதில்லை. மருத நிலத்தில் விளைந்த கரும்பும் மஞ்சளும் வெற்றிலையும், குறிஞ்சி நிலத்தின் கிழங்குகளும் பாக்கும், முல்லை நிலத்தின் பூசனி, சுரை, புடலை போன்ற காய்களும் மொச்சை போன்ற பயறுகளும், நெய்தல் நிலத்தின் உப்பும் பனங்கிழங்கும் என, எல்லா நிலப்பகுதியிலும் விளைவிக்கப்பட்ட உணவு மற்றும் உணவு சார்ந்த அறுவடைப் பொருட்கள் யாவும் பொங்கல் தளுகையில் இடம்பெற வைப்பது பொங்கல் வழிபாட்டு மரபில் இருந்திருக்கிறது. 

இவ்வாறு, பொங்கல் தளுகையில் மற்ற அறுவடைப் பொருட்கள் இடம்பெற வைத்ததன் நோக்கம் என்பது, அய்ந்து வகைத் திணைநிலப் பரப்புகளில் விளைவிக்கப்பட்ட வேளாண் போகத்தைச் சமமாகப் பாவித்தலை அடிப்படையாகக் கொண்டதாகும். 

அய்வகை நிலப்பரப்பிலும் வேளாண்மைத் தொழில் நடைபெற்று வந்திருப்பதையும், பண்டமாற்று மட்டுமல்லாமல், உணர்வுப் பறிமாற்றங்களும் நடைபெற்று வந்திருப்பதையும்தான் இத்தகையப் பண்பாட்டு நடத்தைகள் காட்டுகின்றன. அதனால்தான், அய்வகைத் திணை நிலம் சார்ந்த தமிழர் யாவருக்குமான பண்பாட்டுப் புழங்கு வெளியாகப் பொங்கல் தளுகைச் சடங்கு அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506



பொங்கல் பண்டிகை: அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடு - மகாராசன்


மழை வளம் கருதிய நீர்ச் சடங்கு, நிலம் வளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி வளம் - உணவு வளம் கருதிய அறுவடைச் சடங்கும் வேளாண்மை உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய்த் தமிழ்ச் சமூகத்தில் பன்னெடும் காலமாய் இருந்து வருகின்றது. அவ்வகையில்,  தை என்னும் சுறவம் மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. 

சூரியன், மழை, கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகிற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடைதான். 

இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான். 

தமிழரின் பொங்கல் விழாவானது, அறுவடைத் துய்ப்பின் உணவுப் பண்பாடு சார்ந்த சடங்கியல் கூறுகளை மட்டும் கொண்டதல்ல. பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாட்டில் பல பொருண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும் சொல்லே பொங்கு என்பதாகும். பொங்குவதால் பொங்கல் என்றாயிருத்தல் வேண்டும். 

பொங்கல் என்பது வெறும் உணவுப் பொருள் சமைத்தலை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பொங்கல் எனும் சொல்லானது, பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல் எனப் பல பொருண்மைகளைத் தருகின்ற குறியீட்டுச் சொல்லாகவும் இருக்கின்றது. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடாகவே பொங்கல் அமைந்திருக்கிறது. அவ்வகையில், பொங்கல் சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடுகளும் நடத்தைச் செயல்பாடுகளும் வளமை சார்ந்த சடங்கியல் பின்புலத்தையும் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன எனலாம். 

தை மாத அறுவடைக் காலத்தில் வளமை சார்ந்த பண்பாட்டுப் புலப்பாடாக வழமையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற பொங்கல் பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகி இருக்கின்றன. குறுங்கோழியூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலானது, நெல் களத்தை வருணித்துக் கூறும்போது போர்க்களத்துக்கு உவமையாகச் சுட்டுகிறது. 

வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த 

வாய்க் கரும்பின் கொடிக் கூரை 

சாறு கொண்ட களம் போல, 

வேறு வேறு பொலிவு தோன்ற 

குற்றானா வுலக்கையால் 

கலிச் சும்மை வியாலங் கண் 

என, அறுவடை விழாவானது சாறு கொண்ட களம் போல இருப்பதாகப் புலவர் கூறுகிறார். 

சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச்செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன என்பார் நா.வானமாமலை. இதுகுறித்து அவர் கூறும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது. நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. 

தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளைக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து; நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது என்கிறார்.

சங்ககாலத் தமிழ் நூல்கள் பலவும் அறுவடைக் காலமான தை மாதத்தைச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்)

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறு)

தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறம்)

தைஇத் திங்கள் தண்கயம் போது (ஐங்குறு)

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலி)

எனப் பலவாறாகத் தையின் சிறப்பியல்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. 

இதன் பின்புலத்தில் இருப்பது, அறுவடைக் காலத்தின் பொங்கல் விழாவே ஆகும். 

இதனையே, சீவக சிந்தாமணி குறிப்பிடும்போது, 

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

என, பொங்கலினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் ஓர் அங்கமாக அமையும் அறுவடைச் செயல்பாடானது காலம், இடம், சூழல், தேவை, நோக்கம், நிலம், பயிர் போன்றவற்றால் வேறு வேறான வடிவங்களையும் துய்ப்புகளையும் பண்பாட்டு உள்ளீடுகளையும் கொண்டதாகும். 

தமிழர்களின் பண்பாட்டு மரபில் காணலாகும் பொங்கல் விழாவும் சடங்கியல் கூறுகள் நிறைந்த அறுவடைத் துய்ப்பின் புலப்பாடுதான். அதிலும் குறிப்பாக, நெல் அறுவடையை மய்யமிட்டுத்தான் பொங்கல் விழாச் சடங்குகள் அமைந்திருக்கின்றன. நெல்லின் அறுவடை கண்ட மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் அதேவேளையில், உழைப்பிற்கும் உற்பத்திக்கும் உதவி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிக்கடன் செலுத்தும் தளுகை விழாவாகவே கொண்டாடப்படுகிறது. 

மழைப் பொழிவைப் பொருத்தும், நீர் ஆதாரங்களைப் பொருத்தும்தான் வேளாண்மை உற்பத்தித் தொழில் நடபெற்று வந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற பழமொழிகள் ஒருபோக வேளாண்மைச் சாகுபடியைத்தான் குறிக்கின்றன. அதேவேளையில், ஆற்றுப்படுகையோரங்களில் இருபோகச் சாகுபடிகள் நடந்திருக்கின்றன. மழை நீரை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில், தேக்கி வைத்திருக்கும் மழை நீரைக்கொண்டு ஒருபோக வேளாண்மைதான் விளைவிக்க முடியும். 

ஒரு போகமாகவோ அல்லது இரு போகமாகவோ மேற்கொள்ளப்பட்டு வந்த வேளாண்மை உற்பத்தியானது, தை மாதத்தில்தான் ஏகபோகமாக அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் முடிவையும் - கூட்டுழைப்பின் மகிழ்வையும் - உணவுத் தேவையின் நிறைவையும் தருவது அறுவடைக் களமும் காலமும்தான். அதனால்தான், அறுவடைச் செயல்பாடுகளைச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் உழவுத் தொழில் மரபினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். 

உழவுத் தொழில் மரபினரும், உழவுக்குத் துணை புரிந்த இதரத் தொழில் மரபினரும் ஒருங்கிணைந்த கூட்டுறவாலும் உழைப்பாலும்தான் வேளாண் உற்பத்தியின் அறுவடையைத் துய்க்க முடிந்திருக்கிறது - துய்க்கவும் முடிகிறது. வேளாண்மை உற்பத்தியில் பங்கெடுத்த அனைத்துவகைத் தொழில் மரபினர்கள் மட்டுமல்லாமல், உணவுப் பொருள் வேண்டி நின்ற - நிற்கும் யாவருமே வேளாண்மை அறுவடையை மகிழ்வுடனும் நிறைவுடனும் கொண்டாடி வந்திருக்கின்றனர்; கொண்டாடியும் வருகின்றனர்.

அறுவடைத் துய்ப்பின் பண்பாட்டுச் செயல்பாட்டில் இரண்டு வகையான புலப்பாட்டு நிலைகள் அமைந்திருக்கின்றன. முதலாவதாக, வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டில் நேரிடையாக உழைப்பைச் செலுத்தும் உழவுத் தொழில் மரபினரின் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. இரண்டாவது, உழவுத் தொழிலுக்குப் பக்கத்துணையாய் இருந்த இதரத் தொழில் மரபினரும் மற்றவர்களும் புலப்படுத்தும் பண்பாட்டுத் தளுகை சார்ந்தவை. 

அறுவடைத் துய்ப்பும் மகிழ்வும் இரண்டு தரப்பினருக்கும் பொதுவான ஒன்று; புலப்பாட்டு நோக்கங்களும் ஒன்றுதான். தளுகையிடும் பண்பாட்டு நோக்கங்கள்தான் வேறு வேறாகும். மிக நுட்பமாகத்தான் இந்த வேறுபாடுகளை அறிய முடியும். போகிப் பொங்கல், மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனும் நால்வகைப் பொங்கல் சார்ந்த பண்பாட்டு நடத்தைகளும் தளுகைச் செயல்பாடுகளும் புலப்படுத்தப்படும் பாங்கும் நோக்கமும் வேறு வேறானவை.

உழவுத் தொழிலில் நேரிடையாகப் பங்கேற்காத இதரத் தொழில் மரபினரும் மற்ற தரப்பினரும் பழையன கழிதலாகவும் புதியன புகுதலாகவும் போகி நாளைக் கருதுவர். மனைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கலிட்டுப் பண்பாட்டுத் தளுகையை அவர்கள் படைப்பர். மேலும், காணும் பொங்கலன்று உறவுகள் சூழ விருந்துண்டு மகிழ்ந்திருப்பர். இந்தத் தரப்பினரைப் பொருத்தளவில், வேளாண்மை அறுவடைத் துய்ப்பும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும், வேளாண்மை செய்வித்த உழவர்க்கும் பொங்கல் தளுகையிட்டுத் தொழுவதுதான் பொங்கல் பண்பாட்டுச் சடங்கின் உள்ளீடாக அமைந்திருக்கின்றன.

வேளாண்மை உற்பத்தியில் நேரிடையாகப் பங்கேற்கும் உழவுத் தொழில் மரபினர் புலப்படுத்தும் பொங்கல் பண்பாட்டுத் தளுகைச் சடங்கியலானது, அறுவடைத் துய்ப்பைக் கொண்டிருக்கும் அதேவேளையில், வேளாண்மை உற்பத்தியோடு நேரடித் தொடர்பு கொண்ட யாவற்றுக்கும் நன்றிப் பெறுக்கைக் காட்டி, பொங்கல் படையலிட்டுத் தொழுவதாகும். 

வேளாண்மைக்கு அடிப்படையானதும் துணையானதுமான நிலம், மழை, சூரியன், உழவு மாடுகள், பசு மாடுகள், வித்துகள் போன்ற யாவற்றுக்கும் பொங்கல் தளுகைப் படையலிட்டுத் தொழுது வழிபடும் சடங்கியல் மரபு வேளாண் உழவுத் தொழில் மரபினரிடம் தனித்துவமாகக் காணப்படுவதுண்டு. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


வெள்ளி, 31 டிசம்பர், 2021

வேளாண் மரபில் பவுத்த அடையாளம் : மகாராசன்

இந்திர அடையாளத்தைப் பவுத்த சமயத்தோடு அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அதாவது, மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து, காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரர் என்றும், இந்திரர் என்றும் அழைக்கப் பெற்றார்கள். மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்றவரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரர் என்னும் பெயர் பெற்று, அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமனாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம் எனக்கூறும் அயோத்திதாசர், இந்திரரைப் புத்தராக அடையாளப்படுத்துகிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்றவற்றிலிருந்தும் இதற்குச்  சான்றுகள் காட்டுகிறார். 

மேலும், இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகத நாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்திச் சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று, ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரர் என்று, ஐ - இ ஆகத் திரிந்து இந்திரர் என வழங்கி, அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும், அவரது உற்சாகம் கொண்டாடும் காலத்திற்கு இந்திர விழா நாள், இந்திர விழாக் கோல் என்றும், இந்திர விழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதின் அனுபவம் கண்டு, மழைக்குமுன் காட்சியாகும் வான வில்லிற்கு இந்திரத் தனுசு என்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசம் செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்… எனத் தொடங்கும் இந்திர தேச சரித்திரத்தில், இந்திரர்களின் பூர்வீக வரலாற்றையும், வேடதாரிப் பிராமணர்களால் இந்திரர்கள் வீழ்த்தப்பட்டதன் ஆதி வரலாற்றையும் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார் அயோத்திதாசர்.

மேலும், வேளாண் வளமைச் சடங்குகளுள் ஒன்றான பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை, பவுத்த சமய மரபைப் பின்பற்றி ஒழுகிய வேளாளர்கள் செய்த வேளாண் சடங்குகளாகக் கூறுகிறார் அயோத்திதாசர். இதுகுறித்து அவர் எடுத்துரைக்கும்போது, பௌத்தருள் வேளாளத் தொழில் செய்வோர் யாவரும், சங்கறர் அந்திய புண்ணிய காலமாகும் மார்கழி மாதக் கடையிலும் தை மாதம் முதலிலும், தங்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்களைப் பொங்கலிட்டு, இந்திரராம் புத்த பிரானைப் பூசிப்பதுடன், மாடுகளைச் சுத்தம் செய்து அவைகளையும் கொண்டாடி, மறுநாள் வேளாளத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவரைக் காணும் பொங்கல் என வழங்கி சந்தித்துக் கொள்வார்கள். 

காணும் பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் எழுந்து, பொன் தகடு வேய்ந்த ஏரினைக் கொண்டுபோய், வெண்ணெருதுகள் பூட்டி, உத்திர முகம் என்னும் வடக்குத் திக்கு நோக்கி, சரணாகதி என்னும் இரு கரத்தைச் சிரமேற் கூப்பி, உத்தரகுருவாம் புத்தபிரானைச் சிந்திப்பது இயல்பாம். 

இத்தகைய சிந்தனைக்கும் மூல காரணர் சமண முனிவர்களே ஆகும். அறப் பள்ளிகளில் உள்ள ஞான சாதனர்கள், புத்தபிரான் அரசமரத்தடியில் வீற்று, உத்திரமுகம் நோக்கி சித்த சுத்தி செய்து, இந்திரியத்தை வென்று பற்றற்ற நிருவாணம் பெற்றது போல், தாங்களும் பெற்று நித்தியானந்தம் அடைவதற்கு, உத்திர முகம் நோக்கி சாதனை புரிந்து வருவதை நாளுக்கு நாள் கண்டு வரும் வேளாளத் தொழிலாளர்களும் தங்களது வேளாண் மெய் விருத்தி பெற வேண்டி, பொன்னேர் பூட்டி போதி நாதனைச் சிந்தித்து வந்தார்கள். 

அத்தகையச் சிந்தனையாலும் நீதிநெறி ஒழுக்கத்தாலும் மாதம் மும்மாரி பெய்யவும், வரப்புயரவும், நீர் நிரம்பவும், பயிறு பெருகவும், குடிகள் சுகிக்கவும், கோன் உயரவுமாயச் செயலுற்றிருந்தது என்கிறார். 

தமிழரின் இந்திர வழிபாடு குறித்த அயோத்திதாசரின் கருத்தொற்றி விவரிக்கும் மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ் மரபில் அடையாளப்படும் இந்திரனை, ஆரிய மரபிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு, வேந்தன் வழிபாட்டுத் தொடர்ச்சிதான் இந்திர வழிபாடு எனத் தெளிவுபடுத்துகிறார். 

அதாவது, தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகம் செய்து பூசிக்கப்படவில்லை. திருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பெளத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம் கொண்டு நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பெளத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ்நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன், வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது. 

பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தர்மத்தையும் உலகத்தில் நிலை நிறுத்துகிறான் என்பது பௌத்த கொள்கை. மணிமேகலை முதலிய சிறுதெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்தி, பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்த மத இந்திரனாகக் கருதப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர், தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்தில் இருந்து தெரிகிறது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

அவ்வகையில், வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியாக - வழிபடு தெய்வமாகக் குறிக்கப்பட்டு வருகிற இந்திர அடையாளம், பிற்காலத்தியச் சமயங்களான ஆசீவகத்தோடும் பவுத்தத்தோடும் தொடர்புடையதாய் இருந்திருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான கோயில்கள், குறிப்பாக, பெருஞ்சமயம் என்பதாகக் கருதப்படும் கோயில்கள் யாவும், இந்திர அடையாளத்தை உள்ளீடாகக் கொண்ட ஆசீவக அல்லது பவுத்த சமயக் கோயில்களாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்காலத்திய ஆரிய வைதீகச் சமய மரபுகளின் நுழைவாலும் மேலாதிக்கத்தாலும் தமிழரின் வழிபாட்டு மரபுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபிலும், ஆசீவக மற்றும் பவுத்த சமய மரபிலும் அடையாளப்பட்டிருந்த இந்திர வழிபாட்டு அடையாள மரபு சிதைக்கப்பட்டிருக்கிறது; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

புதன், 29 டிசம்பர், 2021

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள்: மகாராசன்

வேளாண் தொழில் மரபினரிடம் நிலவி வந்த - நிலவுகிற வளமைச் சடங்குகள், வேளாண்மை உழவுத் தொழில் மரபின் இந்திர அடையாளத்தைப் புலப்படுத்தும் அதேவேளையில், யானை - வெள்ளை யானை - ஐராவத யானை அடையாளத்தையும் உள்ளீடாகச் சொல்லிக் கொண்டே வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. 

வேளாண் மரபில் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் இந்திரனும், இந்திர அடையாளமான யானையும் இடம்பெறுவது, ஆசீவகச் சமய மரபின் பண்பாட்டுக் குறியீடுகளாகும். இதுகுறித்து க.நெடுஞ்செழியன் கூறும்போது, யானை ஆசீவகத்தின் குறியீடு. வெள்ளை யானை எனப் பொருள்படும் ஐராவதம்கூட ஆசீவகத்திற்கு உரியதாகும். அதிலும், வெள்ளை யானை ஆசீவகத்தின் நிறக் கோட்பாட்டின்படி மிக உயர்ந்த இடத்தை வகிப்பதாகும் என்கிறார். 

மேலும், மூவேந்தர் மரபைச் சார்ந்த புகழ்மிக்க மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசீவகச் சின்னங்கள், அச்சமயத்தின் பரவல் எத்தகையது என்பதை உய்த்துணர வைக்கின்றன. அம்மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் இடம் பெற்றுள்ள சின்னங்கள், அவை வெளியிடப்பட்ட காலம், இவை பற்றியும் அண்மைக்கால ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதனை, சங்ககாலச் சதுரக் காசுகள் சில அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. பூம்புகாரில் மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நிகழ்த்திய அகழாய்வின்போது வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறையின் மீது சங்ககாலக் காசு கண்டெடுக்கப்பட்டதாக டாக்டர் கே.வி.ராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அழகன்குளத்தில் நிகழ்த்திய அகழாய்வின் போதும் சங்ககாலச் செப்புக்காசுகள் இரண்டைச் சேகரித்துள்ளது. 

பூம்புகார்க் காசின் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன்குளக் காசுகளில் பெரிதாக உள்ள காசில் முன் பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும், பின்பக்கம் மீன் உருவம் ஒன்றும் உள்ளன..

மேலும், பூம்புகார்க் காசு சோழராலும், அழகன்குளக் காசுகள் பாண்டியராலும் வெளியிடப்பட்டவையாதல் வேண்டும். அழகன்குளக் காசுகள் கி.மு நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பாள நிலைகளில் கிடைத்துள்ளன என்பது சி14 என்னும் அறிவியல் முறையால் நிரூபிக்கப்பட்டுள்ளது என விவரிப்பார் நடன காசிநாதன். அக்காசுகளில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னம் ஆசீவகத்தின் குறியீடு என்பதில் ஐயமில்லை என விவரிக்கும் க.நெடுஞ்செழியன், யானை, ஆறுமுகமுள்ள குன்றம், ஆமை, வேலியிட்ட மரம் ஆகியன மூவேந்தர்களுக்கும் பொதுவானவையாய் உள்ளன. காளைச் சின்னம் பாண்டியர், சோழர் வெளியிட்ட நாணயங்களில் மட்டும் காணப்படுகின்றன...

எனவே, மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் எனக் கொள்வதில் தவறில்லை என, சங்ககால சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் காணலாகும் சில பொதுத் தன்மைகளைக் கொண்டு விளக்குவதும் நோக்கத்தக்கது. அதனால்தான், தமிழகத்தில் யானை வடிவில் கட்டப்பட்டுள்ள யானைக் கோயில்கள் எல்லாம் ஆசீவகரோடு தொடர்புடையன என்கிறார் குணா.

வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் வழிபடு தெய்வமாக ஐயனார் - அய்யனார் எனவும், சாத்தன் எனவும் குறிக்கப்படுகிறது. அத்தகைய ஐயனார் - அய்யனார் - சாத்தன் கோயில்கள் தோறும்  யானைகள் நிறுவப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஐ, ஐயன் என்பதற்குத் தலைவன், அரச வேந்தன், மூத்தோன், உயர்ந்தோன், வானோன், தெய்வம் எனவும் அகராதிகள் பொருள் தருகின்றன. 

நீர் நிலைகள் சார்ந்த பகுதிகளில் வழிபடு தெய்வமாகத் தொழப்பட்டிருப்பது மழை நீராகத்தான் இருந்திருக்க வேண்டும். வேளாண் தொழிலுக்கு உதவும் மழை நீர்தான் வழிபடு தெய்வமாக - வேந்தனாக - வானோனாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், வானோன் எனும் மழையைக் குறிக்கும் ஐ, ஐயன் எனும் வேர்ச்சொற்களால் ஐயன் + ஆர் = ஐயனார் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது எனவும் கருதலாம். அவ்வகையில், வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்கில் புலப்படும் இந்திர - மழைத் தெய்வ வழிபாட்டு மரபுதான், பிற்காலத்தில் ஆசீவகத்தின் ஐயனார் - அய்யனார் வழிபாடாக - ஆசீவகச் சமய நீட்சியின் அடையாளமாகப் பரிணமித்திருக்கிறது எனக் கருதலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 


*


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - நூல் மதிப்புரை : குருசாமி மயில்வாகனன்

இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தினை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். அவை, 1. கருத்து முதல் வாதம், 2. பொருள் முதல் வாதம். வெறும் சடங்குத்தனமாகவும், ஒப்புவிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் இவ்விரு சொற்களும், உண்மையில் மிக விரிந்த, பரந்த தளப்பரப்பினைக் கொண்டவை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை; ஒன்றொடொன்று உடன்படவே முடியதாவை; சமரசமாகாதவை; எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவை. 

இன்றை உலகில் பெரும்பாலான மக்களின் அடிப்படைக் கண்ணோட்டமாக இருப்பது கருத்து முதல் வாதம் (idealism) தான். இதற்குக் காரணம் இன்றைய ஆளும் வர்க்கங்களின் தத்துவமாகக் கருத்து முதல் வாதமே இருக்கிறது என்பதுதான். 

பிற மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டி, தன்னுடைய நலன்களை, வசதியை, மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு வாழக்கூடிய  சுரண்டும் வர்க்கங்கள்தான் இன்றைய  ஆளும் வர்க்கங்களாக இருக்கின்றன. மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டினால் மட்டுமே இந்த வாக்கங்கள் உயிரோடிருக்க முடியும். இதனால் இந்த சுரண்டும் முறைக்கு எதிராக உள்ள, அல்லது இந்தச் சுரண்டலைத் தடுக்கக் கூடிய  எதையும் இந்த வர்க்கங்கள் முடக்கும்; தடை செய்யும்; முற்றாக அழிக்க நினைக்கும். இந்தச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், பின்புலமாகவும், பாதுகாப்பாகவும், அடிப்படையாகவும் இருப்பது 'கருத்து முதல் வாதம்' எனும் அதனுடைய தத்துவம்தான். 

நெருக்கடிகள் வரும்போது இது தன்னை மாற்றிக் கொள்ளும்; புதியன போலத் தோற்றம் கொள்ளும்; பல வேடங்களில் வெளிப்படுத்திக் கொள்ளும்; தேவைப்படும் சமயங்களில் தனக்கு நேரெதிரியான 'பொருள் முதல்' வாதத்தைக் கூட போர்வையாக அணிந்து கொள்ளும். 

பொருள் முதல் வாதமும், இதனை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலுக்கு எதிரான வர்க்கங்களும், கருத்து முதல் வாதத்தை அடியோடு நிராகரிக்கின்றது. மனிதனைச் சுரண்டுவதற்கும் எதிராகப் போரிடுகிறது. மனித சமத்துவத்தை வலியுறுத்துகிறது. அதோடு கருத்து முதல் வாதத்தின் எல்லா வேடங்களையும் அம்பலப்படுத்துகிறது. அது மூடிக் கொண்டுள்ள முகத் திரைகளைக் கிழித்தெறிகிறது. ஆயினும், கருத்து முதல் வாதமானது புதிய முக மூடிகளை அணிந்து கொள்கிறது. 'இப்படியான' புதிய கருத்துக்களை ஆராவாரத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த ஆராவாரத்தை, பொருள் முதல் வாதத்தை வீழ்த்துவதற்கான  ஆராவாரமாக அது கொண்டாடுகிறது. ஆளக்கூடிய சுரண்டும் வர்க்கங்கள் இவைகளை வரவேற்று, தலையில் தூக்கிவைத்து ஆடி, மக்களிடையே பரப்புகிறது. 

அப்படி ஒரு ஆராவாரமான, ஆர்ப்பாட்டமான சிந்தனையாக, தமிழில் அறிமுகமாகியது ‘பெண்ணியம்’. பல ஆண்டுகளுக்கு முன்னால் முதலாளித்துவ நாடுகளால் முதலில் கொண்டாடப்பட்ட பின்னர், குப்பைக்குப் போன பழைய துணிகளெல்லாம் முற்றிலும் புதிய ஆடை என்று இங்கு ஒரு கும்பல் கடை விரித்தது. அன்றே மலர்ந்த அரும்புச் சிந்தனை என்று எல்லோரையும் கடைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தது. ஒரு துருவ நட்சத்திரமாய் விளங்கும் அறிவியக்கம் என்று குதித்துக் கும்மாளம் போட்ட அந்தக் கும்பல், தனது வர்க்கக் குணத்திற்கேற்ப, பொருள் முதல்வாதத்தைச் சாடியது. 

            மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தியது. 'எங்கெல்ஸ்க்கு ஒண்ணுமே தெரியாது; இதைப்பற்றி மார்க்சியத்திடம் பதிலே இல்லை; இது மார்க்சியத்தின் போதாமை' என்று கதையளந்தது. 

பொருள் முதல் வாதத்தையும், மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களையும் உப்புக்குச் சப்பாணிகளாய் வரட்டி தட்டிக்கொண்டிருந்த இன்னொரு கூட்டமானது, இந்தக் கதையளப்பில் கவிழ்ந்தது. கவிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கன்னா பின்னாவென உளரியது. ஏற்கனவே கல் குடித்த வியாபாரக் கும்பல், இந்தக் கட்டத்தின் உளரல்களை உத்தரவுகளாக மாற்றிக் கொண்டு, பொருள் முதல்வாதத்தின் மீதும், மார்க்சியத்தின் மீதும் மேலும் சேறடித்தது; அவதூறு செய்தது. 

இந்தச் சேற்றடிப்பிற்கும், பகடிக்கும், மறுப்பாக, எதிராக இதோ, பொருள் முதல்வாதம், மார்க்சியம் தன் வாளைச் சுழற்றுகிறது. மார்க்சியத்தின் போதாமையைக் குறித்துப் பேசிய பேமானிகளெல்லாம் மார்க்சியம் சுழற்றும் இந்த வாளுக்குப் பதில் கூறட்டும். ஆனாலும், இந்த வாளைச் சுழற்றுபவர்களாக, தோழர் கிளாரா ஜெட்கினும், தோழர் லெனினுமாக அமைந்திருப்பது, இந்தக் கத்துக்குட்டிகளின் அதிர்ஸ்டம்தான். 

இன்றைய பெண்ணிய நவீனக் கருத்துக்களுக்கும், பெண்ணிய பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும், (பெண்ணிய பின் பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும்) தோழர் லெனின் மறுப்புரைக்கிறார். மறுப்புகளோடு மற்றுமின்றி, அவர்கள் எழுப்பும் கேள்விகள் உருவாகின்ற ரிசிமூலத்தின் பிடரியையும் பிடித்து உலுப்புகிறார். 

தோழர் இனெஸ்ஸா அர்மாண்டுக்கு எழுதுகிற பதிலில் 'சுதந்திரமான காதல்' எனும் புகழ்பெற்ற பெண்ணுரிமை முழக்கத்தின் அற்பத்தனத்தைத் தோலுரிக்கிறார் லெனின். திருமண ரத்து, கர்பத்தடை, விபச்சாரம், போன்றவைகள் குறித்த லெனினது சாட்டையடியான விமர்சனங்கள், இதுவரை மேற்சொன்னவைகள் குறித்த முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ அறிவாளிகளின் உளரல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 

பெண்களைத்  தனித்த  ஒன்றாகக்  காணுவதை  ஏற்றுக் கொள்கிற லெனின், 'தனித்த' என்பதற்கான அர்த்தத்தைத் தனக்கே உரிய முறையில் எடுத்துரைக்கும் போது, இங்கே தமிழ்ச் சூழலில் 'பெண்ணியம்' என்று பிராண்டி எடுத்தவர்களின் நிலை ஆகப் பரிதாபகரமானதாக ஆகிவிடுகிறது. 

லெனின், ‘கர்பத்தடை’ குறித்த கருத்துக்களையும், பெரியாரின் ‘கர்பப்பை’ குறித்த கருத்துக்களையும் ஒப்புநோக்குவது மார்க்சியம், பெரியாரியம் குறித்த அலசல் புரிதல்களை வாசகர்களுக்குத் தர உதவும் . 

ரசியப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து கிளாரா ஜெட்கின் குறிப்பிடும் விசயங்களும், பெண்களின் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என லெனின் கூறுகிற பதிலுரைகளும் குறிப்பிடத்தக்கவை. 

சிக்மண்ட் ஃப்ராய்ட்சத்தையும், அதன் ஆதரவாளர்களைப் பற்றி லெனின் குறிப்பிட்டிருப்பதாவது, 'முதலாலித்துவ சமுதாயத்தின் குப்பை மேட்டில் முழுச் செழிப்புடன் மண்டிக் கிடக்கிற அந்த தனிமாதியான இலக்கியத்தில் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தவம் புரியும் இந்திய ஆண்டியைப் போல, எந்நேரமும் பாலுணர்வுப் பிரச்சினையிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நாம் நம்புவதில்லை'. 

சிந்திக்கக் கூடிய பெண்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆணின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. ஆடைகளிலும், வாடைகளிலும் பெண்ணியம் கண்டவர்கள் இப்புத்தகத்தின் கேள்விக்குப் பதில் சொல்லட்டும். 

'ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்' இந்நூல் தலைப்பு, வாசகர்கள் எவருக்கேனும் சலனத்தை ஏற்படுத்துமென்றால், நூலைத் தொடர்ந்து உள்ளே போவாரென்றால், அந்தச் சலனமே, அவர்களுக்கு ஒரு அறிவுப்பூர்வமான விழிப்புணர்வை நிச்சயம் கொடுக்கும். 

பெரும் பரபரப்பாக, பரவிக் கிடக்கும் மார்க்சிய சமூக, அரசியல், பொருளாதாரக் கருத்துக்களுக்கு உள்ளே பின்னிக் கிடக்கும் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு சொல் வடிவம் செய்யப்பட்டுள்ளன. 

பெண்ணியம் குறித்த தீவிர ஆய்வாளர் தோழர் மகாராசன்  மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். பெண்ணியம் குறித்த மிக முக்கியமான ஆவணமாக விளக்கப் போகும் இந்நூலை மிகவும் அழகுடன் பதிப்பித்துள்ளது தோழமை பதிப்பகம். 

பெண்களில்லாமல் புரட்சி இல்லை;
புரட்சி இல்லாமல் பெண் விடுதலை இல்லை. 
*

கட்டுரையாளர்:
குருசாமி மயில்வாகனன்,
ஆய்வாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
ஒப்பனைக் கூத்து, கப்பலோட்டிய கதை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
சிவகங்கை.

*
ஒரு கோப்பை 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும்: 

பெண் விடுதலை குறித்த 
மார்க்சிய உரையாடல்கள். 

லெனின் - கிளாரா ஜெட்கின். 

தொகுப்பாசிரியர்:
மகாராசன். 

யாப்பு வெளியீடு, சென்னை.
மறுபதிப்பு, சனவரி 2022.
விலை: உரூ 150/-
10% கழிவு விலையில்: 135/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
+919080514506

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஆழி முகம் : மகாராசன்


அன்று வரை
அழகாய்த்தான் இருந்தது 
கடல். 

உயிர்களைத் தின்று முடிக்கக் கரையேறித் துடித்தன அலைகள். 

கடல் நீர் கரிக்குமென்றே 
கரை தாண்டி ஊரைக் குடித்து 
உள்ளே போனது ஓலம். 

பிணவாடைக் காற்றில் 
நிலத்தில் பரவின 
ஒப்பாரி மகரந்தங்கள். 

கதறலாய்
எழும்பிய உயிர்கள் 
மணலுக்குள் புதைந்தே போயின. 

உயிர்களைத் தின்று முடித்த 
ஏப்பச் சிவப்பு 
விழிகளில் தெரிந்தது
நீலத்திடம். 

ஆழி சூழ் உலகு 
ஆழிகொல் உலகாய் 
ஆகிப் போனதும் அன்றுதான். 

மடி விரித்துக் கிடக்கும் 
தாய் முகத்துக் கோபமும் அதுதான்.
*
ஏர் மகாராசன்
#சொல்நிலம்

அலை நிலத்து அழுகை : மகாராசன்


கீழ்வெண்மணி
துயர் சுமந்த நாளின் 
பிற்பொழுதைத் 
தின்று முடித்த 
காலைப் பொழுது 
காரித் துப்பியது
சோசுத்தை. 

மடி விரித்த
ஆழ் கடல் ஓரத்துக் குடிசைகள் துகளோடு துகளாய்ப் போயின. 

நிலவுக் கீற்று
கிழித்த கோடுகள் பிடித்து 
தொலை கடலுக்குள் போன கட்டுமரங்கள் 
தொலைந்தே போயின. 

உயிர் போன
வெறும் கட்டைகளாய் 
மிதந்து வந்தன
உடல்கள். 

அலை ஓசைந் தாலாட்டில் 
தூங்கிய பிஞ்சுகள் 
ஒப்பாரிகள் பாடின. 

வலையில் மீன்கள் அள்ளி 
வயிறுகள் கழுவிய
கவுச்சி வாழ்க்கை
மீன்களுக்கே
இரையாகிப் போயின. 

ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
அகலப் பரப்பிச் 
சேரிக்குள் இழுத்து வந்தன 
அலைகள். 

சுள்ளி அடுக்குகளாய் பெருங்குழிக்குள் 
மனிதங்களை அடுக்கி 
சாவை மூட்டிச் சென்றது 
கடல். 

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய் 
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.
*
ஏர் மகாராசன் 
#சொல்நிலம்

வெள்ளி, 24 டிசம்பர், 2021

தமிழ் வேளாண் சமூகம் பற்றிய புதிய ஆய்வுத் தடத்திலான நூல் : இளஞ்சென்னியன்.


தமிழ் மரபின் வழித் தடத்தில் வேளாண் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியல் சித்திரத்தை உருப்படுத்திக் காட்டுகிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.

வேளாண் சமூகம் எனும் பெருங்குழுமத்தில் முதன்மைச் சமூகமாகவும், இன்று வரை தமிழ் வேளாண் மரபின் தொழில் நுட்பங்களையும் பண்பாட்டையும் நினைவில் கொண்டுள்ள ஓர் சமூகமாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை முதன்மைப்படுத்திய ஆய்வு நூல் என்ற போதும், மொத்த வேளாண் சமூக மரபு குறித்த உள்ளடக்கத்தைக் கொண்டதே. ஏனெனில், தமிழ் மரபில் தங்கள் அடையாளத்தைத் தேடும் எந்த முயற்சியும் தனித்த ஒன்றாக அமைய முடியாது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் இன்றைய அரசியல் அடையாளப் போராட்டத்தினைப் பண்பாட்டு மேலாதிக்கத்தால் அமுக்கப்பட்டே வருகிற நெடிய தமிழ்ச் சமூகத்தின் வேளாண் மரபின் மீட்சிக்கான ஒன்றாகவே காண வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

பல்வேறு சான்றுகளின்வழி இந்திர அடையாளத்தை ஆரிய இந்திரன் - தமிழ் இந்திரன் என வேறுபடுத்திக் காண வேண்டும் என்கிற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

வேளாண் சமூகத்தின் உற்பத்திச் சடங்குகளின்வழி வேளாண் சமூகத்தைப் புரிந்து கொளளவும், பல்வேறு சமய மரபில் வேளாண் சமூகத்தின் தடத்தினைக்  கண்டடையவும் வேண்டும் என்கிற முயற்சி மேலும் மேலும் ஆய்வு செய்வதற்கு உரியது. 

மொத்தத்தில், வேளாண் சமூகம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்களின் வழித்தடத்தில் புதிய கருதுகோளை முன்வைத்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் போராட்டம் வெறும் அடையாளப் போராட்டமாக நின்று போதலில் பொருளில்லை. அது, மொத்தச் சமூகமும் அடுத்தகட்ட சமூகமாக மாறும் போராட்டத் தொடர்ச்சியைக் கொண்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தி முடிகிறது.

நூலின் இறுதிப் பகுதி தமிழர்களின் நீர்மேலாண்மை அறிவையும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள தமிழக நீர்மேலாண்மை அவலத்தையும் அதற்கான காரணிகளையும் பதிவு செய்கிறது.

தமிழ் இனத்தின் பல்வேறு குடிவழிச் சாதிகளின் வரலாறும் சமூக அரசியல் பொருளியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இனவரைவியல் ஆய்வு முறைமை, சமூகத்தின் புனைவைகளையும் மேட்டிமையையும் புறந்தள்ளிய ஓர் ஆய்வு வெளியாக உள்ளது. அது சமூகத்தின் மெய் இருப்பை வெளிப்படுத்துவதோடு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அரசியல் வெளியையும் அடையாளம் காட்டும். அது போன்றதொரு நூலே இந்த வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூல்.

என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய - மாறுபடக்கூடிய பல்வேறு கருத்துக்களையும் கருதுகோளையும் முன்வைத்துள்ள தோழர் ஏர் மகாராசன் அவர்களின் பேருழைப்பிலும் வேட்கையிலும் அறிவுத்தேடலிலும் உருப்பெற்றுள்ள தமிழ் வேளாண் மரபினர் குறித்த இந்நூல், தமிழர்கள் குறிப்பாக வேளாண் சமூகம் குறித்துச் சிந்திப்போர் கற்க வேண்டியதொரு நூல் ஆகும்.

*

கட்டுரையாளர்:
இளஞ்சென்னியன்
மருதுபாண்டியர்கள்:
பேரறிக்கையும் அதன் அரசியலும் எனும் நூலின் தொகுப்பாசிரியர்.

சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த் தேசிய உணர்வாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழியச் சிந்தனைக் களத்தின் ஒருங்கிணைப்பாளர்.
சிவகங்கை.

செவ்வாய், 14 டிசம்பர், 2021

கம்பரின் ஏர் எழுபது - உழவுத்தொழில் வரைவியலின் முதல் நூல் : மகாராசன்


வேளாண்மைத் தொழிலுக்கான உடல் வலிமை, உழைப்பு, உழவு மற்றும் உரத்திற்குத் தேவையான மாடுகள் வளர்ப்பு, உரத் தயாரிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், பல்வேறு  வித்து வகைகள் பற்றிய தெளிவு, பயிர்ப் பராமரிப்பு, காலநிலைக் கணிப்பு, நீர் மேலாண்மை, அறுவடை என வேளாண்மை சார்ந்த அனைத்து நுட்பங்களும் அறிவும் உழைப்பும் உழுதுண்ணும் உழவர்களான காராள வேளாளர்களிடமே இருந்திருக்கின்றன. 


நிலத்தில் உழவுத்தொழிலால் பாடுபடும் காராளர்களின் பாடுகளை முதன் முதலாகத் தனி இலக்கிய நூலாகத் தமிழில் பாடியவர் கம்பரே ஆவார். உழுதுண்ணும் வேளாளர்களான காராளர் எனும் உழவுக்குடிகளின் உழவுத்தொழில் நுட்பத்தையும், உழுதொழில் கருவிகளையும், உழுதொழில் பண்பாட்டு மரபையும் ஏர் எழுபது எனும் நூலில் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியும் புகழ்ந்தும் பாடியுள்ளார் கம்பர். 

உழவுநாள் குறித்தல், கொழுமுனை, மேழி, ஊன்றாணி, நுகத்தடி, நுகத்துத் துளை, நுகத்தாணி, பூட்டாங்கயிறு, ஏர்க்கால் நுகத்தடி பிணைக்கும் தொடைக்கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழவு எருது, எருதின் கழுத்துக்கறை, ஏர் பூட்டல், ஏர் நடத்தல், உழவு, உழவுச் சால், மண்வெட்டி, வரப்பு வெட்டல், புழுதி, வரப்பு கட்டல், எரு, சேறு கலக்கல், பரம்படித்தல், விதை பாவுதல்,  நாற்றாங்கல் பராமரித்தல், நாற்றுப் பறித்தல்,  நாற்றுமுடி சுமத்தல், நாற்றுமுடி விளம்புதல், நடவுக் கைப்பாங்கு, நடவுமுனை, பயிர் விளைத்தல்.. 

நீர் ஏற்றம், துலைநீர் இறைத்தல், நீர் பாய்ச்சுதல், களையெடுத்தல், பயிர் கருப்பிடித்தல், பசுங்கதிர், நெல்குலை வளைதல், நாளறுப்பு குறிக்கப் பலருக்கும் சோறிடுதல், களம் அமைத்தல்,  கதிர் அரிவாள், கதிர் அறுப்போர், அறுப்பறுத்தல், நெற்கதிர் வேண்டி வரும் இரவலர்க்கு அரிகதிர் வழங்குதல்,  அரிகதிர் சூடடித்தல், நெல்தாள் படப்பு எனும் போர் அமைத்தல், நெல் குவிப்பு, நெல்பொலி, நெல்கூடை, பொலிதூற்றும் கூடை, பொலி அளத்தல், விதைக்கோட்டை செய்தல் போன்ற அனைத்தைக் குறித்தும் - உழுதுண்ணும் உழவுக்குடிகளின் வேளாண்மைச் செயல்பாடுகளைக் குறித்தும் ஏர் எழுபதில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார் கம்பர். அவ்வகையில், வேளாண்மை உழவுத்தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல்தான் தனித்துவம் வாய்ந்ததாகும்.  

உழுதுண்ணும் உழவுக்குடிகளான வேளாளர்களைக் காராளர், மேழித்தேவர், பெருக்காளர், உழவர், உழும் குலத்தார், வேளாளர், மள்ளர் எனும் பெயர்களால் ஏர் எழுபது பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

கார் நடக்கும்படி நடக்கும் காராளர், தம்முடைய

ஏர் நடக்கும்எனில், புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்;

சீர் நடக்கும்; திறன் நடக்கும்; திருவறத்தின் செயல் நடக்கும்;

பார் நடக்கும்; படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே

என, ஏர் நடத்தல் பற்றிப் பாடும் கம்பர், ஏர் நடக்கும் எனில் பிறவெல்லாம் தாமாகவே நடக்கும்; பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது. காராளர்களின் ஏர் பூட்டல் தொழிலால் - ஏர் நடத்தல் சிறப்பால் பசி எனும் பிணியானது நாட்டில் நிலவாது என்கிறார்.

பசிப்பிணி போக்கும் உணவைக் கொடுப்போரே உயிர் கொடுத்தோர் ஆவர். அவ்வகையில், உழவுத் தொழில் புரிந்து வேளாண்மை ஈட்டும் உழவர்களே பசிப்பிணி போக்கும் உணவைத் தருகிறார்கள். அதனால்தான், பசிப்பிணி போக்கும் உழவர்களை உலகமே தொழுகின்றது. இதுகுறித்து வள்ளுவர் கூறிய குறளையும் தமது கருத்தையும் ஏர் எழுபதில் எடுத்துரைக்கும் கம்பர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாரும்

தொழுதுண்டு பின்செல்வர் என்றே, இத்தொல் உலகில்

எழுதுண்ட மறை சொன்னால், இவரேவன் மள்ளர்க்கும்

பழுதுண்டோ? பார்வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?

என்கிறார். உழுதுண்ணும் வேளாளர்களைக் காராளர் எனக் குறிக்கும் கம்பர், அக்காராளர்களையே மள்ளர் எனவும் சுட்டுகிறார். வயல் உழும் மள்ளர், போர்க்கள மள்ளரினும் சிறந்தவர் என்கிறார் கம்பர். ஏனெனில், போர்க்கள மள்ளர்களுக்கும் உணவளிப்பவர் ஏர்க்கள மள்ளரே ஆவர்.

வேளாண்மைத் தொழிலின் உழைப்பில் ஈடுபட்ட உடல் வலிமையே போருக்கும் தேவைப்பட்டிருக்கிறது. ஏர்க்களத்தில் மட்டுமல்லாமல், போர்க்களத்திலும் காராள வேளாளர் எனும் உழவர்கள் பங்கேற்பும் இருந்திருக்கின்றது. அதனால்தான், உழவர் உழவுத்தொழிலாலும், அரசருக்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றும் கூறப்பட்டார் என்கிறார் பாவாணர். 

உழுதுண்ணும் உழுகுடிக் காராளர்களான வேளாளர்களையே மள்ளர்கள் எனத் தமிழ் இலக்கியங்கள் பெருவாரியாகச் சுட்டுகின்றன. வளமைப் பண்பையும் வலிமைப் பண்பையும் குறிப்பதற்கு, மள்ளல் எனும் சொல்லானது இடத்திற்குத் தக்கவாறு பயின்று வந்துள்ளன. இதுகுறித்துக் கூறும் அ.அறிவுநம்பி, மள்ளர் என்ற சொல் வீரர், உழவர் என இரு பொருள் சுட்டும். இடத்திற்கு ஏற்ப அதன் நுண்பொருள் காணுதல் தேவை. 

ஏர்க்களம், போர்க்களம் இரண்டில் எவ்விடம் பேசப் பெறுகின்றதோ அதற்கேற்ப மள்ளர் முதலாமிடத்தில் உழவராகவும், இரண்டாமிடத்தில் வீரர்களாகவும் உலா வருவதை உணரலாம் என்கிறார். ஆகவே, நிலம், உழவுத்தொழில், வேளாண்மை போன்றவற்றைக் குறிக்குமிடங்களில் வருகின்ற மள்ளர் எனும் சொல்லாட்சிகள், உழவர்களை - காராளர்களை - உழுதுண்ணும் வேளாளர்களையே அடையாளப்படுத்துகின்றன எனலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

புதன், 8 டிசம்பர், 2021

செம்மூதாய் : மகாராசன்

 


ஆழிப் பெருக்கின் 
ஊழி அலைகள்
வாரிச் சுருட்டிய பின்னாலும்
மிச்சமெனப் பிழைத்த மூதாதைகளின்
விதைப் பேச்சுகள் யாவும்
கால மழையின் 
ஈரத்தில் நனைந்து
ஒலியும் வரியுமாய்
முளை விட்டிருந்தன. 

மெல்ல மெல்லப் 
பரவிய வேர்களால்
மண்ணுள் நுழைந்து இறுகப்பற்றி
திக்குகளின் முகம் பார்த்தபடி
தனித்திருந்தன 
திணை மரங்கள். 

கிளைகளெனச் சிலிர்த்திருக்கும்
வழக்குச் சொல்லிலை 
இணுகி இணுகிக்
கூடொன்றை வேய்ந்திருந்தது
இனப் பறவையொன்று. 

கூட்டடையில் பொறித்த குஞ்சுகள் யாவும்
சிறகுகளைத் தட்டிக்கொண்டு
இரை தேடிப் பறந்தன. 

ஐநிலத்தின் வனமெங்கும்
பறவையின் எச்சங்கள். 

பேரினத்தின் விழுதுகள்
எச்சங்களின் விதைகளில்
துளிர்விட்டுக் கிடந்தன. 

பச்சைய வனப்பேறி
செந்நிறத்தில் பூத்துக் காய்த்திருக்கிறது
தமிழ்.

ஏர் மகாராசன்

திங்கள், 6 டிசம்பர், 2021

உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணம்: செங்காந்தள் வீரராகவன்

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்வியல் முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் பல நூறு ஆண்டுகாலப் பண்பாட்டு வரலாற்று நீட்சியை வேண்டுமென்றே மறைத்துவிட்டு - மறந்துவிட்டுக் கடந்து செல்வது என்பது ஆய்வாளர்களின் அறிவு குறையே. 

சிலர், வேளாண் குடிகளின் மீதான வன்மத்தின் காரணமாகவும், தங்களின் சுயநலத்திற்காகவும் வரலாற்றைப் போலியாகத் திரித்து எழுதி மன மகிழ்ச்சி அடைந்து  வந்துள்ளனர். இந்தப் போக்கானது  உழுகுடியின் வீழ்ச்சியிலிருந்து இன்று வரை தொடர்ந்து வருவது வேதனையின் உச்சம். இது வேளாண் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் தொடர் பண்பாட்டுத் தாக்குதல் ஆகும். 

இத்தகையப் பண்பாட்டுத் தாக்குதலுக்கான எதிர்வினையாக,  எழுத்தாளர் மகாராசன் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்'  எனும் நூலைப் பல்வேறு ஆவணங்களால் அறச்சீற்றம் கொண்டு உழுகுடியின் வரலாற்றை  நேர் செய்திருக்கிறார். 

மானுட இனத்தின் தோற்றம் - வேட்டைச் சமூகம் - கால்நடை வளர்ப்பு - உற்பத்திப் பெருக்கம் - குடும்ப முறை - வேளாண் விரிவாக்கம் - ஆட்சி அமைப்பு - பண்பாட்டு எழுச்சி என நீள்கிறது தமிழ் நிலத்தின் வாசனை மலர்கள். 

பண்டையக் காலத்தில் மாடு என்பது செல்வமாகப் பார்க்கப்பட்ட வரலாற்றையும், அதனை ஐவகை நிலங்களிலும் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் விளக்குகின்ற காட்சியானது, உழவர்களின் உறவுகளாகவே  மாடுகள் இருந்த வரலாற்றை அறிய முடிகிறது. 

மேலும், முல்லை நிலத்தில் மான்களையும் யானைகளையும் வளர்ப்பு  விலங்குகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நிகழ்ந்ததாகவும், பன்றிகள் வள்ளிக்கிழங்கை   அகழ்ந்தெடுத்த நிலத்தில் பயிர்கள் விரைந்து  வளர்ந்ததே உழுது பயிரிட வேண்டும் என்ற சிந்தனைக்கான காரணம் என்ற செய்தியையும் சங்க இலக்கியப் பாடல்களின் மூலம் மேற்கோள்  காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்தே  வேளாண்மைக்கான முதல் விதை விதைக்கப்பட்டிருக்கிறது  என்பதைஅறிய முடிகிறது. 

வேளாண்மையானது குறிஞ்சியில்  (எள், கொள், மூங்கில் அரிசி) தோன்றி, முல்லையில் (கேழ்வரகு, சோளம்) விரிந்து, மருதத்தில் (நெல், கரும்பு) நிலைத்து, வேளாண்  மரபின் பரவலானது தொடர்ந்து வந்திருக்கிறது. 

வேள் என்பது நிலம், ஆள் என்பது ஆள்தல். வேள் + ஆள் - நிலத்தை உழவுத் தொழிலால் ஆள்தல் என்னும் பொருளில் வேளாள் ஆகி, வேளாள் + ஆர்  விகுதி பெற்று, வேளாளர் ஆனது என வேளாளர் எனும் தொழிற்பெயர் குறித்து விவரிக்கும் நூலாசிரியர், பள்ளமான நீர்நிலைகளில் உழவுத் தொழில்  செய்து வருபவர்களே வேளாளர் என்கின்ற  வரையறையையும்  தகுந்த ஆவணங்களால்  உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இந்த வேளாண் மக்கள் களமர்,  தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், உழவர், கடைஞர், கிளைஞர், மேழியர், சிதலர், கடைசியர், உழத்தியர், பள்ளர் பாண்டியர், குடும்பர், காராளர், அகவர், ஏராளர்,  அரிஞர், அரிநர், அரிவணர், புனவர்  என மருதநில மக்கள் நிலப் பெயராலும் தொழிற் பெயராலும் க பல்வேறு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

உழவு முறைகள் (உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல்,  களை எடுத்தல், நீர் பாய்ச்சல், அறுவடை போன்றவை), உழு கருவிகள் (மேழி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, நுகத்தடி, நுகத்தாணி, தாற்றுக்கோல் போன்றவை) மற்றும் நீர்ப் பயன்பாட்டு நுட்பங்கள் ஆகியன வேளாண் மரபினரின் அறிவினை வியக்கவைக்கின்றன. அதுமட்டுமல்லாது, அறியப்படாத ஆறுகளின் வரலாற்றையும் (கடனாறு, அர்ச்சுணன் ஆறு, மலட்டாறு, வெட்டாறு, பரளியாறு), நச்சு  உரங்களால் அழிந்துபோன மீன்களின் வகைகள் (சாளை ,பசலி, கசலி,  மத்தி, கருங்கண்ணி, மணலி, தேளி மீன்), வரி, சொல், விரிகி, சாலி, யவம் என நெல்லுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும், சித்திரக் காலி, வாலான், நெடுமூக்கன்,  பூம்பாளை,  காடைக்கழுத்தன் , புனுகுச்சாம்பா, வட்டக்கண்ணி, குளவாளை, செம்பாளை போன்ற நூற்றுக்கணக்கான நெல் வகைகளையும் இந்நூலின் வழியாக அறிய முடிகின்றது. 

மாடுகளின் வகைகளாக குடைக் கொம்பன், செம்மறையன், மேழை,  கருப்பன், அணிற்காலன், விடத்தலை, பூ நிறத்தான் போன்ற  நூற்றுக்கணக்கான இனங்களை முக்கூடற்பள்ளு நூல்களின் வாயிலாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். 

மேற்கண்ட உழவு சார்ந்த வரலாற்றுத் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன் அழிவிற்கான காரணம் என்ன? அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகள் என்ன? என்பதைத் தமிழ்ச் சமூகமும், அறிஞர்களும் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் எனும் அக்கறையை இந்நூல் வெளிப்படுத்தி இருக்கின்றது. 

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் நெல்மணிகளுடன்கூடிய நெற்கதிர்கள்  ஒட்டுருவமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த கிடைத்த நெல் மாதிரி கி.மு 450 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மட்டுமல்ல, தமிழகத்தில் முதுமக்கள் தாழி எங்கெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான  சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறும் டி.தருமராஜன் கருத்தினையும் பதிவு செய்திருக்கிறார். 

ஈமச்சடங்கில் நெல்மணிகள் பயன்படுத்தப்படும் முறை கி.மு 2000 முதற்கொண்டே இருந்து வந்ததாகப் பல்வேறு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதிலிருந்து, நெல்லின் வரலாறே தமிழர்களின் வரலாறு என்பதை அறிய முடிகிறது. 

"பாண்டியம் (உழவுத் தொழில்) செய்வான் பொருளினும் " -கலித்தொகை. 

பள் - பண்டு - பண்டி - பாண்டி- பாண்டியன் என்று பள்ள நிலத்தில் உழவு செய்தவர்களே  பாண்டிய மன்னர்களாக ஆட்சி செய்தார்கள் என்கிறார் பாவாணர். பள் செய் என்பது, நன்செய் நிலம்; பள்ளமான நிலத்தில் வேளாண்மை; பச்சை (பசேல்) எனப் பல்வேறு பொருள் தந்து உழவுத் தொழிலையே குறிப்பதாகவும், இவ் உழவுச் சமூகத்தில் இருந்து தோன்றியவர்களே பள்ளர்கள், வேளாளர்கள், பாண்டியர்கள், வேந்தர்கள் என்கிறார் மா.சோ.விக்டர். 

"புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்" என்ற கலிங்கத்துப் பரணியின் வரிகளால் சோழர்கள் இந்திர விழாவினைக் கொண்டாடினார்கள் என்றும், சோழர்களின் கொடியில்  உள்ள புலிச் சின்னமானது இந்திரனின் உருவம் (ஆயிரம் கண்ணுடையான்)  என்றும் இலக்கியச் சான்றுகளால் உறுதிப்படுத்தியுள்ளார். 

குடும்பன் - கிழான் - வேளிர் - மன்னன் என்ற படிநிலைகளில்  வேளாண் மக்கள்  ஆளும் அதிகாரத்தைப்  பெற்றதாகவும், ஊர்க் குடும்பனே மன்னராட்சியின் தொடக்கம் என்ற மா.சோ. விக்டர் அவர்களின்  கூற்றினைப் பல்வேறு தரவுகளின் மூலமாக விளக்கப்படுத்தியுள்ளார். 

அதுபோக, வேளாண் மரபினர்களுக்குக் கோயில்களில் வழங்கப்படுகின்ற முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல், மண்டகப்படி ,தேர் வடம் பிடித்தல், நாள் கதிர் வழங்கல், விதைக்கோட்டை வழங்குதல் போன்ற வழிபாட்டுச் சடங்குகள்  வேளாண் சமூகத்திற்கு மட்டுமே இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதனை ஆய்வின் மூலமாகவே  வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

உலகுக்கு அச்சாணி போல இருந்து உணவு வழங்கும் உழவர்களே  சேர சோழ பாண்டிய வேந்தர் மரபினர்கள்  என்கிறது பிரபஞ்சனின் கூற்று. 

உழவு மள்ளர் திரண்டு...உழுங் காளைகள் பிடித்து....நல்லூர்த் தருமன்.... குளப் புரவில்  வயலில் செடியும் வெட்டி....மடை உயர்த்திப் புனல் நிறுத்தி.... கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே...என்ற திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு நூலானது,  குடும்பர்களே  மள்ளர்கள் என்ற வரலாற்றையும், நல்ல நாள் பார்த்து, சித்திரை முதல்  நாளில் பொன்னேர் பூட்டிய நிகழ்வினையும்    சான்றாகப் பகர்கின்றது. இந்நிலையில், தமிழர்களின் சிறப்பு மிகுந்த பொன்னேர் பூட்டும்  நிகழ்வினை  ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாக புனையப்பட்டதை எதிர்க்கிறார் நூலாசிரியர். 

ஆடிப் பெருக்கினை ( ஆடி 18 ) உழவர்களின் நீரியல் சடங்காகவும்,  மருத நிலத்தில் கிளைத்த பதினெண் குடிகளோடு சேர்ந்து  நீரினை வரவேற்கும் நீரியல் சடங்கு எனவும் விவரிக்கிறார். 

பொங்கல்  விழாவானது (அறுவடைச் சடங்கானது) வெறும் உணவு  சமைத்தலை மட்டும் குறிக்கவில்லை. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடு  என்று பலவாறு பொருள் கூறுகிறார். மேலும், உயர்தல் மேல் ஏறுதல், வளர்தல், விளம்புதல், செறுக்குறுதல், மகிழ்தல் என்று பண்பாட்டு ரீதியாகப் பல்வேறு பொருண்மைகளைப்  பொங்கல் விழா குறிப்பதாகவும்  கூறியுள்ளார். 

ஏறு தழுவுதல் என்பது மாடுகளும் மனிதர்களும் தழுவிக்கொள்ளும் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்கு என்று உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாடு தழுவுதல் சடங்கு நிகழாவிட்டால் வானம் பொய்த்து, கடும் பஞ்சம் ஏற்படும் என்ற உழு குடியினரின் நம்பிக்கையை எடுத்துரைத்திருக்கிறார்.

இதன் மூலம்  தமிழ் நிலத்தில் கொண்டாடும் விழாக்கள் எல்லாமே உழவோடும், உழவர்களோடும்  பின்னிப் பிணைந்து இருப்பதனை அறிய முடிகிறது. 

மேற்கண்டவாறு, மரபுவழி வேளாண் குடியினரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, நிலத்தோடும் நீரோடும் வாழ்ந்த உழவியல் தொழில்நுட்பம், உழு கருவிகள் பயன்பாடு போன்றவை வியக்கும் வகையில் உள்ளன. நீர்ச்சடங்கு, உழவுச் சடங்கு,  நடவுச் சடங்கு, அறுவடைக் சடங்கு போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் உழவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டிருப்பதனை மறுக்க இயலாத வரலாற்று ஆவணங்கள் மூலம் வலுப்படுத்தியுள்ளார். 

இந்த நெல்லின் மக்கள் வழிபடக்கூடிய தெய்வமாகிய வேந்தன் (இந்திரன்) வழிபாட்டு மரபு பற்றி "வேந்தன் மேயத் தீம்புனல் உலகம் "என்று தொல்காப்பியர் அடையாளப்படுத்துகிறார். 

விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரி. மண்ணுலக வேந்தர்கள் மக்களுக்கு அதிகாரி என்று வேந்தர் வழிபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேந்தன் என்பது மருத நிலத்தையும், வேளாண் மக்களையும் ஆள்பவனே வேய்ந்தன் (வேந்தன்) என்கிறார். 

சிந்து - சிந்திரன் என்பதே இந்திரனாகத்  திரிந்து இருப்பதாகவும், சிந்துதல் என்பது மழைப் பொழிவின் சிதறலையும், தெளித்தல், ஒழுகுதல் என்ற பொருளைத் தருவதாலும்,

சிந்து என்ற சொல்லுக்கு நீர் என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுவதாலும், மருதநிலத்தின் வேளாண்மைக்கான நீரையே இந்திரன் என வேளாண் மக்கள் வழிபட்டிருப்பதாகவும், அவ்வகையில், மருதநிலத்தின் வழிபடு தெய்வமாக இந்திரனே இருந்திருக்கிறது எனவும், அத்தகைய இந்திர வழிபாடே வேந்தன் வழிபாடு எனவும் உறுதிப்பட நிறுவியிருக்கிறார் நூலாசிரியர். 

இந்திரனை வேந்தன் என்ற பொருளில் திருவள்ளுவரும், இந்திரன் மழைத் தெய்வமாதலாலே வேந்தன் ஆனதற்குக் காரணம் என்ற கா.சு.பிள்ளை அவர்களின் கூற்றுக்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

மருதநிலத் தெய்வமான வேந்தனும் இந்திரனும் ஒன்றுதான்; அது தமிழர்  தெய்வமே என்கிறார் பி.டி. சீனிவாச ஐயங்கார். 

ஆரியர் வணங்கிய இந்திரன் இடி, மழை, மின்னல் தெய்வமாகும். இது, போர்க்கள வெற்றிக்கு உதவுவதாகவும், சோம பானத்தையும், விலங்கின் இறைச்சியையும் உண்பவராகவும் ஆரிய வழிபாட்டு மரபில் குறிக்கப்படுகிறது. ஆனால்,

தமிழர்கள் வணங்கிய இந்திரனோ  மழையின் பொருட்டு மட்டுமே வணங்கப்பட்டவர் என்று வேறுபடுத்திக் காட்டுவதோடு, இந்திரன் வழிபாட்டு மரபே பிற்காலத்தில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபாடாகப் பரிணமித்திருக்கிறது எனவும் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். 

இருக்கு வேதத்தில், இந்திரனுக்கு அதிகமான பாடல்கள் புனையப்பட்டுள்ள நிலையில், தமிழ் இலக்கியங்களில் ஏன்  பாடப் பெறவில்லை? 

வடக்கே இந்திரனைத் தெய்வமாக வழிபடும் மரபு அனைவருக்கும் ஆனதாக இருக்கும்போது, தமிழகத்தில் மருத நில மக்கள் மட்டும் வழிபடுவதற்கான காரணம் என்ன? 

ஆரிய வைதீக  மரபில் வேளாண்மையைப் பாவமான தொழிலாகக் காட்சிப்படுத்துகின்ற போது, தமிழர்கள் மட்டும் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்ப்பது  ஏன்? 

தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் நீரோடு தொடர்புடையது. ஆரிய வைதீக மரபினரின் பண்பாட்டு நடத்தைகள் நீருக்கு எதிரான நெருப்போடு தொடர்புடையது  ஏன்? என்பன போன்ற வினாக்கள் எழுப்பி,  ஆரியர்களின் இந்திரத் தெய்வம் வேறு; தமிழர்களின் இந்திரத் தெய்வம் வேறு எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது இந்நூல். 

"மண்ணகம் அருள வானகம் வியப்ப... விண்ணவர் தலைவனை விழுநீராட்டி" என்று, மழைத் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும்  சிலப்பதிகாரம், இந்திர விழவு எனப் பதிகத்திலும், விண்ணவர் கோமான் விழவு   என இந்திர விழவூரெடுத்த காதையிலும், மழையைக் குறிக்கும் இந்திரனே வேந்தன் எனும் பொருளில் வருவதாகப் பதிவு  செய்திருப்பதன் மூலம், இந்திரனும் வேந்தனும் வேறு வேறல்ல என்ற மெய்மையையும் நூலின் வழியே அறிய முடிகிறது. 

வானவர் கோமான், கரியவன், வலாரி, மருத்துவன், அரி, ஆகண்டலன், ஆயிரங் கண்ணோன் போன்ற இந்திரனின் பல்வேறு பெயர்களும் மழையோடு தொடர்புடையதாகவே இருப்பது மேலும் சான்றாகிறது. 

மேலும், இந்திரனைப் போகி என்ற பெயரில் அழைப்பது போலவே, வேளாண் உற்பத்தியைப் போகம் என்ற சொல்லால் அழைக்கும் மரபு உண்டு என்கிறார். வேளாண் விளைச்சல் தரும் தெய்வமான போகியை (இந்திரனை)  அறுவடைக்  காலத்திலும் மறவாது வழிபடும் சடங்கியல் மரபு என்பதாலேயே  போகிக்குக் காப்பு கட்டி வருகின்றனர் உழவர்கள். இவ்வாறு, போகியன்று காப்புக்கட்டுதலில் பயன்படுத்தப்படும் கூழைப்பூ, கண்ணுப் பூளை - கண்+பூ+இலை  (கண்ணுப் பூவிலை) என்ற பூவானது, ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருப்பதாலேயே போகி ( இந்திர விழா) அன்று காப்பு  கட்டப்படும் சடங்கியல் மரபு நிகழ்கிறது என்கிறார். 

மேலும்,  மழைக்காலத்தில் மட்டுமே  பூக்கக் கூடிய  இந்தப் பூவானது, வெள்ளை நிறத்திலான மழைத்துளிகள் கோத்தது போலவும், நீர் வழிவது  போலவுமான தோற்றத்திலான கூழைப் பூவினைக் காப்பு கட்டுவதற்கு உழவர்கள் தேர்வு செய்திருப்பது  வியப்பினைத் தருவதாக  உணர்ந்திருக்கிறார். 

வேளாண் மரபினர்களுக்கும் ஆரியர்களுக்குமான  பகையும் முரணும் வேளாண் நிலத்தை மையமிட்டு  நடந்த  தொழிற்பகையே காரணம் என்று அறியலாம்.

ஆரியர்கள் வாழ்கின்ற பகுதி குளிர்ப் பகுதி என்பதால்  தீ மூட்டுதல் (யாகம் வளர்த்தல்) நிகழ்வும், தமிழர்கள் வாழ்கின்ற பகுதி வெப்ப மண்டலப் பகுதி என்பதால்  நீராடல்  நிகழ்வும் நடைபெறுவதாகத் தொ. பரமசிவம் கூறுகிறார். மேலும், தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும்   பல்வேறு நிலைகளில் பண்பாட்டியல் ரீதியாகவே முற்றிலும் முரணாக இருக்கின்றது. இந்நிலையில், தமிழர் மரபில் இந்திரன் வேளாண் தெய்வமாகவும் - மழைத் தெய்வமாகவும் - நீர்த் தெய்வமாகவும் அடையாளப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்து தமிழ்  இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

வேளாண் மாந்தர்களின் மழைப்பொழிவைக் கணிக்கும்  திறன், நீர் சேமிப்பு, நீர்ச் சுழற்சி, நீரியல் சொற்கள் காட்டும் நீராதார அமைப்புகளின் பல்வேறு வடிவங்கள், நீர் மேலாண்மையில் உழவர்களின் பேரறிவு, முறைப்பானை  முறையில் நீர்ப் பங்கீடு, குமிழித்தூம்பு மூலமாக நீர் நிலையைப் பாதுகாக்கும் மடைச் குடும்பர்களின் வரலாறு என, உழவர் சமூகத்தின் நீரியல் சார்ந்த  நுட்பங்களும், வேளாண் சார்ந்த அனைத்துத் தரவுகளும் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

நீர் மேலாண்மைப் பராமரிப்பு என்பது நீராணிக்கன்,  குடும்பர்கள், ஊர்ப் பொதுமக்களின் பொறுப்பில் இருந்தவரை நீர்நிலைகள் பாதுகாப்பாக இருந்ததையும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் சென்றபிறகே நீர்நிலைகள் முற்றிலுமாக அனாதையாக்கப்பட்ட நெடிய வரலாற்றை படிக்கின்ற போது, பூவுலகின் நலனுக்கு எதிரானவர்களாக மானுட சமூகம் நகர்ந்துகொண்டிருக்கும் வேதனையையும் நூல் விளக்குகிறது. 

உழுகுடியின் வாழ்வும், தொழிலும், கொடைத் தன்மையும் நிலத்தோடும் நீரோடும்  மட்டுமே பிணைக்கப்பட்டு இருப்பதனை வரலாற்று ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. 

வேளாண்  மரபினரின் பெயர் அடையாளம் என்பது உயர்வு தாழ்வு  காட்டுவதற்கு இல்லை. உயர்சாதிப் பகட்டுக்கு  உரியதும் இல்லை. இதில் வேளாண் சமுகத்தின் சுயமரியாதை, சமூக நீதிக்கான வேட்கை மட்டுமே நிரம்பியது என்ற எதார்த்தத்தை இந்நூல் முன்வைத்திருக்கிறது. 

உழவர் குடியினரில் பள்ளர் என்பது பொது வழக்குச் சொல்,  மள்ளர் என்பது இலக்கிய வழக்குச் சொல், வேளாளர் என்பது தொழில் பெயர்ச்சொல், தேவேந்திரகுல வேளாளர் என்பது பண்பாட்டு அடையாள அரசியல் சொல் எனப் பலவாறும் விளக்கப்படுத்தி, அறத்தின் வழி நின்று வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், வேளாளர் என்பதற்கான அனைத்துத் தகுதிகளும் உரிமைகளும் வேளாண்மைத் தொழில் புரியும் உழவுக்குடிகள் யாவருக்கும் பொருந்தும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்நூல். 

அதோடு, வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பது, பதினெண் குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுகளே என்கிறார். அந்த வகையில், இன்று வேளாண்மை செய்து கொண்டிருக்கின்ற பள்ளர் (மள்ளர்), வன்னியர், கவுண்டர், வெள்ளாளர், முத்தரையர், அகமுடையார், மறவர், கோனார், பறையர் உள்ளிட்ட  பல்வேறு தமிழ்க் குடிகள்  ஒருங்கிணைந்து வேளாண் வளத்தைப் பெருக்குவதற்கு ஒன்றுபட வேண்டும்  என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறது நூல். 

தமிழ்த் தேசிய எழுத்தாளர் மகாராசன் அவர்கள், உழவர் சமூகத்தின்  பண்பாட்டு வேர்களை நுட்பமாகவும், ஆழமாகவும், தெளிவாகவும், செறிவாகவும் அறவழியில்  நின்று, வேளாண் மரபின் தமிழ் அடையாளம் என்ற நூலின் வழியே  உழு குடியின் வரலாற்றை நேர் செய்திருக்கிறார். 

மானுடத்தின் முதல் இனமான தமிழர்கள் எல்லோருமே, குறிஞ்சியில் தோன்றிய குறவருக்கும், முல்லையில் கிளைத்த இடையருக்கும், மருதத்தில் பல்கிப் பெருகிய பள்ளருக்கும் மரபு வழியில் தோன்றியவர்களே  என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்  கூற்றினை, நூலைப் படித்து  முடிக்கின்றபோது உணர முடிகிறது. 

அந்த வகையில், தமிழர்களின் வரலாற்றைத் தமிழ்க்குடியின்  தோற்றத்திலிருந்தே தேட வேண்டும். அதைவிட்டு விட்டு, நிகழ்காலத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை மட்டுமே மனதில் வைத்து வரலாற்றை நிருணயம் செய்வது என்பது, தமிழ்த் தேசிய  இனத்தின் மீட்சிக்கு உதவாது என்ற கருத்தியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள  முடிகிறது.

இன்றைய சூழலில், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களையும், வேர்களில் தழைத்த இலைகளையும், கிளைகளையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தேடித்தேடி அதன் வரலாற்றுப் பெருமிதங்களை  மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக மட்டுமே தமிழ்ப் பேரினத்தின்  விடியலுக்கான வாசல் திறக்கப்படும்.  மேலும்,  இதுபோன்ற தொல் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு மானிடவியல் நூல்கள் பல்கிப் பெருக வேண்டும். இவை தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே   தமிழ்ச் சமூகத்தின் உட்சாதிப் பகை மறையும்; தமிழர் நலன் சார்ந்த வாழ்வியல் பெருகும்; நலம் பெறும்; வளம் பெறும்.! 

இவ்வாறாக, பல்வேறு வரலாற்றுத் தகவல்களின் மூலமாக வேளாண்  மரபினரின் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணமாகவும் அறிவாயுதமாகவும் திகழ்கிறது.

நூலாசிரியர் மகாராசன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்; பாராட்டுகள். 

*

கட்டுரையாளர்:

செங்காந்தள் வீரராகவன்,

கல்விச் செயல்பாட்டாளர், தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதாளர், 

நாமக்கல்.

*

நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்

வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.

பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.